Wednesday, December 8, 2010

நந்தலாலா- கேள்விகளும் பதில்களும்

(இவை ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கேள்விகளுடன் மேலும் சில கேள்வி பதில்கள் சேர்க்கப் பட்ட பதிவு. இந்தக் கேள்வி பதில்களை ஏற்கனவே வாசித்திருப்பவர்கள் கடைசியில் சேர்க்கப் பட்டிருக்கும் புதிய கேள்வி பதில்களுக்குச் செல்லவும். வாசிக்காதவர்கள் துவக்கத்திலிருந்து வாசிக்கலாம்)

நந்தலாலா - அயோக்கியம் மிஷ்கின்

உலக சினிமாவிற்கும் திருட்டுத் தனத்திற்கும் அப்படி என்ன தான் நமக்கு எட்டாத படி ரகசிய உறவோ.. உலக சினிமா பார்ப்பவர்கள் பெரும்பாலும் திருடர்களாகவே இருக்கிறார்கள் . அதுவும் வெற்றிக்கான வெறி புழுத்து வழியும் இந்தியா மாதிரி தேசங்களில் இந்த திருடர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கிறது.

இந்த வரிசையில் நாம் புதிதாக மிஷ்கினை சேர்க்க வேண்டும்.

வாழும் சினிமா மேதையான டிக்கேசி கிட்டனோவின் கிகிஜிரோ தமிழாக்கம் செய்யப்பட்டு நந்தலாலா என்ற பெயரில் ஓடிக்கொண்டிருக்கிறது. டிக்கேசி கிட்டனோவை இருட்டடிப்பு செய்து விட்டு மிஷ்கின் அந்தப் படத்திற்கான புகழ் மாலைகளை முன் நின்று வாங்கிக் கொண்டிருக்கிறார். இதைத் தாண்டி ஒரு சினிமா மேதையை யாரும் அவமதிக்க முடியாது.
மிஷ்கினின் இந்தக் காரியம் தமிழ் சிந்தனையாளர்களிடம் பல்வேறு கேள்விகளை உண்டாக்கியிருக்கிறது.

எனவே கேள்வி பதிலாகவே நான் என் பதிவை பதிவு செய்கிறேன்.

நந்தலாலா தமிழில் ஒரு உலக சினிமா என்று சொல்கிறார்களே?

ஒரு உலக சினிமாவின் கதையை திருடி எடுத்து, அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அதைப் போல இன்னொரு காட்சியால் மாற்றி அமைத்து ,ஒவ்வொரு ஷாட்டையும் டேப் வைத்து அளந்து, அடிக்கு அடி படமெடுத்தால் அது தமிழில் உலக சினிமா போலத்தான் இருக்கும்.

அப்படி ஒரு கதையை திருடி படம் எடுத்தால் என்ன தவறு? இதை ஏன் யாரும் பொருட்படுத்த வேண்டும்?

கதையை திருடுவதற்குப் பின்னால் பல அழுக்குகள் அசிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் என்னெவென்று பார்க்கலாம்.

1.கிகிஜிரோ அழகான கதை தான். ஆனால் அதே நேரத்தில் யாராலும் உருவாக்க முடியாத கதை கிடையாது.இங்கிருக்கிற எழுத்தாளர்களை வைத்தோ அல்லது உதவி இயக்குனர்களை வைத்தோ இதே போல் தாக்கம் உண்டாக்கும் ஒரு கதை வேண்டும் என்று சொல்லி அதற்கு சில லட்சங்களை செலவளித்தால் கிகிஜிரோவைக் காட்டிலும் அழகான கதையை உண்டாக்க முடியும்.ஆனால் இங்கிருக்கிற சில இயக்குனர்களுக்கு , குடிக்கு சில லட்சங்களை செலவளிக்க முடியும். கூத்தியாள்களுக்கு சில லட்சங்களை செலவளிக்க முடியும். ஆனால் கதை என்கிற வஸ்த்துக்கு மட்டும் நயா பைசை செலவளிக்க முடியாது. கதை ஓசியில் கிடைக்க வேண்டும்.அல்லது உதவி இயக்குனர் அசந்த நேரம் பார்த்து உதவி இயக்குனரின் கதையை எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது திருட்டு சிடிக்கள் பார்த்து ஏதாவது ஒரு படத்தின் கதையை அல்லது சில படங்களின் கதையை ஒன்று சேர்த்து ஓசியிலேயே கதையை உருவாக்கி விட வேண்டும். ஆனால் தயாரிப்பாளரிடம் கதை என்னுடையது என்று சொல்லி சில பத்து லட்சங்களை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொள்ள வேண்டும். சினிமாவில் சில இயக்குனர்களிடம் ஆண்டாண்டு காலமாக இருக்கும் இந்த புத்தியே மிஷ்கினையும் திருட வைத்திருக்கிறது.

