Friday, October 23, 2009

மாதவராஜ்- மத்திய தர வர்க்க மார்க்சிய கனவான்

மாதவராஜ் பொதுவில் ஒரு நல்ல மனிதராகத்தான் தெரிகிறார்.


அன்பான அப்பா, பிரியமான தோழர், நேர்மையான யூனியன் தலைவர்.


அவருடைய கதைகளில் மனிதாபிமானம் பூத்துக் குலுங்குகிறது.


ஆனால் ஈழம் என்ற பேச்சு வந்து விட்டால் அவருக்கு முகம் மாறி விடுகிறது. ரத்தம் எதிர் திசையில் ஓடத்துவங்கி விடுகிறது.


அவருடைய கட்டுரையைத் தொட்டு நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு அவர் பின்னூட்டம் எழுதியிருந்தார்.


அந்தப் பின்னூட்டம் இதுதான்.


என்னைப்பற்றி இந்தப் பதிவில், ’என் மனமாற்றத்துக்கு பிரபாகரனின் மரணம் தேவைப்பட்டு இருக்கிறதுஎன்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். வேதனை தருகிற, சீண்டுகிற சொல்லாடல் இது. இப்படிச் சொல்வதில் உங்களுக்கு என்ன திருப்தி என புரியவில்லை.

அடுத்தது பிரபாகரனை மாபெரும் தலைவராக பார்க்கிற மனமாற்றம் ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை. ராஜீவ் காந்தி மரணமும், பிரபாகரனின் மரணமும், வரலாற்றில் எந்த இடத்தில் வைத்து பார்க்கப்படும் என்பதைத்தான் நான் அந்தப் பதிவில் சுட்டிக் காட்டி இருந்தேன். அதைத்தான் சரியோ, தவறோ.... வரலாற்றில் இலங்கை மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பிரபாகரன் ஒரு அடையாளமாகவும், நம்பிக்கையாகவும் இருந்திருக்கிறார் என்பது உண்மை.என நான் சுட்டிக் காட்டியிருந்தேன். அதாவது ராஜீவ் காந்திக்கு வரலாற்றில் அப்படியொரு இடமில்லை என்பதைத்தான் சொல்லி இருந்தேன்.இதற்கு விளக்கமளித்து எனது அடுத்த பதிவில்


//
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நான் அறிந்தவரையில், பிரபாகரனின் மீது சில அழுத்தமான விமர்சனங்கள் உண்டு. அதில் மிக முக்கியமானது, மக்களை இராணுவ ரீதியாக திரட்டிய அவர், அரசியல் ரீதியாக திரட்டவில்லை என்பது. சயனைடு குப்பிகளைக் கொடுத்த இயக்கம், உரிமைகளுக்காக கிளர்ந்தெழ மக்களுக்கு அரசியல் ஞானம் அளித்திருக்க வேண்டும். மக்கள், தெருக்களில் நின்று பீரங்கிகளையும், இராணுவத்தையும் எதிர்க்கிற வேகத்தை, அரசியல் கருத்துக்களே உருவாக்க முடியும். மக்களுக்கு முன்னால் எந்த ஆதிக்க சக்திகளும் செல்லுபடியாகாது. அப்படித்தான் வியட்நாமில் மக்களிடம் தோற்றது அமெரிக்கா. நேபாளத்தில் நடப்பதும் இதுதான். இந்த இடத்தில் பெரும் ஊனம் உண்டு. (இதை நான் என்னுடைய ராஜாவுக்கு செக்என்னும் சொற்சித்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தேன்.)// என்றும் சொல்லி இருந்தேன். அதையும் சேர்த்து நான் சொன்ன அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.


மேற்கண்ட பதிவில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மக்களை இராணுவ ரீதியாகத் திரட்டினாரே தவிர அரசியல் ரீதியாக திரட்டவில்லை என்கிறார் மாதவராஜ்


அரசியல் ரீதியாகத் திரட்டப்பட்ட மக்களுக்கு உதாரணமாக வியட்நாமைச் சொல்கிறார்.


இது போன்ற ஒரு குற்றச்சாட்டு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படாமலேயே சமீப காலமாக அரசியல் அரங்கில் உலா வந்து கொண்டிருக்கிறது.

வியட்நாமில் தோழர் ஹோசிமின் அமைத்த விடுதலை இயக்கத்தின் பெயர் ‘வியட்நாம் மக்கள் படை.


அந்தப் பெயரில் மக்கள் என்ற வார்த்தை வருகிறது. அவ்வளவே.

அதிலிருந்து அவர்தான் மக்களை அரசியல் ரீதியாகத் திரட்டி போராடினார் என்று புரிந்து கொள்ளக் கூடாது. அப்படிப் புரிந்து கொள்வது விடுதலைப்புலிகள் புலிகளை ஒன்று திரட்டி போராடினார்கள் என்று எளிமையாகப் புரிந்து கொள்வது போலாகும்.


வியட்நாமில் ‘வியட்நாம் மக்கள் படை 2860 டாங்க்களையும், 24,000 அட்லரிகளையும் 12வகையான மிஸ்ஸைல்களையும் 230 ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தினார்கள் என்று புத்தகங்களில் தகவல் இருக்கிறது.


வெறும் அரசியல் ரீதியாக திரட்டப் பட்ட மக்கள் எப்படி இவ்வளவு கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்கும் வல்லமை பெற்றார்கள்?


ராணுவ ரீதியாகவும் திரட்டப்பட்ட மக்கள் தான் வியட்நாம் மக்கள் படை, அரசியல் ரீதியாகவும் திரட்டப்பட்ட மக்கள் தான் விடுதலைப் புலிகள்.


அரசியல் ரீதியாக ஒருவரைத் தயார்படுத்தாமல் ஒரு கட்சிக் கொடியைக் கூடத் தூக்க வைக்க முடியாது மாதவராஜ்.


எப்படி துப்பாக்கியைத் தூக்க வைக்க முடியும். கழுத்தில் சயனைடு குப்பியை மாட்டிக்கொள்ளச் செய்ய முடியும்.


இந்தியராணுவமும் இலங்கை ராணுவமும் தருவதைப் போல விடுதலைப் புலிகளுக்கு மாதச் சம்பளம் கிடையாது.டிஏ,டிஏ, கிடையாது,பென்சன் ,கிராஜிவட்டி கிடையாது. இறந்தால் இன்ஷீரன்ஸ் கிடையாது. போரில் கை கால்கள் சிதைந்தால் முறையான மருத்துவ வசதி கூட கிடையாது. இவ்வளவையும் புரிந்து கொண்டு சாதாரண மக்கள் விடுதலைப் புலிகளானார்கள் என்றால் அரசியல் ஞானம் இல்லாமலா விடுதலைப் புலிகளானார்கள்.


வியட்நாமை உதாரணம் சொல்கிறீர்கள்.


விடுதலைப் புலிகள் வியட்நாமை முன்மாதிரியாகவும் கொண்டிருந்தார்கள். அதைத் தாண்டியும் போனார்கள்.


