Tuesday, October 20, 2009

மீண்டும் தோழர் தமிழ்செல்வன் அவர்களுக்கு,

(நான் ‘ஆதவன் தீட்சன்யா என்னும் ஆள்காட்டி’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதற்கு தோழர் தமிழ்செல்வன் ஒரு பதில் எழுதியிருந்தார். அதற்கு நான் ‘தோழர் தமிழ்செல்வன் அவர்களுக்கு’ என்ற தலைப்பில் ஒரு பதில் எழுதியிருந்தேன். அதற்கும் அவர் ஒரு பதில் எழுதியிருந்தார். அந்த பதிலுக்கான பதில்தான் இது. புதியவர்கள் முந்தைய இரண்டு கட்டுரைகளையும் வாசித்து விட்டு வரவும்- நன்றி)

இதோ தோழர் தமிழ்செல்வனின் பதில்

மிக்க நன்றி தோழர்.தங்களின் அறிவுரைப்படி நடந்து கொள்ள கட்சியைக் கேட்டுக்கொள்கிறேன்.நிற்க. புலிகளை விமர்சித்து எழுதுவதே விஷ வார்த்தை என்றால் அது எப்படி சரியான பார்வை?காங்கிரஸ் தலவரைக் கொன்றதால் மட்டும்தான் காங்கிரஸ் ஈழப்போராட்டத்தை எதிர்க்கிறது என்று கூறுவது அரசியலற்ற பார்வை அல்லவா?அப்படியானால் முன்னர் புலிகளுக்கு ஆயுதப்பயிர்சி அளித்து ஆயுதங்களும் அளித்து பெரும் தொகையான பணமும் கொடுத்ததே இதே காங்கிரஸ் அர்சு அதை என்ன என்பது தோழர்? எல்லாமே அவர்களின் வர்க்க அரசியல் நிலைபாட்டிலிருந்துதான் செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டாமா?

ஒரு இயக்கத்தின் பல்வேறு மட்டத் தொண்டர்கள் ஒரே அறிவுத்தளத்துடன் இயங்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது மிகச்சரிதான்.ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை.இதேபோல சோவியத் ஏன் வீழ்ந்தது என்று கேட்டாலும் பல்வேறு தளங்களில் பணியாற்றும் மார்க்சிச்ட் தோழர்களிடமிருந்து ஒரே கருத்து வராது.கருத்தொற்றுமையை உருவாக்குவதற்கான போராட்டம்தானே கம்யூ.இயக்கத்தில் ஒரு முக்கியமான போராட்டம்.அதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
புலிகள் 100 சதம் புரட்சியாளர்கள் என்று நீங்கள் கருதுவதால் கோபத்துடன் எம்மைப் பார்க்கிறீர்கள்.நாங்கள் அப்படி பார்க்கலியே தெலைவா.ஜனநாயகக் குரல்கலை அழித்தது,கட்டாய ஆட்சேர்ப்பு,குழந்தைகலை படை முன்வரிசையில் ஆயுதங்களுடன் நிறுத்தியது,முஸ்லீம் மக்களைத் துரத்தியது,ஈழத்துக்காகக் குரல் கொடுக்கத் தன்னைத் தவிர வேறு யாரும் இல்லாமல் பார்த்துக்கொண்டது என எனக்கு விமர்சிக்கவும் புலிகளின் பாதையை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவும் பல காரணங்கல் இருக்கின்றன.அதற்காக உடனே நான் ராஜபக்‌ஷேயின் கைக்கூலி ஆகி விடுவேனா?இது என்ன பார்வை ?டெல்லியில் மட்டுமல்ல அஸ்ஸாம்,திரிபுரா,மராட்டி,குஜராத் என்ரு வேறு எந்த மாநிலத்திலும் கூட மார்க்சிஸ்ட்டுகள் இலங்கைத்தமிழர்க்ஜளுக்காகப்ம்போராட்டம் நடத்தவில்லை.தமிழ் நாட்டில் முன்பு என்ன போராட்ட வடிவங்களில் பிர அமைப்புகள் போராடினவோ அதே ஆர்ப்பாட்டம்,உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களைத்தான் தமிழகத்தில் மார்க்சிஸ்ட்டுகள் இப்போது நடத்துகிறார்கள்.இவ்வரிகளை எழுதும்போதே இதெல்லாம் எதுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன் தேவையில்லாமல் என்று மனதில் ஓடுகிரது.முகாம்களில் இருக்கும் மக்கள் உடனடியாக வீடு திரும்ப யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஆதரிப்பேன்.அந்தமனநிலை மட்டும்தான் இப்போதைக்கு எனக்கு இருக்கிரது.புலிகளை விமர்சிப்பது இப்போது தேவையற்றது.நீங்கள் கிலப்பி விட்டதால் பேசிவிட்டேன்.விடுங்க தோழர்.என விமர்சனத்தை மதித்து இவ்வளவு நீண்ட கடிதம் எழுதியமைக்கு என் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.மக்கள் முகாம்களிலிருந்து முதலில் வீடுகளுக்குப் போகட்டும்.மற்றதெல்லாம் பிறகு பேசிக்கொள்வோம்.யார் நிலைபாடு சரி பேச இப்போது அவசியமில்லை.நாம் பரஸ்பரம் நற்சான்றுகளையோ அவதூறுகளையோ அள்ளி வீசிக்கொண்டிருப்பதால் அங்குள்ள மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிரது?