2.சினிமாவில் ஒரு இயக்குனரிடம் கதை இல்லாத போது ஒரு இடைவெளி உண்டாகும் . அதன் வழியாகவே இன்னொரு புதிய இயக்குனர் ஒரு புதிய கதையுடன் உள்ளே நுழைய முடியும். இது தான் சினிமாவின் சுழற்ச்சி. இப்படி உண்டான இடைவெளியில் தான் சென்ற வருடங்களில் சுப்பிரமணியபுரம் சசி, பசங்க பாண்டியராஜன், வெண்ணிலா கபடி குழு சுசீந்திரன் போன்ற உண்மையும் நேர்மையும் கொண்ட புதிய இயக்குனர்கள் திரையுலகிற்கு வந்தார்கள். இப்படி உலக சினிமாவின் கதைகளைத் திருடி ஒருவர் படம் செய்து கொள்ளமுடியும் என்றால் எல்லா இயக்குனர்களும் ஆளுக்கொரு கதையை திருடி தொடர்ந்து படம் செய்து கொண்டே இருப்பார்கள். புதியவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் இடம் இல்லாமல் போய் ஒரு கட்டத்தில் திருட்டு தடியர்கள் மட்டுமே திரையுலகில் இருப்பார்கள்.

3.இயக்குனர் வசந்த பாலன் வெயில் அங்காடித்தெரு போன்ற இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தனது மூன்றாவது படத்திற்கு சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலை உரிமை வாங்கி படமாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு நல்ல உதாரணம். கதை இல்லாத இயக்குனர்கள் தமிழின் மேன்மையான படைப்புகளை படமாக்க முயற்ச்சி செய்ய வேண்டும் . அப்படி செய்தால் எழுத்தாளர்கள் பிச்சை எடுக்க வேண்டியிருக்காது(சாரு நிவேதிதா கவனிக்க). அது மட்டுமல்லாமல் உலகின் தலைசிறந்த படங்களில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளும் இடம் பெறும்.

4.கிகிஜிரோவைக் காட்டிலும் மேலான கதைகள் வைத்திருக்கும் , மிஷ்கினைக் காட்டிலும் திறமை மிக்க புதிய இயக்குனர்கள் சினிமா வாய்ப்புகளுக்காக அழைந்து கொண்டிருக்கிறார்கள். சரியான வாய்ப்பு கிடைக்காமல் அவர்களுடைய வாழ்க்கையை வறுமை தின்று கொண்டிருக்கிறது. அவர்கள் துர்மரணங்களை சந்திக்கிறார்கள். மிஷ்கினின் இந்தக் காரியம் அந்த துர்மரணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

இது போல் நூறு காரணங்கள் சொல்ல முடியும்.


கிகிஜிரோவை தமிழ் பார்வையாளர்கள் பார்க்கப் போவதில்லை. கிகிஜிரோவையும் அதன் இயக்குனர் டிக்கேஷி கிட்டனோவையும் மிஷ்கின் தமிழில் அறிமுகப் படுத்தியிருக்கிறார். இதை ஒரு கலை சேவையாக ஏன் கருதக்கூடாது?


இதை கலைச்சேவையாக கருத முடியாது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

1.இன்றைய தினத்தில் மிஷ்கின் அருவருக்கும் இரண்டு வார்த்தைகள் கிகிஜிரோ என்பதும் டிக்கேஷி கிட்டனோ என்பதும் ஆகும். இதனை நேர்காணல்களில் அவர் இந்தக் கேள்வியை சந்திக்கும் போது அவருடைய முகத்தைப் பார்த்து புரிந்து கொள்ள முடியும்.அவர் நேர்காணலில் கற்பிக்க முயற்சிப்பதெல்லாம் மூலப்படம் இவ்வளவு சிறப்பான படமில்லை, நான் எனது அறிவினாலேயே இதை சிறப்பாக்கியிருக்கிறேன் என்பதைத்தான். இது டிக்கேஷி கிட்டனோவிற்கு செய்கிற அவமரியாதையே.

