Monday, March 18, 2013

படம் பேரும் பரதேசி! பாலாவும் ஒரு பரதேசி!


 பாலாவின் பரதேசி படம் மனதில் சில வாக்கியங்களை உண்டாக்கியது. அவைகளை கோர்வையாக்க நான் முயற்சிக்கவில்லை. அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். இதோ அந்த வாக்கியங்கள்!

  இரண்டு தோல்விப் படங்களுக்குப் பின்னால் வரும் படம் என்பதால் பாலாவுக்கு தன் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடியிருக்கிறது! அதனால் படம் முழுவதும் உணர்வுகளை முறுக்குப் பிலிவது போல் பிலிந்திருக்கிறார். பார்வையாளர்களுக்கு என்னவோ மலச்சிக்கல்தான் ஏற்படுகிறது!

 பாலாவின் எல்லா திரைப்படங்களைப் போலவே கதாநாயகன் மனிதனா அல்லது விலங்கா என்ற குழப்பம் இந்தப் படத்திலும் இருக்கிறது! பல சமயங்களில் மனிதன் போல் இருக்கிறான். முக்கியமான தருணங்களில் பிதாமகன் விக்ரம் போல உருமுகிறான்.

 பாலாவின் எல்லாத் திரைப்படங்களையும் போல கதாநாயகி லூஸாக இருக்கிறாள்!

 பீரியட் படம் என்றால் ஏன் எல்லோரையும் அழுக்காகக் காட்ட வேண்டும் என்று தெரியவில்லை! தமிழர்கள் அழுக்காக இருந்தார்கள் என்று ஏதும் வரலாற்றுக் குறிப்பு இருக்கிறதா என்ன?

 குண்டி, குசு, புடுக்கு போன்ற வார்த்தைகளுக்கான கமெர்சியல் வேல்யூ பாலாவிற்கு நன்கு தெரிந்திருக்கிறது. அவை படம் முழுதும் நாறும்படி தூவப்பட்டிருக்கிறது.

கதாநாயகன் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவனா அல்லது ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவனா என்பது பற்றிய தெளிவு இல்லை! தாழ்த்தப்பட்டவன் என்றால் ஊர் நடுவில் வீடு இருக்காது. ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவன் என்றால் அவன் காதலித்ததற்காக பெண்ணின் அம்மா அவ்வளவு கோபப் படத்தேவையில்லை !

யதார்த்தத்தைப் பதிவு செய்வது என்பது அக்குள் ரோமத்தை சவரம் செய்யாமல் காட்டுவது மட்டுமல்ல! சமூகத்தின் ஜாதி அடுக்கை பதிவு செய்வது ! அப்படி காட்டாமல் தவிர்ப்பது தந்திரம் செய்வது! சமூகத்திற்கு துரோகம் செய்வது! (இந்த தந்திரத்தால்தான் இது உலக சினிமாவாகிறது என்று விமர்சன மேதைகள் நம்புகிறார்களா?)

தலித்துகளை அநாவசியமாக ஜாதிப்பெயரை சொல்லித் திட்டுவது மட்டுமல்ல, அவசியமான தருணங்களில் அவர்களின் ஜாதிப்பெயரை சொல்லாமல் விடுவதும் சமூகக் குற்றமே!

பெரியப்பா என்பவர் இறந்து போகிறார். ஹீரோவுக்கு அது தெரிய வேண்டாம்; அவனுக்குத் தெரிந்தால் ஊருக்கே தெரிந்து விடும் என்று சொல்கிறார்கள். ஆனால் அவனைத் தவிர ஊருக்கே தெரிந்து தான் இருக்கிறது.

 ஹீரோவை பந்தியில் உட்கார வைத்து விட்டு ஏன் எல்லோரும் சாப்பாடு போடாமல் கடந்து போகிறார்கள். ஹீரோயின் விளையாட்டா அது அல்லது ஊர்க்காரர்கள் அவனை அலட்சியப் படுத்துகிறார்களா ? குழப்பமான வக்கிரமான காட்சி அது!

அந்த மக்கள் ஊரில் வசதியாக, சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள்! அந்த ஊரில் பஞ்சம் இருக்கிறது என்றோ வறுமை இருக்கிறது என்றோ ஒரு பதிவும் இல்லை. அவர்கள் ஏன் அவ்வளவு கூட்டமாக ஊரை விட்டுக் கிளம்பிச் செல்ல வேண்டும் என்று தெரியவில்லை!

பஞ்சம், வறுமை என்று காட்டிவிட்டால் கதையில் ஒரு சோகம் வந்து விடும்! அப்புறம் ஃபர்ஸ்ட் ஆஃப் ஜாலி! செகன்ட் ஆஃப் சீரியஸ் என்கிற பாலாவின் ஃபார்முலா மிஸ் ஆகி விடும்! வரலாறு முக்கியமா? ஃபார்முலா முக்கியமா?

போகும் வழியில் ஒருவன் குற்றுயிரும் குலையுயிருமாக கீழே விழுகிறான். அவனை, அப்படியே போட்டு விட்டு வாருங்கள் என்று கங்கானி சொல்கிறான்! எல்லோரும் அப்படியே செய்கிறார்கள்! அவள் மனைவி உட்பட! ஒரு துளி எதிர்ப்பு இல்லை! தமிழகத்தில் இப்படி மானம், ரோசம், வீரம், மனிதாபிமானம், தர்மமற்ற மக்கள் கூட்டம் எந்த கால கட்டத்தில் இருந்தது ?