தோழர் தமிழ்செல்வன் அவர்களுக்கு,

என் அறிவுரைப் படி நடந்து கொள்ள கட்சியை கேட்டுக் கொள்வதாக எழுதியிருந்தீர்கள்.

உங்கள் அறிவுரைப்படியே நடக்காத கட்சி என் அறிவுரைப் படியா நடக்கப் போகிறது.

இந்தியாவெங்கும் ஓடுகிற ரயில்களின் வழித்தடத்தை வேகத்தை ரயில்வேயில் வேலை பார்க்கிற ஒரு குமாஸ்தா எப்படி மாற்றி விட முடியாதோ அது போலத்தான் அங்கே நீங்களும் என்பதை நான் அறிவேன்.

நீங்கள் சொன்னது ஒரு கிண்டலுக்காகத்தான் என்பது எனக்குப் புரிகிறது.

நான் மிகவும் நேசிக்கிற தமிழ் சிந்தனையாளர் நீங்கள்.

இந்த ஈழப்போராட்டம் குறித்து அல்ல, வேறு ஏதாவது ஒரு நல்ல சிந்தனை வேறு ஒரு சமயத்தில் உங்களுக்குத் தோன்றும் போது கூட கட்சியிடம் சொல்லிவிடாதீர்கள்.

உங்கள் அறிவுரைப்படி நடந்து கொள்ள கட்சியை கேட்டுக்கொள்கிறோம் தோழர் என்று நீங்கள் என்னை கிண்டல் செய்தது போல அவர்கள் உங்களை கிண்டல் செய்வார்கள்.

சிபிஎம் கட்சியின் வடிவமைப்பு அப்படி. அங்கே யோசிக்கிற வேளையை பொலிட்பீரோ செய்யும். மற்ற அடிமட்ட வேளைகளை நீங்கள் செய்வீர்கள். பொலிட் பீரோவில் இந்தியாவின் தலை சிறந்த இடதுசாரி சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் நம்மை தவறாகவா வழி நடத்துவார்கள் என்று பொதுவான நம்பிக்கையில் தோழர்கள் இருப்பார்கள்.

ஆனால் பொலிட்பீரோவில் சிந்தனையாளர்கள் என்று யாருமில்லை. வெறும் சாதாரணமானவர்களே இருக்கிறார்கள் என்பது நெருங்கிப் பார்க்கும் போதுதான் தெரிய வரும்.

இதை ஏதோ காழ்ப்புணர்ச்சியில் நான் சொல்லவில்லை.

சென்ற பதினைந்து ஆண்டுகளில் இந்தியாவின் சிந்தனைத் தளத்தை தாக்கத்திற்கு உள்ளாக்கிய இடது சாரிகளின் புத்தகங்களை இந்திய புத்தக சந்தையில் தேடினேன். சில கட்சி அறிக்கைகளைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை.

கட்சி அறிக்கை அன்றி ஒரு புத்தகமும் எழுதாதவர்கள்தான் பொலிட்பீரோ உறுப்பினர்கள்.