நீங்களும் நானும் வியட்நாம் வரலாறைப் படித்தது நம்முடைய பொது அறிவை வளர்த்துக்கொள்வதற்காக.அவ்வளவே.ஏதாவது ஒரு நாள் இரவு அரைத்தூக்கத்தில் அந்தப் புத்தகத்தை வாசித்திருப்போம்.


விடுதலைப் புலிகளுக்கு அது பாடம்.


வியட்நாம் வரலாற்றை மட்டுமல்ல. சீனப்புரட்சி, ரஷ்யப் புரட்சி, க்யூபப் புரட்சி, இந்திய விடுதலைப் போராட்டம், உலகின் பல்வேறு முனைகளிலும் நடந்த போர்கள் இவைகளைக் கரைத்துக் குடித்தவர்கள் விடுதலைப் புலிகள். அதனால் தான் உலகம் வியக்கும் பல சாகசங்களை அவர்கள் செய்தார்கள்.


இருபது ஆண்டுகால பொருளாதாரத் தடையை மக்களைக் கொண்டு அவர்களால் சமாளிக்க முடிந்தது.


மூன்று லட்சம் தமிழர்களை ஏன் ராஜபக்ஷே முள்வேளிக்குள் அடைத்து வைக்கிறார்?


மூன்று லட்சம் மக்களும் அரசியல் ரீதியாக திரண்டிருந்த மக்கள் என்பதால் தான்.


யாழ்ப்பான மக்கள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ கண்காணிப்பிலேயே இருக்கிறார்களே அது ஏன்?


அவர்கள் எல்லோரும் அரசியல் ரீதியாக திரண்டிருந்த மக்கள்;திரளக் காத்திருக்கிற மக்கள்.


ஒரு சமூகம் அரசியல் ரீதியாக பண்படாமல் இருந்தால் ஒரு கொரில்லா இயக்கம் ஒரு நாள் கூட அங்கே உயிர்த்திருக்க முடியாது.


கொரில்லா இயக்கத்தின் மிகப்பெரிய பாதுகாவலர்களே அங்கு வாழும் அரசியல் படுத்தப் பட்ட மக்கள் தான். ஏனென்றால் கொரில்லா இயக்கங்களால் உண்டாகும் எதிர்வினையை அவர்களே தாங்குகிறார்கள்.

இன விடுதலை, தேச விடுதலை, புரட்சி என இவற்றில் எந்த ஒன்றையும் உடைத்து எறிந்து விடும் தீவிரத்தோடு இன்று சர்வதேச நாடுகள் இருக்கின்றன. அவைகளை மீறி ஒரு இன விடுதலையை சாத்தியப் படுத்துவற்கான பல்வேறு சோதனைகளை முயற்சித்தவர்களாக இன்று விடுதலைப் புலிகளே இருக்கிறார்கள்.


சயனைடு குப்பியைப் பற்றி சாதாரணமாக சொன்னீர்கள்.


சிபிஎம்மில் யாரையாவது ஒருவரை ஒரு முறை சயனைடு குப்பியை முயற்ச்சித்துப் பார்க்க தயார் செய்து பாருங்கள்.


அப்பொழுது தெரியும் அதற்குப்பின்னால் எவ்வளவு அரசியல் இருக்கிறது என்று.


அப்பொழுது தெரியும் நாமெல்லாம் எவ்வளவு பெரிய அரசியல் கோழைகள் என்று.


ராஜிவ் காந்தியின் கொலையை விசாரித்த கார்த்திக்கேயன் இதைச் சொன்னார்.


ராஜிவ் காந்தியின் மரணத்திற்கு முன்னால் தமிழகத்திலிருந்து 300 இளைஞர்கள் இலங்கைக்குச் சென்று விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்று வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் விடுதலைப்புலிகளின் வழக்கப் படி சயனைடு குப்பி கொடுக்கப் பட்டிருக்கிறது.


ராஜிவ்காந்தியின் மரணத்திற்குப் பின்னால் அவர்களில் பலர் போலிஸிடம் பிடிபட்டிருக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட சயனைடு குப்பியை பயன் படுத்த வில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் பிடிபட்ட போது அவர்களில் ஒருவர் கூட சயனைடு குப்பியை பயன்படுத்தாமல் இருந்த தில்லை.

நமக்குப் போர் தெரியாது;புயல் தெரியாது; பாவம் குழந்தைகளைப் போல் வளர்க்கப் பட்டு விட்டோம் என்று கண்ணதாசன் சொல்வது இதைத்தான்.

நான் மேற்சொன்ன ஒரு தகவலில் இரண்டு உண்மைகள் புரியும். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் பயிற்சி எடுப்பதால் ஒருவர் தீவிர அரசியல் மன நிலைக்கு வந்து விடுவதில்லை. இலங்கையில் தமிழர்களாகப் பிறந்து சிங்களப் பேரினவாதத்திற்கு ஆட்பட்டோர்கள் தலைவர் பிரபாகரன் இல்லாவிட்டாலும் தீவிர மனநிலையை இழப்பது இல்லை.


உங்களாலும் என்னாலும் சயனைடு தின்று இறப்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது .


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் யாரையும் ஷூ பாலிஸ் செய்வது போல தீவிரவாதத்தை நோக்கி பாலிஷ் செய்வது இல்லை.

அங்கே நிலவுகிற சிங்களப் பேரினவாதம் அந்த மக்களை தீவிர அரசியல் மன நிலைக்கு உள்ளாக்குகிறது. அந்த தீவிர அரசியல் மனநிலை உள்ளவர்களுக்கு பிரபாகரன் தலைவராக இருக்கிறார்.


சயனைடு குப்பிகளைக் கொடுத்த இயக்கம், உரிமைகளுக்காக கிளர்ந்தெழ மக்களுக்கு அரசியல் ஞானம் அளித்திருக்க வேண்டும். மக்கள், தெருக்களில் நின்று பீரங்கிகளையும், இராணுவத்தையும் எதிர்க்கிற வேகத்தை, அரசியல் கருத்துக்களே உருவாக்க முடியும்- மாதவராஜ்


அளிப்பதற்கும் பெறுவதற்கும் அரசியல் ஞானம் என்ன பிட்சையா? அது அளிக்கப் படுவதும் பெறப்படுவதுமான வஸ்து இல்லை.அது அளிக்கப் படுவதும் பெறப்படுவதும் என்ற நம்பிக்கையில் இருப்பதால்தான் இங்கிருங்கிற சிபிஎம் கார ர்களுக்கு யாராலும் அது அளிக்கப் படுவதும் இல்லை. யாராலும் பெறுப்படுவதும் இல்லை.


எவ்வளவு சாதாரணமாக சொல்லி விட்டீர்கள் ஈழ மக்கள் அரசியல் ஞானம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று.