2.இதைப் போல உலக சினிமாவின் கதையை திருடுகிறவர்கள் மூலப் படத்தில் இருக்கிற மேன்மையான விஷயங்களை கொன்றொழிக்கிறார்கள்.தமிழ் சூழலுக்கு ஏற்றார்போல் மாற்றுகிறேன் என்று சொல்லி அதன் ஆன்மாவை சிதைக்கிறார்கள்.திருடியது தெரியாமலிருப்பதற்காக அதன் தோற்றத்தை மூழியாக்குகிறார்கள். இறுதியாக இவர்களின் சிந்தனையில் இருக்கிற கீழ்மைகளை அதனுள் ஏற்றுகிறார்கள். (உதாரணத்திற்கு மகனை விட்டுச் சென்ற தாய் இழிவானவள், விபச்சாரம் செய்கிற பெண் அழுக்கானவள்)ஆக மொத்த த்தில் மூல படத்தில் இருக்கிற கமர்ஷியல் அயிட்டங்களை மட்டும் சுருட்டி எடுத்து ஒரு படம் உண்டாக்குகிறார்கள்.

3.இது லட்சம் லட்சமான சம்பளத்திற்காகவும் , புகழ் மாலைகளுக்காகவும் செய்யப்பட்ட காரியம்.

4.தமிழ் நாட்டில் யாரும் அந்தப் படத்தையெல்லாம் பார்த்து விட மாட்டார்கள் , அப்படியே ஒன்றிரண்டு பேர் பார்த்தாலும் அவர்களையெல்லம் சரிக்கட்டி விடலாம் என்ற எண்ணத்திலேயே இந்த திருட்டு முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது . இதில் கலைச் சேவை எங்கிருந்து வருகிறது.

எழுத்தாளர்களாகிய பிரபஞ்சன், மனுஷ்யபுத்திரன், சாருநிவேதிதா, ஷாஜி இவர்களெல்லாம் இந்தப் படத்தையும் இந்த இயக்குனரையும் வானளாவப் புகழ்கிறார்களே?


இந்த சமூகத்தின் எல்லா விதமான இழிவுகளோடும் , அழுக்கோடும் , கசடுகளோடும் இந்த எழுத்தாளர்கள் சமரசம் செய்து கொண்டு சில பல வருடங்கள் ஆகி விட்டது.எப்படியாவது சினிமா என்கிற பணக்கப்பலில் ஒரு இடத்தைப் பிடித்து சில லட்சங்களை அள்ளி விடுவது அவர்களுடைய லட்சியம். அதனால் இவர்கள் மிஷ்கினை வானளாவப் புகழ்வதில் ஆச்சர்யப் படத்தேவையில்லை.

நானும் இதைப்போல ஒரு உலக சினிமாவை காப்பி எடுத்து படம் எடுத்தால் இந்த எழுத்தாளர்கள் என்னையும் வானளாவப் புகழ்வார்களா? இதற்கு நான் எந்த எழுத்தாளருக்கு என்ன செய்ய வேண்டும்?

ஜெயமோகன் , எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு. மனுஷ்ய புத்திரனுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அல்லது பாடல் எழுதும் வாய்ப்பு மற்றும் திரைக்கதை புத்தகத்தை உயிர்மையில் வெளியிடும் அனுமதி, சாருநிவேதிதாவுக்கு அவ்வப்பொழுது ஐயாயிரம் பத்தாயிரம் ஏதாவது ஒரு காட்சியில் தலை காட்ட வாய்ப்பு.பிரபஞ்சனுக்கு கொஞ்சம் தேநீர் கொஞ்சம் நட்பு.

நான் இவைகளைச் செய்தால் அவர்கள் என்னென்ன பதில் சேவைகளை நமக்கு செய்வார்கள்?