மார்க்ஸைப் போலவும் எங்கெல்ஸைப் போலவும் லெனினைப் போலவும் ஸ்டாலினைப் போலவும் சிந்தனையில் பரவசத்தை உண்டாக்கும் ஒரு வாசகத்தையும் இவர்கள் ஒரு போதும் உதிர்த்த தில்லை.
சக்கரையில்லா ஊருக்கு இழுப்பைப் பூ சக்கரை என்பது போல இவர்களே நமக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள்.

இவர்களின் சிந்தனைப் படியும் வழிகாட்டுதல் படியும் நடக்கும் போது ஈழப் போராட்ட விஷயத்தில் நீங்கள் எப்படி சரியான பாதையை தேர்ந்தெடுக்க முடியும்?

ஒரு இயக்கத்தின் பல்வேறு மட்டத் தொண்டர்கள் ஒரே அறிவுத்தளத்துடன் இயங்க வேண்டும் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்க வில்லை.

குறைந்த பட்சம் இன்று ஈழப்போராட்டத்திற்கு எதிராக செயல்படும் பெருந்தலைகளாகிய நீங்கள், மாதவராஜ், ஆதவன் தீட்சன்யா ஆகிய மூவராவது ஆளுக்கொன்றாக பேசிக்கொண்டிருக்காமல் ஒரு அறிக்கை தயார் செய்து ஒரே அறிக்கையை பேசக்கூடாதா என்பதுதான் எனது ஆதங்கம்.

புலிகள் ஜனநாயகக் குரல்களை அழித்தவர்கள் தான்.கட்டாய ஆட்சேர்ப்பு செய்தவர்கள் தான். குழந்தைகளை படை முன்வரிசையில் ஆயுதங்களுடன் நிறுத்தியவர்கள் தான். முஸ்லிம் மக்களை துரத்தியவர்கள் தான். ஈழத்திற்காக குரல் கொடுக்க தன்னைத் தவிர வேறு யாரும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர்கள் தான்.

இவை எல்லாவற்றிற்கும் உலகின் புரட்சிகர இயக்கங்கள் ஏற்றுக்கொள்ளும் நியாயங்களும் தர்மங்களும் அறங்களும் இருக்கின்றன.

உங்கள் பார்வை படியே, இவைகள் எல்லாமும் தவறு என்றே வைத்துக் கொள்வோம். இவைகளுக்காகத்தான் நீங்கள் ஈழப்போராட்டத்தை எதிர்க்கிறீர்களா?

நீங்கள் மேற்சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் விடுதலைப்புலிகள் இயக்கம் உருவான பின் நடந்தவை.

ஆனால் அதற்கு முன் 1948 ல் இருந்து 1977 வரை தமிழ் மக்களுக்கு சம உரிமை கேட்டு தந்தை செல்வா அவர்களின் தலைமையில் அறப்போராட்டம் நடந்தது.

அப்பொழுது தமிழகத்தில் உங்களது தந்தையர் பி.ராமமூர்த்தி போன்றோர் தலைவர்களாக இருந்தார்கள். அவர்கள் என்ன தமிழகமே அதிரும் வண்ணம் மக்களைத் திரட்டி ஈழத் தமிழ் மக்களுக்காகப் போராடினார்களா என்ன?

நீங்கள் எதிர்ப்பது இருக்கட்டும், சிபிஎம் ஏன் ஈழப்போராட்டத்தை எதிர்க்கிறது என்பதையாவது தெரிந்து கொண்டு எதிருங்கள் தோழர்.

அன்றும் சரி இன்றும் சரி சிபிஎம் செய்வது தமிழ் துரோக ஈழ துரோக அரசியல் தான்.

நான் விமர்சனம் செய்வதை விஷம் என்று சொல்லவில்லை. விமர்சனம் செய்வதை மட்டுமே தொழிலாகச் செய்து கொண்டிருக்கும் போது விமர்சனம் விஷமாகி விடுகிறது.

குஜராத்திலும் மேற்கு வங்கத்திலும் நீங்கள் ஈழத்தமிழர்களுக்காக போராடாமல் இருப்பது வேறு. ஆனால் டெல்லியில் போராடாமல் இருப்பது வேறு. இது உங்களுக்கும் தெரியும்.டெல்லியில் போராடினால் பிரச்சினை தீரும். டெல்லியில் போராடாமல் தமிழகத்தில் மட்டும் போராடுவது , கட்சியில் ஏற்பட்டிருக்கிற தமிழ் உணர்வை கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ள செய்கிற ஏமாற்றுக் காரியம் தான்.