இந்த நூற்றாண்டில் அவர்களுக்கு இணையாக யாரும் பீரங்கிகளையும் ராணுவத்தையும் எதிர்த்து நின்றதில்லை.


இதோ முள்ளிவாய்க்காலின் கடைசி நேரச்சித்தரிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வரத்துவங்கி இருக்கின்றன. நேற்று ஒரு கடிதம் வந்தது.

அந்தக் கடிதத்தின் முதல் கொஞ்சம் வரிகள்,


மது தாயகநிலத்தை அழித்து, பின் அபகரிக்க உலக நாடுகளின் உதவியோடு சிங்களப் பேரினவாதம் மேற்கொண்ட இரத்தக் குளியல் நடவடிக்கையின் (Operation BloodBath) இறுதி நாட்கள் எம்மால் நினைத்துப் பார்க்க முடியாதவை. அழுவதற்கும் அவகாசமின்றி அந்தரித்த மக்கள் திரள். அருகில், கண்முன்னே வெடித்துச்சிதறும் ஷெல்களால் துடித்துச் சாகும் உயிர்களின் கடைசிக் கதறல்கள்.

நடந்து விட்டதை அறியும் ஒருகண அவகாசம் கூட இல்லாமல் பிணங்களாய் விழுந்தவரின் உருக்குலைந்த உடல்கள். கை, கால்கள் துண்டிக்கப்பட்டு உதவிகேட்கும் அவலக் குரல்கள்.

பங்கருக்குள் பதுங்கியபடியே பட்டினியில் மயங்கி உயிர்பிரியப் போனவரின் அழுகிய உடல்களது வாடை. அகப்பட்டதை எடுத்துக் கொண்டு உயிர்காக்க அங்குமிங்கும் ஓடிய இலட்சக்கணக்கான மக்கள் திரளுக்குள் மிதிபட்டு இறந்த பிஞ்சுக் குழந்தைகள், கை கொடுக்க எவருமின்றி ஆங்காங்கே மல்லாக்காய் கிடந்த முதியோர்கள். ஆம், உலகின் மன சாட்சிக் கதவுகள் மூடிக்கிடக்க முள்ளிவாய்க் காலில் இன அழித்தல் கோரத்தாண்டவம் அரங்கேறியது.

இப்பேரழிவுக்கும் நடுவில் கடைசிவரை களமாடியே வீரமரணம் அடைவோம் என உறுமும் துப்பாக்கிகளுடன் எமது புலிவீரர் அணிகள். மே 12 முதல் சீலனின் மரபை எம்வீரர்கள் சுவீகரித்தனர்.

இவர்களா உங்கள் பார்வையில் அரசியல் ஞானம் இல்லாதவர்கள்?


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டுமல்ல.


முள்ளிவாய்க்காலின் கடைசி நாளை சந்தித்த அனைவருமே வரலாற்று நாயகர்கள் தான்.


இவர்களுக்கு முன்னால் நாமெல்லாம் யார் மாதவராஜ்?


மாத சம்பளத்திற்கு ஏதாவது பங்கம் வரும் என்றால் கட்சி, கொடி, கோஷம், எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு ஓடோடிப் போய் குடும்பம் குழந்தை என்று அடங்கி ஓடுங்கி விடுவோம்.


புரட்சியை சிபிஎம் நடத்தும் என்ற நம்பிக்கையிலா நாமெல்லாம் சிபிஎம்மில் இருக்கிறோம்.


கண்டிப்பாக நடத்தாது என்ற தைரியத்திலேயே சிபிஎம்மில் இருக்கிறோம்.


வாழ்க்கையில் சிபிஎம்மோடு தற்செயலாக தொடர்பில் இருக்கிற சின்ன காரணத்திற்காக இந்த நூற்றாண்டின் மகத்தான மனிதர்களை அரசியல் ஞானம் பெறாதவர்கள் என்று சொல்லி கொச்சைப் படுத்தாதீர்கள்

Tuesday, October 20, 2009

மீண்டும் தோழர் தமிழ்செல்வன் அவர்களுக்கு,

(நான் ‘ஆதவன் தீட்சன்யா என்னும் ஆள்காட்டி’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதற்கு தோழர் தமிழ்செல்வன் ஒரு பதில் எழுதியிருந்தார். அதற்கு நான் ‘தோழர் தமிழ்செல்வன் அவர்களுக்கு’ என்ற தலைப்பில் ஒரு பதில் எழுதியிருந்தேன். அதற்கும் அவர் ஒரு பதில் எழுதியிருந்தார். அந்த பதிலுக்கான பதில்தான் இது. புதியவர்கள் முந்தைய இரண்டு கட்டுரைகளையும் வாசித்து விட்டு வரவும்- நன்றி)

இதோ தோழர் தமிழ்செல்வனின் பதில்

மிக்க நன்றி தோழர்.தங்களின் அறிவுரைப்படி நடந்து கொள்ள கட்சியைக் கேட்டுக்கொள்கிறேன்.நிற்க. புலிகளை விமர்சித்து எழுதுவதே விஷ வார்த்தை என்றால் அது எப்படி சரியான பார்வை?காங்கிரஸ் தலவரைக் கொன்றதால் மட்டும்தான் காங்கிரஸ் ஈழப்போராட்டத்தை எதிர்க்கிறது என்று கூறுவது அரசியலற்ற பார்வை அல்லவா?அப்படியானால் முன்னர் புலிகளுக்கு ஆயுதப்பயிர்சி அளித்து ஆயுதங்களும் அளித்து பெரும் தொகையான பணமும் கொடுத்ததே இதே காங்கிரஸ் அர்சு அதை என்ன என்பது தோழர்? எல்லாமே அவர்களின் வர்க்க அரசியல் நிலைபாட்டிலிருந்துதான் செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டாமா?