நீங்கள் தமிழில் ஒரு அட்சரம் கூட வாசித்திருக்க வேண்டியதில்லை. இவர்கள் முதல் கட்டமாக தமிழ் சினிமாவில் இலக்கிய ஞானம் உள்ள இயக்குனர் என்ற பட்டத்தை தருவார்கள். இரண்டாவதாக நீங்கள் அழைக்கும் போதெல்லாம் வந்து, மிகவும் அரிதான சிறு பத்திரிக்கை வார்த்தைகளில் உங்களை மேதை, ஞானி என்றெல்லாம் புகழ்வார்கள். கதையைத் திருடியது பற்றி உங்களுக்கு ஏதேனும் குற்ற உணர்வு இருந்தால் அதை மனோத த்துவ ரீதியாக, ஆன்மீக ரீதியாக , இலக்கிய ரீதியாக தொடர்ந்து உரையாடி சரி செய்வார்கள். படம் வெளியாகும் சமயம் இவர்களுடை இணைய தளங்களில் உங்கள் படத்தை தமிழின் முதல் சினிமா , உலக சினிமா என்றெல்லாம் புகழ்ந்து எழுதுவார்கள். அவர்கள் எழுதிக்கொண்டிருக்கிற பத்திரிக்கைகளில் உங்கள் படத்தை பற்றி எழுதி மார்க்கெட் செய்வார்கள். டிவி ஷோக்களில் பங்கெடுத்து உங்களுக்கே கூசும் அளவுக்கு உங்களைப் புகழ்வார்கள்.

முட்டாளாக அமர்ந்து கொண்டு எதிரில் தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களை அமர வைத்து அவர்கள் புகழ்வதை கேட்டுக் கொண்டிருப்பது இருக்கிறதே ..அந்த சுகமே தனி.

எழுத்தாளர்களின் இந்த மாதிரியான காரியங்களுக்கு முன்னோடி எழுத்தாளர் யார்?

எஸ்ரா என்று பலரும் சொல்கிறார்கள்.

வசனம் எழுதும் வேலைக்கு நம் சிறு பத்திரிக்கை எழுத்தாளர்கள் இவ்வளவு தவியாய் தவிப்பதேன்?

முதல் காரணம் அது உழைப்பற்ற ஊதியம்.ஒரு படத்தின் பெரும்பான்மையான வசனங்களை உதவி இயக்குனர் மற்றும் இயக்குனரே எழுதி விடுவார்கள். ஒரு எழுத்தாளர் டிஸ்கஸ்ஸனில் பங்கெடுத்து அந்த பிராஜக்டுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களை வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கலாம்¢. அந்த இயக்குனரை அவ்வப்பொழுது கீஸ்லாவ்ஸ்கி , டிக்கஸி கிட்டனோ இவர்களுடன் ஓப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தால் போதும். பிராஜக்டுக்கு பத்து லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். இப்படி ஒரு பணம் கிடைக்கும் போது ஒருவர் என்ன காரியத்திற்கும் தயாராவது இந்த உலகில் சகஜம் தானே.

தமிழ் சிறுபத்திரிக்கை எழுத்தாளர்கள் இப்படி சில்லரை வேலை செய்து தான் சினிமாவில் இடம் பெற முடியுமா? வேறு வழியே இல்லையா?

இருக்கிறது.இவர்கள்¢ மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் செய்வதைப் போல ஒரு சினிமாவிற்கான முழுநீள கதையை உருவாக்கி அதற்கு திரைக்கதை வசனம் எழுதி பணம் சம்பாதிக்கலாம். ஆனால் இவர்களால் மக்கள் விரும்பும் ¢ கதையை ஒரு போதும் சிந்திக்க முடியாது. அதனால் இப்படி ஏதேனும் உப வேலை செய்தே பணம் சம்பாதிக்க சபிக்கப் பட்டவர்களாகி விட்டார்கள்.

பிளாக்கர்கள் நிறைய பேர் படத்தை புகழ்ந்து எழுதியிருக்கிறார்களே?

இன்று சமூகத்தில் நேர்மை ஓரளவேனும் குடிகொண்டிருக்கும் இடங்களில் பிளாக்கும் ஒன்று. பிளாக்கர்களில் இந்தப் படத்தை புகழ்கிறவர்களை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். முதல் பிரிவினர் மூலப் படத்தை பார்க்காவதவர்கள். ஆகையானலேயே இந்தப் படம் கொடுக்கிற ஆச்சர்யத்தில் இது எந்தப் படத்தில் இருந்து எடுக்கப் பட்டிருந்தால் என்ன எனக்கு இது சந்தோஷம் தருகிறது என்ற எண்ணத்தில் எழுதுகிறார்கள். இரண்டாவது பிரிவினர் திருடுவதுதான் இன்று எல்லோரும் செய்கிற காரியமாக ஆகி விட்டதே பின் ஏன் இன்னமும் நாம் அதைப் பொருட்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அடுத்த வேலையைப் பார்ப்போம் என்ற முடிவிற்கு வந்தவர்கள். மூன்றாவது பிரிவினர் அது திருடப்பட்டது என்ற தகவலே தெரியாதவர்கள்.