யார் நிலைபாடு சரி என்று பேச இப்போது அவசியமில்லை என்கிறீர்கள்.நாம் பரஸ்பரம் நற்சான்றுகளையோ அவதூறுகளையோ அள்ளி வீசிக்கொண்டிருப்பதால் அங்குள்ள மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது என்று கேட்கிறீர்கள்.

நான் அப்படி நினைக்கவில்லை தோழர்.

நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சிபிஎம்மின் தலைமைக்கு அழுத்தும் கொடுத்து, சிபிஎம்மின் 60 எம்பிக்களும் ஒரே குரலில் ஈழ மக்களுக்காக பாராளுமன்றத்தில் முழங்கி, பாராளுமன்றத்தை ஒரு நாள் ஸ்தம்பிக்கச் செய்தால் அங்கு ஈழத்தமிழர்கள் என்றென்றும் கண்ணீர் விட வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.

அதை கூட செய்வதற்கான மனிதாபிமானம் இல்லாமல் புலிகளின் மீது எங்களுக்கு விமர்சனம் இருக்கிறது என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிற போது தான் வேதனை ஏற்படுகிறது.

8 comments:

கல்வெட்டு said...

//

தமிழ்செல்வன்...
ஒரு இயக்கத்தின் பல்வேறு மட்டத் தொண்டர்கள் ஒரே அறிவுத்தளத்துடன் இயங்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது மிகச்சரிதான்.ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை.//

//
யோகராஜ்..
இந்தியாவெங்கும் ஓடுகிற ரயில்களின் வழித்தடத்தை வேகத்தை ரயில்வேயில் வேலை பார்க்கிற ஒரு குமாஸ்தா எப்படி மாற்றி விட முடியாதோ அது போலத்தான் அங்கே நீங்களும் என்பதை நான் அறிவேன்.//

**

ஒரு இலக்கை அடைய ஒரு கருத்தின் அடிப்படையில் பலர் இணைந்து செயல்படுவதுதான் இயக்கம். எனது கருத்து வேறு நான் சேர்ந்துள்ள சொம்பு இயக்கத்தின் கருத்து வேறு என்று எப்படி இருக்க முடியும் ????

குமாஸ்தா என்பது வேலை. சோற்றுக்காக வாழ்வியல் காரணக்களுக்காக பிடிக்காவிட்டாலும் நிர்பந்தங்களுக்காக குப்பை கொட்டுவது.

ஆனால் இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொள்வது நிர்பந்தங்கள் அற்ற சுயமாக இருக்க வேண்டும்.

என்ன கருமத்துக்கு கொள்கைகள் பிடிக்காத அல்லது தனக்கு ஒத்துவராத கட்சியில் வலிந்து இணைத்துக் கொள்ளவேண்டும்... என்பது இதுவரை எனக்குப் புரியவில்லை.

**

சொம்பு தூக்குவது என்று அடிமைகள் முடிவு செய்துவிட்டால் அவர்களுக்கு கட்சிகளின் பேதங்கள் தெரிவது இல்லை. சொம்பை வைத்துவிட்டு சுயமாக சிந்திக்கப் பழகலாம். இது நேற்று அரம்பித்த சீமான் கட்சிவரை அனைத்திற்கும் பொருந்தும்.

கல்வெட்டு said...

// யோகராஜ்..
நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சிபிஎம்மின் தலைமைக்கு அழுத்தும் கொடுத்து, சிபிஎம்மின் 60 எம்பிக்களும் ஒரே குரலில் ஈழ மக்களுக்காக பாராளுமன்றத்தில் முழங்கி, பாராளுமன்றத்தை ஒரு நாள் ஸ்தம்பிக்கச் செய்தால் அங்கு ஈழத்தமிழர்கள் என்றென்றும் கண்ணீர் விட வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.//

காமெடி பீஸ் !!

தமிழக ‍ கேரள (இந்தியாவிற்குள் இருக்கும்) மாநிலப் பிரச்சனைகளில் தேசிய அள்விலான கொள்கை என்று ஒன்றும் இல்லை யாருக்கும். எல்லாம் பிரித்தாளும் மாநில‌ ஓட்டரசியல். இவர்களிடம் போய் ( சிபிஎம் மட்டும் அல்ல எல்லா புண்ணாக்கு கட்சிகளும்) அயல்நாட்டு பிரச்சனைக்கு இன ரீதியான ஆதரவு கேட்டால் எப்படி?

venmani said...

