Saturday, May 29, 2010

இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு 15 நிமிடத்தில் தீர்வு;மோடிமஸ்தான் பிரகாஷ் காரட்டின் சாகசம்

கடந்த நான்கு ஐந்து தினங்களாக சென்னை அரசியல் ஆர்வலர்களிடையே பெரும் பரபரப்பு நிலவிக் கொண்டிருந்தது.எஸ் எம் எஸ்களும் இமெயில்களும் பறந்த வண்ணம் இருந்தன.
சிபிஎம்மின் தமிழ் மாநிலக்குழு ‘ இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு’ என்ற தலைப்பில் ஒரு கருந்தரங்கம் நடத்த இருப்பதாக அறிவித்தது தான் இந்த பரப்பிற்கு காரணம். அதிலும் அவர்களுடைய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரட்டே நேரடியாக வந்து அந்தத் தீர்வை உரையாக வழங்கப் போகிறார் என்ற தகவலும் பரபரப்பிற்கு கூடுதல் காரணம்.

என்னையும் இந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஏனென்றால் இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஈழத்தமிழர் பிரச்சினை சம்பந்தமாக எதையும் தெளிவாக பதிவு செயததில்லை. ஆங்காங்கே கிடைக்கிற பதிவுகள் எல்லாம் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியதர வர்க்க தொழிற்சங்கத் தலைவர்கள் கட்சித் தலைமையின் விருப்பத்திற்கேற்ப தான்தோன்றிகளாக தனக்குத் தோன்றும் எல்லாவற்றையும் பதிவு செய்ததுதான். அவர்களில் பலர் சிங்கள அரசு உலகின் புனிதமான அரசுகளில் ஒன்று , இந்த விடுதலைப் புலிகள்தான் அங்கிருக்கிற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற ரீதியிலேயே தங்களுடைய பதிவுகளை செய்திருக்கிறார்கள்.

அவர்களை குறை சொல்லி ஒன்றும் பயனில்லை. அவர்கள் அப்படியே வளர்ந்து விட்டார்கள்.

கட்சி ஒரு முடிவை தீர்க்கமாக சொல்லி விட்டால் அதையே கிளிப்பிள்ளைப் போல சொல்லிக் கொண்டிருப்பார்கள். கட்சி எதையும் திட்டவட்டமாக சொல்லாத கால கட்டத்தில் கட்சியின் உள் மனதை புரிந்து கொண்டு ஆளுக்கொன்றாக கத்திக் கொண்டிருப்பார்கள். ஈழப் பிரச்சினையிலும் அவர்கள் அவ்வாறுதான் ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பாவம் சிங்கள அரசை ஒரு இனவாத அரசு என்றாவது சொல்லலாமா என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. விடுதலைப் புலிகளை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ராஜபக்ஷேவை இயேசு கிறிஸ்த்து என்று சொல்லும் இடம் வரை சென்றார்கள். இரயாகரனையும் ஷோபாசக்தியையும் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இடத்தில் வைத்துப் பார்த்தார்கள்.
முதன்முறையாக மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை ஒரு விஷயத்தை பதிவு செய்கிறது. அது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் நானும் எனது நண்பர்களும் சென்றிருந்தோம்.

மிகவும் கசப்பான அனுபவமாக இருந்தது அந்தக் கூட்டம். தமிழர்கள் மீதான துரோக அரசியலை அவர்கள் ஒரு போதும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்ற முடிவிற்கே நாங்கள் மறுபடியும் வர நேர்ந்தது.

முதலில் டி.கே.ரங்கராஜன் பேசினார். அவர் ஏன் இந்த சமயத்தில்இந்தக் கூட்டம் நடத்தப் படுகிறது என்பதற்கு சொன்ன காரணம் ஆச்சர்யமாக இருந்தது. போர் முடிந்து ஒரு வருடம் ஆகி விட்டது. போர் முடிந்தப் பின் ராஜபக்ஷே செய்வதாக சொன்ன வாக்குறுதிகள் எதையும் இந்த ஒரு வருட காலத்தில் நிறைவேற்ற வில்லை. அதனால் தான் அது குறித்து என்ன செய்யலாம் என்று கலந்து பேசி இங்கே வந்திருக்கிறோம் என்றார். அவர் பேச்சையே இப்படித்தான் துவங்கினார்.

அவருக்கு அங்கே நடந்த போர் ஒரு விஷயமாக இல்லை. அந்தப் போரில் லட்சம் பேர் வரை கொல்லப்பட்டது அவருக்கு விஷயமாக இல்லை. அவர்கள் மீது தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் எல்லாம் பயன்படுத்தப் பட்டது அவருக்கு விஷயமாக இல்லை. ராஜபக்ஷே புரிந்த போர்க்குற்றங்கள் விஷயமாக இல்லை. நிகழ்ந்த கற்பழிப்புகள், கருகிய குழந்தைகள், இடிந்த வீடுகள், எரிந்த வாழ்வுகள் என்று எதுவும் விஷயமாக இல்லை.