இடதுசாரி எழுத்தாளர் பவா செல்லத்துரை கூட இந்தப் படத்தை வானளாவப் புகழ்ந்தாரே?

இடது சாரிகளிடம் இருந்தும் நேர்மை போய் விட்டது என்பதற்கான அடையாளம் தான் அது.அவர்கள் அவ்வப்போது நடத்துகிற கலை விழாவிற்கு சினிமா பிரபலங்கள் தேவைப் படுகிறார்கள். நேர்மை கீர்மை என்றெல்லாம் ஸ்ட்ரிக்டாக இருந்தால் அப்புறம் விழா நடத்த முடியாது. அதனாலேயே அவர்கள் கொஞ்சம் ஈவு சோவாக நடந்து கொள்ள முடிவு செய்திருக்கலாம்.

உதவி இயக்குனர்கள் நிறைய படிக்க வேண்டும் என்று மிஷ்கின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தகிறாரே.. பின்னணி என்னவாக இருக்கும்?

இரண்டு பின்னணிகளை நான் யூகிக்கிறேன்.

1. அவர்கள் புத்தகம் வாசிக்காமல் டிவிடி பார்த்துக் கொண்டிருப்பதால் தான் இவர் எடுக்கிற படங்கள் எல்லாம் எந்தப் படத்தின் மூலம் என்பதை கண்டு பிடித்து விடுகிறார்கள். அதைத் தவிர்ப்பதற்காக இருக்கலாம்.

2. இயக்கனர் ஆவதற்கு புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டால் சினிமாவில் சாதிக்கலாம் என்று வருகிறவர்கள் தடி தடி புத்தகங்களைப் பார்த்து விட்டு இயக்குனராவது இவ்வளவு கடினமான காரியமா என்று யோசித்து வராமலே போக க் கூடும். இதன் மூலம் போட்டியாளர்களைத் தவிர்க்கலாம்.

நந்தலாலா ; அயோக்கியம்-மிஷ்கின் என்று தலைப்பு போட்டிருக்கிறீர்களே! அது என்ன அயோக்கியம்?

உலக சினிமாவின் கதையை அயோக்கியத் தனமாய் திருடி இயக்குபவர்கள் இனிமேல் வெறும் இயக்கம் என்று போடாமல் அயோக்கியம் என்று போட்டால் படம் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். இல்லையென்றால் பசங்க பட இயக்குனர் பாண்டியராஜன், வெண்ணிலா கபடி குழு சுசிந்திரன் போன்ற நேர்மையானவர்கள் வரியையிலேயே மிஷ்கினும் இடம் பெறும் ஆபத்து இருக்கிறது.அப்புறம் நல்லவர்களுக்கான எல்லா மரியாதையும் மிஷ்கினுக்கும் கிடைக்கும்

இப்படி செய்வதை தவறு என்று உணர்ந்து மிஷ்கினோ அல்லது அவருடன் இருக்கும் எழுத்தாளர்களோ தங்களை மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறதா?

மிஷ்கின் மாற மாட்டார். அவர் இதில் ருஷி கண்டு விட்டார். அவருடை முந்தைய படத்திற்கும் மூலப் படமாக ஒன்றைச் சொல்கிறார்கள். அவர் இப்பொழுது இயக்கி முடித்திருக்கும் யுத்தம் செய்க்கும் மூலப்படமாக ஒரு படத்தை சொல்லியிருக்கிறார்கள். அவர் கமலுக்கு இரண்டு மூன்று கதைகள் சொன்ன போது கூட , கமல் நீங்களே யோசித்து உருவாக்கும் கதை இருந்தால் சொல்லுங்கள், டிவிடி கதைகள் வேண்டாம் என்று சொல்லி அனுப்பியதாக பத்திரிக்கை கிசு கிசுக்களில் செய்தி வந்தது. எனவே பார்வையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்காத வரை மிஷ்கின் மாறிக்கொள்ள வாய்ப்பில்லை.

எழுத்தாளர்கள் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.

இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை.

ஆனந்த விகடனில் நந்தலாலா படத்திற்கு 45 மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறார்களே?

நான் படித்த பள்ளியில் ஒரு மாணவன் இன்னொரு மாணவனைப் பார்த்து எழுதி , அவன் கண்டுபிடிக்கப் பட்டால், ஆசிரியர் பேப்பரின் எல்லா பக்கங்களையும் அடித்து விட்டு malpractice என்று எழுதி முட்டை போட்டு விடுவார்கள்.அதன்பின் அந்த மாணவன் யாரையும் பார்த்து எழுதுவே மாட்டான்.

ஆபாசமாக இருந்தது என்பதற்காக பாய்ஸ் படத்திற்கு ச்சீ என்று விமர்சனம் எழுதி சினிமா படைப்பாளிகளுக்கு எச்சரிக்கை வழங்கியது ஆனந்த விகடன்.

அப்படி ஒரு முறையேனும் ஒரு படத்திற்கு malpractice என்று போட்டு பூச்சியம் போடுவதை ஆனந்த விகடன் செய்தால் இந்தக் கதைத் திருடர்களிடம் இருந்து சினிமா தப்பிக்கும்.

நந்தலாலவிற்கே malpractice என்று போட்டு பூச்சியம் மார்க் கொடுத்திருக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன்.

'சினிமாவிற்கு போன சிற்றிதழ் ஆட்கள்' உலக சினிமா திருட்டிற்கு என்ன ரியாகட் பண்ணுகிறார்கள்?

ஒரு 'பிறபழ' சிற்றிதழ் எழுத்தாளர் இருக்கிறார்.அவர் உலக சினிமாவின் அத்தாரிட்டி.

என் நண்பன் ஒருவன் உதவி இயக்குனன்.

அவன் அடிக்கடி அந்த எழுத்தாளரைப் பார்க்கப் போவான். போகும் போதெல்லாம் ' இந்தப் படத்தை அப்படியே தமிழில் எடுக்கலாம் ' 'இந்தப் படத்தை அப்படியே தமிழில் எடுக்கலாம் 'என்று ஏதாவது ஒரு டிவிடியை எடுத்துக் காட்டுவாராம்.

அவருடைய ரகசிய அறையில் டிவிடியை மூன்று பிரிவாகப் பிரித்து வைத்திருப்பாராம். ஒன்று கதை திருடுவதற்கு எடுத்துக் கொடுத்து வசனம் எழுதும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான படங்கள்.இரண்டு தான் இயக்குனராகும் போது எடுத்துப் பயன் படுத்திக் கொள்வதற்கான படங்கள். மூன்று நாவலாகத் தழுவி எழுதிக் கொள்வதற்கான படங்கள்.

அவன் அந்தப் பிரிவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறான்.

ஆக சினிமாவிற்குப் போன சிற்றிதழ் ஆட்களில் சிலர் முதல் காரியமாக செய்வது உலக சினிமாவைக் காட்டிக் கொடுப்பது என்பதாகும். இரண்டாவதாக அந்த இயக்குனர் அந்தக் கதையை கற்பழிக்கும் விதமாக கூட்டிக் கொடுப்பது என்பதாகும். மூன்றாவதாக அதற்கு ஒரு சன்மானம் பெற்று பெருமிதமான வாழ்வு வாழ்வது என்பதாகும்.

சமீபத்தில் அந்த எழுத்தாளர் உலக சினிமா பற்றி எழுதிய ஒரு புத்தகத்தை புத்தக க் கடையில் பார்த்தேன். வசன வாய்ப்பிற்காக செய்து வைக்கப் பட்ட ஒரு பெரிய பிச்சைப் பாத்திரம் போல் இருந்தது.

4 comments:

Azhagan said...

"கமல் நீங்களே யோசித்து உருவாக்கும் கதை இருந்தால் சொல்லுங்கள், டிவிடி கதைகள் வேண்டாம்"...... Why?, copying from other films is HIS birthright?. How many of his films are "original"?.

Unknown said...

இதோ இப்போதுதான் ஒரு தர்மாவேசமான பிளாக் பதிவைப் பார்க்கிறேன். வாழ்த்துக்கள் யோகராஜ்.

Anonymous said...

Hai,
You seem to be aware of the real face of people and happenings! Well done!

Anonymous said...

well written...

Post a Comment