ஒரு இயக்கத்தின் பல்வேறு மட்டத் தொண்டர்கள் ஒரே அறிவுத்தளத்துடன் இயங்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது மிகச்சரிதான்.ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை.இதேபோல சோவியத் ஏன் வீழ்ந்தது என்று கேட்டாலும் பல்வேறு தளங்களில் பணியாற்றும் மார்க்சிச்ட் தோழர்களிடமிருந்து ஒரே கருத்து வராது.கருத்தொற்றுமையை உருவாக்குவதற்கான போராட்டம்தானே கம்யூ.இயக்கத்தில் ஒரு முக்கியமான போராட்டம்.அதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
புலிகள் 100 சதம் புரட்சியாளர்கள் என்று நீங்கள் கருதுவதால் கோபத்துடன் எம்மைப் பார்க்கிறீர்கள்.நாங்கள் அப்படி பார்க்கலியே தெலைவா.ஜனநாயகக் குரல்கலை அழித்தது,கட்டாய ஆட்சேர்ப்பு,குழந்தைகலை படை முன்வரிசையில் ஆயுதங்களுடன் நிறுத்தியது,முஸ்லீம் மக்களைத் துரத்தியது,ஈழத்துக்காகக் குரல் கொடுக்கத் தன்னைத் தவிர வேறு யாரும் இல்லாமல் பார்த்துக்கொண்டது என எனக்கு விமர்சிக்கவும் புலிகளின் பாதையை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவும் பல காரணங்கல் இருக்கின்றன.அதற்காக உடனே நான் ராஜபக்‌ஷேயின் கைக்கூலி ஆகி விடுவேனா?இது என்ன பார்வை ?டெல்லியில் மட்டுமல்ல அஸ்ஸாம்,திரிபுரா,மராட்டி,குஜராத் என்ரு வேறு எந்த மாநிலத்திலும் கூட மார்க்சிஸ்ட்டுகள் இலங்கைத்தமிழர்க்ஜளுக்காகப்ம்போராட்டம் நடத்தவில்லை.தமிழ் நாட்டில் முன்பு என்ன போராட்ட வடிவங்களில் பிர அமைப்புகள் போராடினவோ அதே ஆர்ப்பாட்டம்,உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களைத்தான் தமிழகத்தில் மார்க்சிஸ்ட்டுகள் இப்போது நடத்துகிறார்கள்.இவ்வரிகளை எழுதும்போதே இதெல்லாம் எதுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன் தேவையில்லாமல் என்று மனதில் ஓடுகிரது.முகாம்களில் இருக்கும் மக்கள் உடனடியாக வீடு திரும்ப யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஆதரிப்பேன்.அந்தமனநிலை மட்டும்தான் இப்போதைக்கு எனக்கு இருக்கிரது.புலிகளை விமர்சிப்பது இப்போது தேவையற்றது.நீங்கள் கிலப்பி விட்டதால் பேசிவிட்டேன்.விடுங்க தோழர்.என விமர்சனத்தை மதித்து இவ்வளவு நீண்ட கடிதம் எழுதியமைக்கு என் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.மக்கள் முகாம்களிலிருந்து முதலில் வீடுகளுக்குப் போகட்டும்.மற்றதெல்லாம் பிறகு பேசிக்கொள்வோம்.யார் நிலைபாடு சரி பேச இப்போது அவசியமில்லை.நாம் பரஸ்பரம் நற்சான்றுகளையோ அவதூறுகளையோ அள்ளி வீசிக்கொண்டிருப்பதால் அங்குள்ள மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிரது?

தோழர் தமிழ்செல்வன் அவர்களுக்கு,

என் அறிவுரைப் படி நடந்து கொள்ள கட்சியை கேட்டுக் கொள்வதாக எழுதியிருந்தீர்கள்.

உங்கள் அறிவுரைப்படியே நடக்காத கட்சி என் அறிவுரைப் படியா நடக்கப் போகிறது.

இந்தியாவெங்கும் ஓடுகிற ரயில்களின் வழித்தடத்தை வேகத்தை ரயில்வேயில் வேலை பார்க்கிற ஒரு குமாஸ்தா எப்படி மாற்றி விட முடியாதோ அது போலத்தான் அங்கே நீங்களும் என்பதை நான் அறிவேன்.

நீங்கள் சொன்னது ஒரு கிண்டலுக்காகத்தான் என்பது எனக்குப் புரிகிறது.

நான் மிகவும் நேசிக்கிற தமிழ் சிந்தனையாளர் நீங்கள்.

இந்த ஈழப்போராட்டம் குறித்து அல்ல, வேறு ஏதாவது ஒரு நல்ல சிந்தனை வேறு ஒரு சமயத்தில் உங்களுக்குத் தோன்றும் போது கூட கட்சியிடம் சொல்லிவிடாதீர்கள்.

உங்கள் அறிவுரைப்படி நடந்து கொள்ள கட்சியை கேட்டுக்கொள்கிறோம் தோழர் என்று நீங்கள் என்னை கிண்டல் செய்தது போல அவர்கள் உங்களை கிண்டல் செய்வார்கள்.

சிபிஎம் கட்சியின் வடிவமைப்பு அப்படி. அங்கே யோசிக்கிற வேளையை பொலிட்பீரோ செய்யும். மற்ற அடிமட்ட வேளைகளை நீங்கள் செய்வீர்கள். பொலிட் பீரோவில் இந்தியாவின் தலை சிறந்த இடதுசாரி சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் நம்மை தவறாகவா வழி நடத்துவார்கள் என்று பொதுவான நம்பிக்கையில் தோழர்கள் இருப்பார்கள்.

ஆனால் பொலிட்பீரோவில் சிந்தனையாளர்கள் என்று யாருமில்லை. வெறும் சாதாரணமானவர்களே இருக்கிறார்கள் என்பது நெருங்கிப் பார்க்கும் போதுதான் தெரிய வரும்.

இதை ஏதோ காழ்ப்புணர்ச்சியில் நான் சொல்லவில்லை.

சென்ற பதினைந்து ஆண்டுகளில் இந்தியாவின் சிந்தனைத் தளத்தை தாக்கத்திற்கு உள்ளாக்கிய இடது சாரிகளின் புத்தகங்களை இந்திய புத்தக சந்தையில் தேடினேன். சில கட்சி அறிக்கைகளைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை.

கட்சி அறிக்கை அன்றி ஒரு புத்தகமும் எழுதாதவர்கள்தான் பொலிட்பீரோ உறுப்பினர்கள்.

மார்க்ஸைப் போலவும் எங்கெல்ஸைப் போலவும் லெனினைப் போலவும் ஸ்டாலினைப் போலவும் சிந்தனையில் பரவசத்தை உண்டாக்கும் ஒரு வாசகத்தையும் இவர்கள் ஒரு போதும் உதிர்த்த தில்லை.
சக்கரையில்லா ஊருக்கு இழுப்பைப் பூ சக்கரை என்பது போல இவர்களே நமக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள்.

இவர்களின் சிந்தனைப் படியும் வழிகாட்டுதல் படியும் நடக்கும் போது ஈழப் போராட்ட விஷயத்தில் நீங்கள் எப்படி சரியான பாதையை தேர்ந்தெடுக்க முடியும்?

ஒரு இயக்கத்தின் பல்வேறு மட்டத் தொண்டர்கள் ஒரே அறிவுத்தளத்துடன் இயங்க வேண்டும் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்க வில்லை.

குறைந்த பட்சம் இன்று ஈழப்போராட்டத்திற்கு எதிராக செயல்படும் பெருந்தலைகளாகிய நீங்கள், மாதவராஜ், ஆதவன் தீட்சன்யா ஆகிய மூவராவது ஆளுக்கொன்றாக பேசிக்கொண்டிருக்காமல் ஒரு அறிக்கை தயார் செய்து ஒரே அறிக்கையை பேசக்கூடாதா என்பதுதான் எனது ஆதங்கம்.