அங்கு நடந்த போர் சரியான போரே. போர் என்றால் அப்படித்தான் இருக்கும் அதை நாம் குறை சொல்ல முடியாது. அதிலெல்லாம் எங்களுக்கும் ராஜபக்ஷேக்கும் ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் போர் முடிந்தப் பின் அவர் தமிழ் மக்களுக்கு செய்வதாக சொன்ன வாக்குறுதிகள் எதையும் அவர் பின்பற்ற வில்லை. அந்த ஒரு விஷயத்தில் தான் எங்களுக்கும் அவருக்கும் சிறு மன வேறுபாடு ஏறபட்டிருக்கிறது என்பதாக இருந்தது அந்தத் தொனி.

பேச்சின் இடையே மிகவும் சாமர்த்தியமாக கவனமாக விஷமாக டி.கே ரங்கராஜன் ஒரு வாக்கியத்தைச் சொன்னார். ‘ எனக்குக் கிடைத்த தகவலின் படி பத்தாயிரம் பொதுமக்கள் போரின் போது கொல்லப் பட்டிருக்கிறார்கள் ‘ என்றார். இந்த பத்தாயிரம் என்ற எண்ணிக்கை ராஜபக்க்ஷே, பொன்சேகா சொல்லும் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கை.

உலகெங்கும் ஈழ ஆதரவாளர்கள் போரில் 1 லட்சம் பேர் இறந்து போனதாக ஆதாரங்கள் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கவிஞர் மனுஷ்யபுத்திரன் அந்த எண்ணிக்கையைப் பற்றி எழுதும் போது, ‘’இன்றுவரை முள்ளிவாய்க்கால் படுகொலை தினங்களில் அழிக்கப்பட்டவருக்குக் குறைந்த பட்ச நியாயம் கூட வழங்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஒரு சரியான எண்ணிக்கை கூட இல்லை. அவர்கள் இந்த உலகத்தின் கண்களிலிருந்து முழுமையாக மறைக்கப்பட்டு விட்டார்கள். அவர்களது சடலங்கள் எங்கே இருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது. இன்றும் ஹிட்லரின் மரண முகாம்களைப் பற்றி நாம் நெஞ்சுருகப் படிக்கிறோம். ஆனால் நம் கண்ணெதிரே இந்த யுத்தத்துடன் தொடர்பில்லாத பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகக் கொடூரமாக, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க அழிக்கப்பட்டதைப் பற்றி யாருக்கும் எந்த மன அதிர்ச்சியும் இல்லை. மாறாக, பட்டப்பகலில் இவ்வளவு வெளிச்சத்தில் இந்தக் கொலைகளை நிகழ்த்தியவர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல அவசியம் இல்லாதவர்களாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்களது அரியணைகள் மேலும் பொலிவு பெற்றுள்ளன.’’ என்று எழுதுகிறார்.

தமிழர் எதிரிகளில் கடைந்தெடுத்த எதிரிகளான ராஜபக்ஷேவும் பொன்சேகாவும் எண்ணிக்கையை சொல்லாமல் குறைந்த உயிர்களைப் பலி கொண்டு இந்த போரில் வென்றோம் என்கிறார்கள். டிகே ரங்கராஜன் போரில் நடுவில் நின்று பிணங்களை எண்ணியவர் போல பத்தாயிரம் என்று ஒரு எண்ணிக்கை சொல்கிறார்.

ஈழ ஆதரவாளர்கள் இறந்தவர்களின் எண்ணிக்கையை கூட்டிச் சொல்லலாம். நீங்கள் விரும்பிய படி நாங்கள் சொல்ல முடியுமா என்று ச.தமிழ்செல்வன் போன்றவர்கள் அடிக்கடி கேட்கிறார்கள்.

ஈழ ஆதரவாளர்கள் இந்த எண்ணிக்கையை கூடுதலாகச் சொல்லாம். உலக கவனத்தை ஈழத்தின் பால் ஈர்ப்பதற்காக. ராஜபக்ஷே மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இந்த எண்ணிக்கையை குறைத்துத்தான் சொல்வார்கள்.போர்க்குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்காக.
ஆனால் நடுநிலையாளர்களும் மனிதாபிமானிகளும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் சொன்ன வாக்கியத்தைத்தான் சொல்வார்கள். ’இன்றுவரை முள்ளிவாய்க்கால் படுகொலை தினங்களில் அழிக்கப்பட்டவருக்குக் குறைந்த பட்ச நியாயம் கூட வழங்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஒரு சரியான எண்ணிக்கை கூட இல்லை. அவர்கள் இந்த உலகத்தின் கண்களிலிருந்து முழுமையாக மறைக்கப்பட்டு விட்டார்கள். அவர்களது சடலங்கள் எங்கே இருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது.’

டிகே ரங்கராஜனைப் போல சிங்கள இனவாத அரசின் மனம் குளிரும்படியான பத்தாயிரம் என்ற எண்ணிக்கையை சொல்ல மாட்டார்கள்.