புலிகளுக்கு முன் உங்கள் நிலை என? என்று போலிகளை (சி.பி.எம்.) விவாதத்திற்கு உள்ளிழுப்பதை விட
1.பாலஸ்த்தின விடுதலைக்கு, போலிகளின் ஆதரவு எந்த அடிப்படையில் ?

2.பங்களா தேசத்தின் விடுதலை, போலிகளின் ஆதரவு மற்றும் செயல் எந்த அடிப்படையில் ?

3.தேசம், தேசிய இனம் பற்றிய மார்க்ஸ்,லெனின், ஸ்டாலின் ஆகியோர் பார்வையில், போலிகளின் நிலை என்ன ?

4.ஈழ விடுதலையை எதிர்ப்பதற்கு போலிகளின், மார்க்சிய கோட்பாட்டு விதியென்ன?

Anonymous said...

யோகராஜ் வணக்கம்.

உங்கள் எழுத்து எனக்குப்பிடிக்கும். உங்கள் கோபம் எனக்குப் பிடிக்கும்.
அதனாலேயே உங்களுக்குப்பிடிக்கிற எல்லாம் எனக்குப் பிடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.
பொதுவாகத் தமிழர்களுக்கு இலங்கை வானொலி, இலங்கைத்தமிழர்கள், அவர்களைத் தொடர்ந்து தமிழர்
போராட்டங்களும் பிடித்துப் போயிருந்தது. அந்த ஏழுகோடித்தமிழர்களுக்குள் எத்தனை அரசியல், எத்தனை ஜாதி
எத்தனை மதம் இருக்கிறது என்பதை உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. ஐநூறு வீடுகள் இருக்கிற ஒரு கிராமத்தில்
ஒருபகுதி அஜித்தை போற்றினால் இன்னொரு பகுதி விஜய்யை தொழுகிற நிலைமை அபிமானத்தால் அல்ல புரையோடிப்போன ஜாதியால். அவர்கள் எல்லோரும் ஒரே குரலில் தான் பேசவேண்டும் என்று ஆசை கூடப்படமுடியாது. அதுதான் மனித மூளையின் விநோதம், விஞ்ஞானம், புரிதல்.

ஆனாலும் இந்த ஈழ விவகாரத்தில் நாரடிக்கப்பட்டது ராஜபக்ஷேயைவிட கம்யூனிஸ்டுகளும், தமுஎச நண்பர் களும்தான் அதிகம் என நினைக்கிறேன். அதுதான் ஏனென்றே எனக்கு விளங்கவில்லை. ஆசையா, கோபமா ?. அதுகூட பரவாயில்லை. வாழ்நாள் முழுக்க குடும்பங்குட்டியை விட்டுவிட்டு, ஊர் ஊராய் அலைந்து ஒரு இம்மியாவது சமத்துவ விஞ்ஞானத்தை போதித்துவிடலாம் என அழைகிற தோழர்களை மிகக்கொச்சையாய் இழிவு படுத்துவது தான் ஏனென்று விளங்கவில்லை. எனக்குத் தெரிந்து இப்படித் தோழர்கள் யாரும் கப்பல் வாங்கி விட்டதாகத் தெரியவில்லை.

மிஞ்சி, மிஞ்சிப்போனால் கிடைக்கிற டிஏ வில் ரெண்டு புதுப்பேண்ட், புதுச்சோல்னாப்பை வாங்கியிருக்கலாம்.
ராஜபக்ஷேயிடம் டிடி வாங்கினார்,செக்வாங்கினார் என்று சொல்வதை தூரக்கிழக்கு நாடுகளில் இருக்கும் சிலர் உண்மையோ என்று பதறுகிறார்கள். அதனால் அவர்கள் எழுதிய பல நல்ல எழுத்துக்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்க நேரிடுகிறது. நிஜத்தில் குற்றம் சுமத்தப்பட்ட தோழர்கள் இன்னும் மாதக்கடைசியில் செலவுக்கு கடன் வாங்கிக்கொண்டு அலைகிறார்கள் இப்படி விமர்சனம் ஆரோக்கியமானதல்ல யோகராஜ். அனுதாபத்தையும், ஒத்தகருத்தையும் சுடுசொல் கொண்டு விலைக்குவாங்க முடியாது. உங்களுக்குப்பிடித்த உங்கள்தாயை என்னால் பூஜிக்கமுடியுமா எனத்தெரியாது. ஆனால் மதிக்கத்தெரியும். அதை நான் உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கலாம்.