புலிகள் ஜனநாயகக் குரல்களை அழித்தவர்கள் தான்.கட்டாய ஆட்சேர்ப்பு செய்தவர்கள் தான். குழந்தைகளை படை முன்வரிசையில் ஆயுதங்களுடன் நிறுத்தியவர்கள் தான். முஸ்லிம் மக்களை துரத்தியவர்கள் தான். ஈழத்திற்காக குரல் கொடுக்க தன்னைத் தவிர வேறு யாரும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர்கள் தான்.

இவை எல்லாவற்றிற்கும் உலகின் புரட்சிகர இயக்கங்கள் ஏற்றுக்கொள்ளும் நியாயங்களும் தர்மங்களும் அறங்களும் இருக்கின்றன.

உங்கள் பார்வை படியே, இவைகள் எல்லாமும் தவறு என்றே வைத்துக் கொள்வோம். இவைகளுக்காகத்தான் நீங்கள் ஈழப்போராட்டத்தை எதிர்க்கிறீர்களா?

நீங்கள் மேற்சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் விடுதலைப்புலிகள் இயக்கம் உருவான பின் நடந்தவை.

ஆனால் அதற்கு முன் 1948 ல் இருந்து 1977 வரை தமிழ் மக்களுக்கு சம உரிமை கேட்டு தந்தை செல்வா அவர்களின் தலைமையில் அறப்போராட்டம் நடந்தது.

அப்பொழுது தமிழகத்தில் உங்களது தந்தையர் பி.ராமமூர்த்தி போன்றோர் தலைவர்களாக இருந்தார்கள். அவர்கள் என்ன தமிழகமே அதிரும் வண்ணம் மக்களைத் திரட்டி ஈழத் தமிழ் மக்களுக்காகப் போராடினார்களா என்ன?

நீங்கள் எதிர்ப்பது இருக்கட்டும், சிபிஎம் ஏன் ஈழப்போராட்டத்தை எதிர்க்கிறது என்பதையாவது தெரிந்து கொண்டு எதிருங்கள் தோழர்.

அன்றும் சரி இன்றும் சரி சிபிஎம் செய்வது தமிழ் துரோக ஈழ துரோக அரசியல் தான்.

நான் விமர்சனம் செய்வதை விஷம் என்று சொல்லவில்லை. விமர்சனம் செய்வதை மட்டுமே தொழிலாகச் செய்து கொண்டிருக்கும் போது விமர்சனம் விஷமாகி விடுகிறது.

குஜராத்திலும் மேற்கு வங்கத்திலும் நீங்கள் ஈழத்தமிழர்களுக்காக போராடாமல் இருப்பது வேறு. ஆனால் டெல்லியில் போராடாமல் இருப்பது வேறு. இது உங்களுக்கும் தெரியும்.டெல்லியில் போராடினால் பிரச்சினை தீரும். டெல்லியில் போராடாமல் தமிழகத்தில் மட்டும் போராடுவது , கட்சியில் ஏற்பட்டிருக்கிற தமிழ் உணர்வை கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ள செய்கிற ஏமாற்றுக் காரியம் தான்.

யார் நிலைபாடு சரி என்று பேச இப்போது அவசியமில்லை என்கிறீர்கள்.நாம் பரஸ்பரம் நற்சான்றுகளையோ அவதூறுகளையோ அள்ளி வீசிக்கொண்டிருப்பதால் அங்குள்ள மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது என்று கேட்கிறீர்கள்.

நான் அப்படி நினைக்கவில்லை தோழர்.

நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சிபிஎம்மின் தலைமைக்கு அழுத்தும் கொடுத்து, சிபிஎம்மின் 60 எம்பிக்களும் ஒரே குரலில் ஈழ மக்களுக்காக பாராளுமன்றத்தில் முழங்கி, பாராளுமன்றத்தை ஒரு நாள் ஸ்தம்பிக்கச் செய்தால் அங்கு ஈழத்தமிழர்கள் என்றென்றும் கண்ணீர் விட வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.

அதை கூட செய்வதற்கான மனிதாபிமானம் இல்லாமல் புலிகளின் மீது எங்களுக்கு விமர்சனம் இருக்கிறது என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிற போது தான் வேதனை ஏற்படுகிறது.

Monday, October 19, 2009

தோழர் தமிழ்செல்வன் அவர்களுக்கு!

ஆதவன் தீட்சன்யா என்னும் ஆள்காட்டி என்று நான் எழுதியிருந்த எனது முந்தைய கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்த து. பலர் பாராட்டி இருந்தார்கள். சிலர் விமர்சித்திருந்தார்கள். சில அனானிகள் ‘தூ , இதெல்லாம் ஒரு பிழைப்பா? மானங்கெட்ட நாயே!’ என்று திட்டியிருந்தார்கள்.
பாராட்டும் திட்டும் என்னை ஒன்றும் செய்யவில்லை. தோழர் தமிழ்செல்வன் அவர்கள் எழுதிய ஒரு நான்கு வரி விமர்சனம் மட்டும் என்னை என் கொள்கை நிலைப்பாட்டை மறுவிசாரனைக்கு உட்படுத்திக் கொள்ளத் தூண்டியது.

அந்த நான்கு வரி விமர்சனம் இதுதான்.

ஆதவன் தீட்சண்யா பற்றிய இக்கட்டுரை அவதூறுகளின் உச்சகட்டமாக உள்ளது தோழரே.ஒரு வரிகூட சரியில்லை.தப்பான தகவல்களுடன் தப்பான பார்வையுடன் வந்துள்ள பதிவு இது. மார்க்சிஸ்ட் கட்சியை நாலு வார்த்தை திட்டினால்தான் ஒரு அறிவாளியாக ஏற்றுக்கொள்வார்கள் ஈழ ஆதரவாளராக ஏற்றுக்கொள்வார்கள்.அதுக்காக எழுதிய கட்டுரை இது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. இப்போ இதெல்லாம் பேச வேண்டியதில்லை. பருவமழை துவங்கும் முன்னால் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் குடியிருப்புகளுக்கு அனுப்பப் படவேண்டும் என்கிற ஒரே கோரிக்கையை வைத்து தமிழகத்தில் எல்லாக் கட்சியினரும் பொதுமக்களும் வலுவான இயக்கம் நடத்த வேண்டும்.உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ சிபிஎம் மட்டும்தான் இன்று இக்கோரிக்கையை வைத்துப் போராட்டங்களைத் துவக்கியுள்ளது.

என்னை மறுவிசாரனைக்கு உட்படுத்திக் கொண்ட நிலையில் இந்த பதிலை எழுதுகிறேன்.

நான் இடதுசாரி எதிர்ப்பு நமைச்சலில் மார்க்சிஸ்ட்களை விமர்சிக்கவில்லை.

இந்திய அரசியலில் இன்றும் எளிமையோடும் நேர்மையோடும் அடித்தட்டு மக்களின் மீதான உண்மையான பரிவோடும் செயல்பட்டுக்கொண்டிருக்கிற ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை மிகவும் நேர்மையுடன் என்னால் உணர முடியும்.