தேயிலைத் தோட்ட வெள்ளைக்காரன், எம்ஜிஆர் காலத்து வில்லன் போல் இருக்கிறான். குதிரையில் இருந்து வந்து இறங்கியதும் ஒரு பெண்ணின் புட்டத்தைப் பிடித்துக் கொஞ்சுகிறான். உலக சினிமாவில் கையாளப்படுகிற சட்டிலிட்டி இது தானா?

 க்ளைமாக்ஸிற்கு முந்தைய ரீலில் குத்துப்பாட்டு வைக்கிற ஈனப்புத்தி இந்திய, உலக சினிமா மேதைகள் யாரிடம் இருந்தது என்று இங்கிருக்கிற உலக சினிமா விமர்சன மேதைகள் தெளிவு படுத்த வேண்டும்.

 இந்தப் படம் தலித்துகளுக்கு எதிரான படம். ஒரு ஆர்வக் கோளாரான , அமெச்சூர் கிறிஸ்த்தவராக, தலித் டாக்டராக வருகிறவர் அம்பேத்கார் டிரெஸ் போட்டு குத்து டான்ஸ் ஆடுகிறார். இது பாலாவின் தேவர் ஜாதி வக்கிரத்தையே காட்டுகிறது!

 மேல்ஜாதி இந்துக்களுக்கு, கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடித்திருப்பது தற்செயலானதா என்பது புரியவில்லை!

 அண்ணா இறந்த சமயத்தில் நடந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில், ஜெயகாந்தன் பேசும் போது , ‘அண்ணாவை அறிஞர் என்று மூடர்களே சொல்வார்கள், பேரறிஞர் என்று பெருமூடர்களே சொல்வார்கள்’ என்று பேசியதாக குறிப்பு உண்டு.பாலாவின் இந்தப் படத்தை இந்திய சினிமாவில் முக்கியமான படம் என்று மூடர்களே சொல்வார்கள். உலக சினிமாவில் முக்கியமான சினிமா என்று பெருமூடர்களே சொல்வார்கள்.

 ராமகிருஷ்ணன் இதை உலக சினிமா என்று சொன்னதை யாரும் பொருட்படுத்த வேண்டியதில்லை. ராமகிருஷ்ணன் வெறும் ஜால்ராவாகி சில நூற்றாண்டுகள் ஆகின்றன. கதையும் வசனமும் கைவராத நிலையில் அவர் சினிமாவில் நம்பியிருப்பது அந்த ஒரு இசைக்கருவியைத்தான்.

ஒரு பிரபல பத்திரிக்கையில் ஆசிரியராக இருக்கிற நபர் இதுவரை எந்தப் படத்திற்கும் கொடுக்காக மதிப்பெண்களை இந்தப் படத்திற்கு கொடுக்க வேண்டும் என்று முயற்சி மேற்கொள்வதாக தகவல்கள் வருகின்றன. கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு இதைக்கூட செய்யாவிட்டால் அப்புறம் பத்திரிக்கை அறம் என்னாவது?

பாலாவுக்கு பெரிய மணி மகுடம் சூட்டத் தயாராகிறவர்கள் ஹாலிவுட் சினிமாவான சின்லர்ஸ் லிஸ்ட், லா அமிஸ்ட்டட், பிளட் டயமன்ட் போன்ற படங்களை ஒரு முறை பார்ப்பது நல்லது!

தத்துவார்த்த பின்புலமோ அரசியல் அறிவோ இல்லாவிட்டால், எவ்வளவுதான் தொழில் நுட்பத்தில் மேன்மை அடைந்திருந்தாலும் , ஒரு இயக்குனர் மொக்கைப் படம்தான் எடுக்க முடியும் என்பதற்கு பரதேசி ஒரு சிறந்த உதாரணம்.

 டாக்டர் சீனிவாசனுக்கு பவர் ஸ்டார் என்று பட்டம் வழங்கிய நிகழ்வில், பவர் ஸ்டாரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இவர் பவர் ஸ்டாராக இருப்பது போதும் என்று நம்புகிற, அப்படி பட்டம் சூட்டுவதை கொண்டாடுகிற , அவரை சிலாகிக்கிற எளிமையான மனம் கொண்டவர்கள் நம் சமூகத்தில் நிறைந்து விட்டார்கள். பாலாவை உலக சினிமா மேதை என்று பலர் சொல்லும் நிகழ்விலும் நாம் பாலாவை குற்றம் சொல்ல முடியாது. நம் சமூகத்தில் எளிமையானவர்கள். நிறைந்து விட்டார்கள்.

 சிலுருக்கு எந்த காரண காரியமும் இல்லாமல் கோத்தா, கொம்மா என்ற வார்த்தை வாயில் வரும். சமீபத்தில் உலக சினிமா, இந்திய சினிமா என்ற வார்த்தையும் அப்படி காரண காரியம் இல்லாமல் சிலர் வாயில் வருகிறது!

படத்தில் அறிவும் இல்லை. அரசியலும் இல்லை. பாலாவின் எல்லாப் படங்களைப் போல இந்தப் படமும் பொட்டைப் படமே!

பாலா விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை படம் எடுக்கிறவர் இல்லை. நான் கடவுள் படத்தில் விளிம்பு நிலை மனிதர்களை வைத்து ஒரு மொட்டையன் தொழில் செய்வான். அவர் தான் பாலா!