உலகந்தழுவிய மனித நேயம் பேசுகிற இவர்களுக்கு ஈழ விஷயம் குறித்து மட்டும் இப்படி விஷப்பிரச்சாரம் செய்யும்படி எங்கிருந்து யாரால் நஞ்சூட்டப்படுகிறது என்பதுதான் புரியாத மர்மமாக இருக்கிறது.

கடைசியாக பிரகாஷ் காரட் பேச வந்தார். அவர் இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு என்ன தீர்வு சொல்லப் போகிறார் என்று எல்லோரும் பதைபதைப்பில் இருந்தார்கள்.
அவருக்கும் அங்க நடந்த போர் பற்றி கவலை இல்லை. போர்க்குற்றங்கள் பற்றி கவலை இல்லை. இடிந்த வீடுகள், கருகிய குழந்தைகள், எரிந்த வாழ்வுகள் என்று எது பற்றியும் கவலை இல்லை. அவைகள் எல்லாம் நடக்க வேண்டியவையே என்பது போலவே பேச்சைத் துவங்கினார்

அரசியல் தீர்வு தான் சரியான தீர்வு, ஆயுதந் தாங்கிய போராட்டம் அல்ல என்றார். மணி முத்தான வாசகம் அது. இரண்டாவதாக முகாம்களில் அடைக்கப் பட்டிருக்கிற தமிழர்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றார். வெறுமனே அனுப்பக் கூடாது அவர்களுக்கு மறுவாழ்விற்கான வழிவகைகளச் செய்து அனுப்ப வேண்டும் என்றார். மூன்றாவதாக இரண்டு இனங்களிலும் இருக்கிற ஜனநாயக சக்திகள் பேசி தீர்வு காண வேண்டும் என்றார்.

இதை பேசுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் சரியாக பதினைந்து நிமிடம்.அது சரி அறுபது ஆண்டுகள் நடைபெற்று வருகிற இனப்படுகொலை வரலாற்றை அறுபது ஆண்டுகளா பேச முடியும்?

இவர் சொல்லி விட்டார். பிறகென்ன உலகம் அவர் சொல்படி நடக்கப் போகிறது. தன்கடமை முடிந்து விட்டதாக காரில் ஏறி சென்று விட்டார்.

இனிமேல் சிபிஎம் கட்சி ஈழப்பிரச்சினை குறித்து என்னென்ன செய்ய வேண்டும் என்று அறிவிப்பார் என்று எதிர்பார்த்தேன். எதுவும் செய்ய வேண்டாம் வழக்கம் போல் அமைதியாக இருங்கள். நாம் கடந்த காலத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்று எடுத்த முடிவுதான் இப்பொழுதும் சரியான முடிவாக இருக்கிறது. எனவே தொடரந்து அந்தப் பணியை செய்யுங்கள் என்று சொல்லாமல் சொல்லி விட்டு சென்று விட்டார்.

இது போல உலகில் நடக்கிற எல்லா பிரச்சினைகள் குறித்தும் தீர்வுகளை சொல்லி விட்டு வீட்டிலிருக்க வேண்டியது தானே எதற்கு தினசரி கட்சி அலுவலகத்திற்கு வந்து உண்டக் கட்டி தின்று கொண்டிருக்கிறார்கள் என்று என் மனதில் கேள்வி எழுந்தது.

யாரை ஏமாற்ற இந்த நாடகம். எதற்காக அவசர அவசரமாக இந்த நாடகத்தின் அரங்கேற்றம். எதற்காக இந்த நாடகத்திற்கு ‘ இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு ‘ என்றொரு பொய்த்தலைப்பு என்று எதுவும் புரியவில்லை.

நாங்கள் இதுவரை எதுவும் செய்யாமல் இருந்த துதான் இப்பொழுதும் சரியான காரியமாக இருக்கிறது என்று மார்தட்டிக்கொள்வதற்காகவே நடத்தப் பட்டக் கூட்டமாக இருந்தது.

3 comments:

raja said...

திரு.யோகராஜ்...தமிழ் நாட்டில் பெரும்பாலான மார்க்ஸிஸ்ட்கள் பிராமணிய எச்சிலை தின்று வாழ்கிறார்கள்.தமிழர்கள் நலன்கள் பற்றி அவர்கள் எப்படி பேசுவார்கள்.. இந்து ராம் பார்ப்பானை பின்புறத்தை தூக்கிபிடிக்கத்தான் கட்சி நடத்துகிறார்கள்.
இவனுங்க கிட்டப்போய் தீர்வு தேடியது உங்கள் தப்பு..

goi said...

raja. u become mad. i think for everything it is customory for you people to blame brahmaniam.
What about your non-brahmin karunanidhi,veeramani,thiruma and all.

வானம் said...

சிபிஎம் த்மிழனுக்கு எதிரான கட்சியாகவே இருக்கிறது. ஈழத்தமிழனுக்கு எதிரியாக இருக்கிறார்கள். தமிழகத்தமிழனுக்கு துரோகியாக இருக்கிறார்கள்(பெரியாறு பிரச்சனையில்). ராஜபக்சே வாந்தியெடுப்பதை இங்கு வந்து கொட்டிவிட்டு அதைத்தான் தீர்வு என்பார்கள்.

Post a Comment