ச.தமிழ்ச்செல்வன் said...

வாசித்தேன் தோழா மார்க்சிஸ்ட்டுகள் சொல்லி மத்திய அரசு ஒன்றுமே கேட்கவில்லை என்பதால்தானே ஆதரவை வாபஸ் பெற்றார்கள்.நீங்கள் சொல்வதுபோல நான் சொன்னவை எல்லாம் புலிகள் மீதான விமர்சனம்தான்.சிபிஎம் நிலைபாடு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி என்பதிலிருந்துதான் ஈழ ஆதரவுப்போராட்டங்களில் பங்கேற்கவில்லை என்பது உலகறிந்த - நீங்களும் அறிந்த ஒன்றுதான்.அது துரோகம் என்றால் அது உங்கள் கருத்து.அப்படிச் சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு என்பதை அங்கீகரித்துத்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.தமிழகமே ஒன்று திரண்டு ஈழத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை.சிபிஎம் என்ன பெரிய சக்தி? சும்மா பேச்சுக்குச் சொல்லி நீங்கள் விமர்சித்துக்கொள்ளலாம்.எனக்கும் மாதவராஜுக்கும் ஆதவன் தீட்சண்யாவுக்கும் வரிக்கு வரி ஒரே கருத்து இருந்தால் நீங்கள் சொல்வது போல கூட்டாக அறிக்கை விடலாம்தான்.
அப்புறம் பொலிட்பீரோ உறுப்பினர்கள் எழுதிய ஆங்கிலப்புத்தகங்கள்(சில தமிழிலும்) வந்துதான் இருக்கின்றன.ஒரு வேகத்தில் அப்படி வெள்ளையடித்து விடுகிறீர்கள்.ஷோபா சக்தி விஷயத்திலும் அப்படியேதான் எழுதினீர்கள். தமுஎகச அல்லது கட்சியின் எந்தக் கிளைக்கூட்டத்தில் கூட பேசவோ விவாதிக்கவோ ஷோபா ஷக்தியை நாங்கள் இன்றுவரை அழைத்ததில்லை.அவருக்கு எங்கள் மீதும் எங்களுக்கு அவர்மீதும் விமர்சனங்கள் உண்டு.அவரை என்றில்லை யாரையெல்லாம் எங்கள் நெட் ஒர்க்கில் இருப்பதாகப் பலரும் குற்றம் சாட்டுகிறார்களோ அவர்கள் யாருமே எங்கள் மேடைக்கோ எங்கள் அலுவலகங்களுக்கோ கூட வந்ததில்லை.ஷோபாவின் புத்தகத்தை மட்டுமல்ல மு.திருநாவுக்கரசின் புத்தகங்களையும் கூட நாங்கள் கக்கத்தில் வைத்துக்கொண்டு திரிகிறோம் .நீங்கள் பார்க்கவில்லை அல்லது பார்த்தவர்கள் சொல்லவில்லை.

ஒருமுறை ஜகத் கஸ்பார் என்னிடம் ஒரு நேர்ப்பேச்சின்போது குறிப்பிட்டது இப்போது நினைவுக்கு வருகிறது.பிரகாஷ் காரத் மட்டும் மன்மோகனிடம் பேசட்டும் இதோ ஒரு சொடக்குப் போடும் நேரத்தில் போர் முடிவுக்கு வந்துவிடும்.கஸ்பார் அப்படிப்பேசிய ஓரிரு நாளில் ஆதரவை விலக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.எனக்கு சிரிப்பும் வருத்தமும் அப்போதும் வந்தது.இப்போதும் வருகிறது.நாம பேசி ஒண்ணும் ஆகப்போறதில்லை.