இந்தியா பற்றிய மிகச்சிறந்த ஒரு கனவை சுமந்து கொண்டிருக்கிற, அதன் காரணமாக பெரிய தியாகங்களை செய்திருக்கிற மற்றும் செய்யத் தயாராக இருக்கிற சில லட்சம் தோழர்களை தன்னுடைய கட்சியில் வைத்திருக்கிற கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான்.

இந்திய அரசியல் அரங்கில் திடீரென ஒரு ராட்சதப் பாம்பைப் போல உள்ளே நுழைந்து மதவாதம் என்னும் விஷத்தில் இந்தியாவை மூழ்கடிக்க பிஜேபி முயன்ற போது அதனுடன் சரி நிகர் சமர் புரிந்து, இன்று அந்த பிஜேபி என்கிற நச்சுப் பாம்பை அடித்துத் துவைத்து ஒரு ஓரத்தில் அமர வைத்த கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான்.

இன்று பல காரணங்களால் இடதுசாரிகள் சற்றே சரிவில் இருந்தாலும் இடதுசாரிகள் இல்லாமல் இந்தியா சுபிட்சம் பெற முடியாது.

இவைகளையெல்லாம் நான் எப்படி நேர்மையாக உணர்கிறேனே அதே நேர்மையோடு தான் இந்த விஷயத்தையும் உணர்கிறேன் ‘ஈழ போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவறான செயல்பாடு கொண்டிருக்கிறது’ என்பதையும்.

இந்தியாவில் இருக்கிற அரசியல் இயக்கங்களில் மூன்று இயக்கங்கள் ஈழப்போராட்டத்தின் மீது எதிர்ப்பு கொண்டிருக்கின்றன.

பெரும்பான்மையின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி முதலிடத்தில் இருக்கிறது. முஸ்லிம் இயக்கங்கள் இரண்டாவது இடத்தில் இருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் தலைவரை ஈழப்போராளிகள் அழித்தொழிப்பு செய்திருக்கிறார்கள்.

இஸ்லாமிய இயக்கங்களின் எதிர்ப்பையும் புரிந்து கொள்ள முடிகிறது . ஈழ நிலப்பரப்பில் இருந்த இஸ்லாமியர்களை ஈழப்போராளிகள் அவர்களுடைய வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றியிருக்கிறார்கள்.

புரியாத புதிராகவும் மர்மமாகவும் இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈழப்போராட்டத்தின் மீது கொண்டிருக்கிற எதிர்ப்புணர்வும் வெறுப்புணர்வும் தான்.

ஒரு தனிப்பட்ட உரையாடலின் போது எழுத்தாளர் ரவிக்குமார் இந்த விஷயத்தைச் சொன்னார்.

ஒரு நாள் டி.கே ரங்கராஜனை எம் எல் ஏ ஹாஸ்டல் வாசலில் ரவிக்குமார் பார்த்திருக்கிறார். டி.கே.ரங்கராஜன் அவர் கக்கத்தில் இருந்த ஷோபா சக்தியின் ஈழம் என்னும் புத்தகத்தை காட்டி ‘ ரவிக்குமார் இந்தப் புத்தகத்தை படித்திருக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார்.

அது அந்தப் புத்தகம் வெளியான மறுதினம்.

ஷோபா சக்தியின் ஈழம் என்னும் புத்தகத்தின் 2000 காபிகளையும் வாங்கித் தீர்த்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான்.

இன்றும் அந்தப் புத்தகங்கள் அவர்கள் வீட்டு அலமாரியை அலங்கரித்த படியே இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல தோழர்கள் ஈழ போராட்டத்தின் வரலாற்றையே ஷோபா சக்தியின் புத்தகத்தின் மூலமாகத்தான் அறிகிறார்கள்.

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள், மா சே துங்கின் நீண்ட பயணம் போன்ற புத்தங்களை தேடித் தேடிப் படித்த மார்க்சிஸ்ட்கள் இன்று ஈழப்போராட்டத்திற்கு எதிரான புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்கிறார்கள்.

ஈழப்போராட்டம் என்பது அடிப்படையில் அநீதிக்கு எதிரான குரல்.

ஒரு போராட்டத்திற்கு எதிரான புத்தகத்தை வாங்கிப் பிடித்து படிக்க வேண்டும் என்ற நமைச்சலை உங்களுக்கெல்லாம் உருவாக்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எந்தக் காரணி?

மாதவராஜின் தீராத பக்கங்களில் பிரபாகரனின் மறைவு மற்றும் ராஜீவ் காந்தியின் மரணம் என்ற கட்டுரையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த கீழ்கண்ட வாசகங்கைப் பார்த்தேன்.

சரியோ, தவறோ.... வரலாற்றில் இலங்கை மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பிரபாகரன் ஒரு அடையாளமாகவும், நம்பிக்கையாகவும் இருந்திருக்கிறார் என்பது உண்மை. தான் தேர்ந்தெடுத்த பாதைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார். அதுவே அவரது மறைவு (மரணமல்ல!) குறித்து கவலை கொள்ளச் செய்கிறது. ஒரு மனிதனுக்குள் உருவாகியிருக்கும் கருத்துக்களை ஒரு நிகழ்வு உடைத்து விடும் வலிமை கொண்டதாயிருக்கிறது. இதை நான் உணர்ந்த இடம் பிரபாகரனின் மறைவையொட்டிய (மரணமல்ல!) காட்சிகள்.

ஒரு நேர்மையான கலைஞனின் நேர்மையான தடுமாற்றம் இது. நேற்று வரையில் பிரபாகரன் குறித்து தூற்றிக்கொண்டிருந்தவர் மாதவராஜ். இன்று அவருடைய மனம் மாறியிருக்கிறது. இந்த மாற்றத்திற்கு பிரபாகரனின் மரணச்செய்தி வர வேண்டி யிருக்கிறது.

முன்பு ஏன் அப்படி செய்தார் என்று கேட்டால் எங்களுக்கு விமர்சனம் இருக்கிறது என்று பதில் சொல்கிறார்.

யாருக்கு யார் மேல் விமர்சனம் இல்லை.

விமர்சனம் இருக்கிறது என்பதற்காக விமர்சனம் செய்தே ஒரு இயக்கத்தை கொலை செய்ய வேண்டுமா?

கருணாநிதி மேல் உங்களுக்கு விமர்சனம் இருக்கிறது. அவரோடு சேர்ந்து செயல்படுகிறீர்கள். ஜெயலலிதா மேல் விமர்சனம் இருக்கிறது அவரோடு சேர்ந்து செயல்படுவீர்கள். காங்கிரஸ் மீது விமர்சனம் இருக்கிறது. ஆனாலும் காங்கிரசோடு சேர்ந்து செயல்படுவீர்கள். ஆனால் ஈழப்போராட்டத்தை மட்டும் விமர்சனம் மட்டும் செய்து கொலை செய்வீர்களா?

குளிக்கும் தொட்டியில் குழந்தையை குளிப்பாட்டி குழந்தையையும் சேர்த்து சாக்கடையில் கொட்டி விடுகிற காரியத்தை வரலாற்றில் எத்தனை முறை செய்வீர்கள்?

உங்களுடைய தமிழ் வீதியில் ‘ துப்பாக்கிகள் அடங்கியிருக்கும் இப்பொழுதேனும் ‘ என்னும் கட்டுரையை வாசிக்கிறேன்.
ஈழ மக்கள் மீது அக்கறையும் வருத்தமும் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைதான். ஆனாலும் இழவு வீட்டிற்கு போன ஒரு பெண் மணி வாசலில் பந்தலில் தொங்கிய பூசனிக்காய் பற்றி பாடியதைப் போல இந்தக் கட்டுரையிலும் ஈழப் போராட்டத்திற்கு எதிரான விஷ வார்த்தைகளை நீங்கள் பயன் படுத்த த் தவற வில்லை.

மாறியுள்ள சர்வதேச நிலைமைகளை கணக்கில் கொண்டு போர்த்தந்திரங்களை வகுக்கத்தெரியாதவர்களா 33 ஆண்டுகாலம் ஆயுதம் ஏந்தி நின்றார்கள் என்கிற வியப்பும் அதன் காரணமாகவும் நம் மக்கள் கூடுதல் அழிவைச் சந்திக்க நேரிட்டதே என்கிற பெருமூச்சும் ஒருசேர ஏற்படுகிறது.

என்று ஒரு வாசகம் எழுதிச் செல்கிறீர்கள்.

விடுதலைப் புலிகள் முட்டாள்கள்களாக இருந்திருக்கிறார்கள் என்று சொல்ல ஆசைப்படுகிற வாக்கியம் அது. நீங்கள் அப்படி எழுதியது குறித்து நான் வருத்தப்பட வில்லை.

விடுதலைப் புலிகளின் வீரமும் தீரமும் தியாகமும் அவர்களின் புத்திசாலித்தனமும் உலகம் அறிந்தது. அதற்கு ஆயிரம் உதாரணங்கள் இருக்கின்றன.

எனக்கு உங்களுடைய அந்த வாசகத்தைப் படித்த போது சிரிப்புதான் வந்தது.

ஏதோ நீங்கள் எல்லாம் மாறியுள்ள சர்வதேச நிலைமைகளைக் கணக்கில் கொண்டுதான் ஆயுதப் போராட்டத்தைக் கை விட்டு விட்டது போலவும்..

ஏதோ நீங்கள் முன் கூட்டியே மாறி வரும் சர்வதேச நிலைமைகளை கணக்கில் எடுத்து மற்ற போராட்ட இயக்கங்களை எச்சரித்தது போலவும்..

உங்களுக்கே ஒரு தோற்றம் உண்டாக்கிக் கொள்கிற வாக்கியம் அது. அதில் இருக்கிற நகைச்சுவையை புறந் தள்ளுங்கள்.

மாறியுள்ள சர்வதேச நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதுதான் அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் லட்சம் தமிழர்கள் சாவதற்கு காரணமா?
இது தான் மார்க்சிய பார்வையா?

ஒரு இடதுசாரியாக, எழுத்தாளராக , தமிழ் நாட்டின் முக்கியமான சிந்தனையாளராக நீங்கள் சொல்கிற எவ்வளவு பெரிய பொய் அது?
முகாம்களில் இருக்கிற மூன்று லட்சம் மக்களை விடுவிக்க இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் போராடிக்கொண்டிருக்கிறது என்று பதில் சொல்கிறீர்கள்.

நான் டெல்லியில் இருக்கிற என்னுடைய பத்திரிகை நண்பர்களை கேட்டேன். டெல்லியில் மார்க்சிஸ்ட்கள் ஈழத்தமிழர்களுக்காக ஏதேனும் போராட்டம் நடத்தினார்களா என்று. அவர் இல்லை என்று சத்தியம் செய்தார்.

சரி பாராளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்பிக்கள் முழங்கியிருக்கக் கூடும் என்று திரு தொல். திருமா அவர்களுக்கும் எனக்கும் இடையில் இருக்கும் நண்பரிடம் கேட்டேன். மார்க்சிஸ்ட்கள் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்காகவும் பேசவில்லை, நம் கடல் எல்லையில் சுடப்படுகிற மீனவர்களுக்காகவும் பேசவில்லை என்று பதில் சொன்னார்.

போராடுகிறீர்கள் என்று சொல்கிறீர்களே வேறு எங்கு போராடுகிறீர்கள்?

சமீபத்தில் வெங்கடேசன் என்ற சிபிஎம்காரர் ஒரு ஆதீன மடத்தில் ஈழத்தமிழர்களுக்காக அக்கறைப் பட்டு பேசினார் என்று கேள்வி பட்டேன்.

ஒருவேளை அதைத்தான் ஈழத்தமிழர்களுக்காக போராடுகிறோம் என்று சொல்கிறீர்களோ?

அப்படியானால் அது எவ்வளவு பலவீனமான பொய்யான போராட்டடம்.

இன்றும் தெருமுனையில் தீவிர அரசியல் பேசும் நண்பர்களாக மார்க்சிஸ்ட் தோழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பலரிடமும் ஈழப்போராட்டத்தை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்கிறேன்.

அவர்கள் சகோதரப்படுகொலைகள் செய்தவர்கள் அதனால் எதிர்க்கிறோம் என்கிறார் ஒருவர்.

அவர்கள் முஸ்லிம்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றினார்கள் என்கிறார் இன்னொருவர்.

அவர்கள் ராஜிவ் காந்தியை கொன்றவர்கள் என்கிறார் ஒருவர்.

இலங்கை சுபிட்மாக இருந்தது.அங்கே பிரச்சினையை கொண்டு வந்ததே விடுதலைப் புலிகள் தான் என்று சொல்கிறார் இன்னொருவர்.அதற்கு அவர் ஆதாரம் காட்டுவது ஷோபா சக்தியின் புத்தகத்தை.

தனி ஈழம் என்ற கோஷத்தையே நாங்கள் எதிர்க்கிறோம் என்கிறார் இன்னொருவர்.

அவர்கள் தலித்களை கொடுமை படுத்தினார்கள் என்கிறார் ஆதவன்தீட்சன்யா.
நான் இவர்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்வது ,

ஈழப்போராட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்கள். அது பரவாயில்லை. ஏன் எதிர்க்கிறோம் என்று உட்கார்ந்து பேசி ஒரு அறிக்கை தயார் செய்து ஒரே அறிக்கையை எல்லோரும் பேசுங்கள்.
தான் தோன்றிகளாக ஆளுக்கொரு கருத்தை பேசாதீர்கள் என்பதுதான்.

Tuesday, October 13, 2009

இது உண்மையா ஜெகத்கஸ்பர் அவர்களே?

ஃபாதர் ஜெகத்கஸ்பர் பற்றி எனக்கு ஒரு மெயில் வந்தது.