இரு நேரெதிர் நிலைப்பாடுகளில் நிற்கும் நாம் -அதிலும் மிக உறுதியாக நிற்கும் நாம்- முகாம்களில் உள்ள மக்கள் வீடு திரும்ப வேண்டும் என்கிற புள்ளியில்தான் இன்றைய தேதியில் சந்திக்க முடியும் என்பதைத்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன் தோழா.மற்ற்தெல்லாம் இன்னும் விரிவான கள ஆய்வுகளுடன் இன்று சிறைப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மக்கள் பேசத்துவங்கியபின் பேசிக்கொள்ளலாம்.நன்றி.

Anonymous said...

யோகு,
காங்கிரஸ் புலிகளை வளர்த்ததும் பின்னர் புலிகள் 'விடுதலை மட்டுமே எங்களுக்கு வேண்டும்' என்று இந்தியாவையே எதிர்த்தபோது அழிக்க முனைந்து முடிவில் அழித்ததும் அவர்களின் ஆதிக்க வர்க்க நிலைப்பாடு என்றால், விடுதலைக்காகப் போராடிய புலிகளை எப்போதும் சி.பி.எம் எதிர்த்தது, எதிர்ப்பது எந்த வர்க்க நிலைப்பாடு ?

இந்திய அரசும் காங்கிரஸும் எத்தனையோ முறை புலிகளை சந்தித்து பேசியிருக்கின்றன. வைகோ, திருமா கூட சந்தித்திருக்கிறார்கள். இத்தனை வருடங்களில் ஒரு முறையாவது சி.பி.எம் புலிகளைச் சந்தித்திருக்கிறார்களா ? ஏன் ? கூட்டணி வைக்கும் காங்கிரஸை விட புலிகள் பிற்போக்கானவர்களா ? காங்கிரஸ் அரசு செய்யாத மனித உரிமை மீறல்களா (காஷ்மீர், திரிபுரா..etc)? நூறு சதவீதம் புரட்சியாளர்கள் ரஷ்யாவில் கூட இல்லை என்பது அவர்களே ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம். புலிகள் மட்டும் அக்மார்க் 100% தரத்தோடு இருந்தால் தான் ஒத்துக்கொள்வோம் என்றால்...

'தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற விஷயத்தில் பிரிந்து போகும் உரிமையை தேசிய இனங்களுக்குக் கொடுப்பது தவறு.. அது ஏகாதிபத்திய ஆதிக்க சக்திகளுக்கு பிரித்தாள வசதியாய்ப் போய்விடும்' என்பது சி.பி.எம் மின் (கற்காலத்திய)கண்ணோட்டம். புலிகள் பிரிந்து போகும் உரிமை கேட்டுப் போராடுவதால் அவர்கள் வேண்டாதவர்களாகிப் போனார்கள். ஒடுக்கப்படும் ஒரு இனத்திற்கு தலையாய பிரச்சனை அந்த ஒடுக்குமுறையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது தானே தவிர எப்போதோ நைசாக வரப் போகும் ஏகாதிபத்தியம் அல்ல. சி.பி.எம் தவிர மற்ற எல்லோரும் (சுயநிர்ணய உரிமைக்காக போராடுபவர்கள்) ஏகாதிபத்தியத்தை புரிந்து கொள்ளவே இயலாத மடையர்கள் என்ற எண்ணம் சரியா? இத்தினியூண்டு இலங்கை நாடு இம்மாம் பெரிய இந்திய ஏகாதிபத்தியத்தை கம்யூனிசப் பிண்ணணி இல்லாமலேயே இவ்வளவு வருடங்கள் சமாளித்தது எப்படி ?

சரி விடுங்கள். 'ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு.. அரசியல் தீர்வு' என்கிற சி.பி.எம் மின் கருத்தை வலியுறுத்த மாநிலக்குழு உறுப்பினர்கள் எத்தனை பேர், எத்தனை தடவை இலங்கை சென்று அங்குள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அல்லது அட்லீஸ்ட் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரையாவது சந்தித்துப் பேசி கருத்துக்களை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள் இந்த 33 வருடங்களில்?

முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபோது அதற்காக வந்து ஒரு மலர் வளையம் வைத்துவிட்டால், முத்துக்குமாரின் சார்பாக பேசிவிட்டால் தங்களை அரசு புலிகள் லிஸ்டில் சேர்த்துவிடுமோ என்று பயந்து கம்மென்று உடகார்ந்திருந்தவர்களல்லவா நம் தோழர்கள். இல்லை 'ஈழ மக்களுக்காக மனம் வருந்தி ஒரு தமிழ் இளைஞன் இறந்து போவது சரியா ? தவறா?' என்று பொலிட்பீரோவில் முடிவெடுத்த பின் தான் மாலை போடப் போகலாம் என்று உட்கார்ந்திருந்தார்களோ என்னவோ. இதுவரை பொலிட் பீரோ கூடி இது பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. ஏன்?

Anonymous said...

யோகராஜ்..
//டெல்லியில் போராடினால் பிரச்சினை தீரும். டெல்லியில் போராடாமல் தமிழகத்தில் மட்டும் போராடுவது , கட்சியில் ஏற்பட்டிருக்கிற தமிழ் உணர்வை கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ள செய்கிற ஏமாற்றுக் காரியம் தான்.//

இந்தக் கருத்தை அலசிப் பார்க்க கூட விரும்பாமல் தோழர்களின் ‘நியாயப்டுத்தும்’ பதில்களைப் பாருங்கள்..

தமிழ்ச்செல்வன்..
//சிபிஎம் என்ன பெரிய சக்தி? சும்மா பேச்சுக்குச் சொல்லி நீங்கள் விமர்சித்துக்கொள்ளலாம்.//

பெரிய சக்தி சின்ன சக்தி என்பதல்ல முக்கியம் தோழர். போராட விருப்பமிருக்கிறதா இல்லையா என்பது தான். வங்காளத்திலும், கேரளத்திலும் மையம் கொண்டிருக்கும் தலைமைக்கு ஈழப்பிரச்சனைக்காக தீவிரமாக மத்திய அரசை நெருக்குவது என்பதில் விருப்பமில்லை என்பது தான் உண்மை. அதனால் சும்மா இங்கு மாநில எதிர்க்கட்சிகள் செய்யும் அதே கண்டனம், தர்ணா என்ற ஒரு நாள் கூத்துக்களை சி.பி.எம்மும் செய்து திருப்திப்பட்டுக் கொண்டது. நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் தோழர் மே 1 - 17ம் தேதிகளில் நிலைமை மிக மோசமாக மாறிய போது ஒரு மத்திய தலைமையோ, மாநிலத் தலைமயோ அவசரக்கூட்டமாவது கூடி ஆலோசித்ததாவது உண்டா ? பார்லிமண்டிலிருந்து 60 எம்.பி.க்களும் ஒரு நான்கு நாள் வெளிநடப்புச் செய்திருந்தால் விவகாரம் கலைஞரின் கடிதங்களைத் தாண்டி டெல்லியில் பேசப்பட்டிருக்குமா இல்லையா ?

காமராஜ்..
//ஆனாலும் இந்த ஈழ விவகாரத்தில் நாரடிக்கப்பட்டது ராஜபக்ஷேயைவிட கம்யூனிஸ்டுகளும், தமுஎச நண்பர் களும்தான் அதிகம் என நினைக்கிறேன். அதுதான் ஏனென்றே எனக்கு விளங்கவில்லை... அனுதாபத்தையும், ஒத்தகருத்தையும் சுடுசொல் கொண்டு விலைக்குவாங்க முடியாது.//

அதுதான் எங்களது சுடுசொல்லின் காரணமும், ஆதங்கமும். ஒரு பயனும் எதிர்பாராமல் நன்றாக உழைக்கும் சி.பி.எம் தோழர்கள் இப்படித் தவறாக வழிநடத்தப்படுகிறார்களே என்பது தான். உங்கள் உழைப்பும் வீணாகத்தானே போகும். யோசியுங்கள் தோழர். இந்திய அரசு ‘இறையாண்மை’ பேசுகிறது. சி.பி.எம்மும் அதே இறையாண்மை பேசுகிறது. உங்களுக்கும் காங்கிரஸூக்கும் வித்தியாசம் இல்லையா ?

Anonymous said...

நன்றி யோகாராஜ்.
பின்னூட்டம் பார்த்தேன். மீண்டும் சந்திக்கிற நேரம் நெருடல் இல்லாமல் முகமன் சொல்லிக்கொள்ள இடம் வேண்டும். விவாதங்கள் மறந்துபோய் வார்த்தைகள் மட்டும் நின்று போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான வார்த்தைகளில் என்னவேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். இன்னும் காலம் இருக்கிறது.

Post a Comment