நான் ஜெகத்கஸ்பரை மிகவும் வியப்பதுண்டு. அவர் பிரபாகரனை இதயத்தில் நீதி உள்ளவன், எல்லையில்லா கருணையாளன் என்று நக்கீரனில் எழுதிய போது இவரின் எழுத்தை ஒன்று விடாமல் வாசிக்க வேண்டும், இவர் கூட்டங்களை ஒன்று விடாமல் கேட்க வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறேன். ஆனால் சமீபத்தில் இவர் பேச்சில் மாற்றம் இருக்கிறது.

ஒரு கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று பேசினார். அவர் கலந்து கொண்ட ஒரு ஊர்வலத்தில் இரண்டு குழந்தைகள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை பிடித்து வந்தனர். பிரபாகரன் படத்தை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று அந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள் முடிவு செய்தனர். ஜகத்கஸ்பரும் அவர்களுக்கு ஆதரவாக முடிவு எடுத்து பிரபாகரன் படத்தை நீக்க வேண்டும் என்று சொன்னார்.

இப்பொழுது இந்த மெயில்..

என்ன சொல்லப் போகிறார் ஃபாதர் ஜெகத்கஸ்பர்?

"சஞ்சனா அனுபம்" என்ற தலைப்பில் நக்கீரனில் மீண்டும் உங்கள் அறிக்கை மழை எம்மையெல்லாம் நனைத்து நிற்கிறது. தடிமன் காச்சல் வராத குறைதான். சூறாவழி, புயல்காற்று எல்லாம் ஓய்ந்த பின்னரும் உங்கள் அறிக்கை மழை மட்டும் இன்னமும் ஓயவில்லை. சிலர் பரபரப்புச் செய்தியை வெளியிட்டு பணம் சம்பாதிப்பார்கள், ஆனால் பணம் சம்பாதிக்க பரபரப்புச் செய்திகளை உங்களை வைத்து உருவாக்குகிறார்கள் நக்கீரன் பதிப்பகத்தினர்.
உங்கள் கட்டுரைகளை கடந்த 5 மாதங்களாகப் படித்துவருகிறேன். மே மாதம் 18ம் திகதிக்குப் பின்னர் உக்கிரமடைந்துள்ள நீங்கள், பிரபல்யமாவதற்கும், பணம் சம்பாதிக்கவும் எமது உன்னத விடுதலைப் போராட்டமா கிடைத்தது ?. நீங்கள் ஈழத்திற்குச் சென்றிருந்தபோது வெரிடாஸ் வானொலியின் அறிவிப்பாளர் என்ற வகையில் ஒரு மரியாதையின் நிமிர்த்தமாக தேசிய தலைவர் உங்களுடன் 6 நிமிடம் பேசினார். அப்போது அங்கு நின்றிருந்தவன் நான். ஆம் அதே நீல நிற ஆடையில்.

நலம் விசாரித்த தலைவரிடம், உங்களை அறிமுகப்படுத்தி அங்கிருந்து அகன்றீர்கள். பின்னர் கிடைத்த ஈழத்து நட்புகள் அவர்கள் ஒவ்வொருவரும் சொல்லும் செய்திகளை சேகரித்து, உங்கள் அனுபவமாக அல்லவா வெளிவிடுகிறீர்கள். இதில் கொடுமையான விடையம் என்னவென்றால் நான் உங்களுக்குச் சொன்ன செய்தியையும் நீங்கள் சமீபத்தில் நக்கீரனில் உங்கள் அனுபவம்போல வெளியிட்டுள்ளீர்கள். இது ஒன்று மட்டும் போதுமே.

அத்துடன் இன்றைய தினம் நக்கீரனில் சஞ்சனா அனுபவம் என்ற தலைப்பில் ஒரு யாழ்ப்பாணப் பெண்மணியை பேட்டி காண்பதுபோலவும், அவர் கருத்துக்கள் போல உங்கள் கருத்துக்களைக் கூறியிருப்பதும் வியப்பாக உள்ளது. இது நாள் வரை தமிழீழம் மற்றும், தேசிய தலைவர் மற்றும் போராட்டம் என நீங்கள் பேசிவந்ததால் எல்லாரும் மொளனமாக இருந்தார்கள். ஆனால் தற்போது யாழ்ப்பாணப் பெண்மணியூடாக இந்திய குடிவரவு அதிகாரிகள் மென்மையாக நடந்துகொண்டார்கள் என்றும் ப.சிதம்பரம் சமாதானத்திற்காக பாடுபட்டார் எனவும் நீங்கள் கூற முனைவதை எந்தத் தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழ் நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு இலங்கைத் தமிழர்களும் கியூ பிரிவால் அவதானிக்கப்படுவதும், ஆங்காங்கே கைதுசெய்யப்படுவதும், வேலைகளில் அமர்த்தப்படுவதில் வேற்றுமை பார்க்கப்படுவதும் யாவரும் அறிந்த உண்மை. மண்டபம் முகாம் தொடக்கம் செங்கல்பட்டு சிறப்பு முகாம்வரை ஈழத்தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் மத்திய அரசிற்கு வக்காளத்து வாங்க ஆரம்பித்திருப்பது பெரும் சந்தேகங்களைக் கிளப்புகிறது.

இந்திய உளவுப் பிரிவினருடன் நீங்கள் சேர்ந்து இயங்குவது போலான தோற்றப்பாட்டை உருவாக்குகிறது. தொடர்ந்தும் அந்தக் கட்டுரையில் ப.சிதம்பரம் சமாதானத்திற்காய் உழைத்தவர் என்று நீங்கள் பகிரங்கமாக குறிப்பிடுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏன் எனில் இறுதிப்போர் நடைபெறும் கால கட்டத்தில் விடுதலைப் புலிகளை சரணடையச் சொன்ன நபர்களில் ப.சிதம்பரமும் அடங்குகிறார்.

கலைஞர் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கும்போது, பறந்துவந்து அதனை முடிவுக்குக் கொன்டுவந்த சிதம்பரம் அவர்கள், இலங்கையில் உடனடிப் போர் நிறுத்தம் வந்துவிட்டதைப்போல பேசியதும் நாம் அறிவோம். உங்களுக்கும் கலைஞர் மகள் கனிமொழிக்கும் இடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் நாம் நன்கு அறிவோம் ! இந்தச் சூழலில் வெறும் அறிக்கைகளை வெளியிட்டு, புகழைச் சம்பாத்திக்க நினைக்காமல் ஈழத் தமிழர்களுக்கு உங்களால் உதவமுடியுமா எனப் பாருங்கள். எமது இனத்தின் விடுதலைக்கு உரம் சேர்க்கமுடியுமா எனச் சிந்தியுங்கள்.

வார்த்தைகளோடு விளையாடும் நீங்கள்.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள்.

உங்கள் மனதை நான் ஏதேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்

இங்கணம்
தமிழரசு