Wednesday, September 16, 2009

உத்தப்புரம் எனும் நாடகம்

வீதி நாடகத்தில் புகழ் பெற்ற நடிகர்களைக் கொண்ட மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமீபத்தில் தன் கட்சியில் இருக்கிற பிரமுகர்களை அமெச்சூர் நடிகர்களாகக் கொண்டு ஒரு அரசியல் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

நாடகத்தின் பெயர் உத்தப்புரம்.

அதில் சிறப்புப் பாத்திரத்தில் பிரகாஷ் காரட் , பிருந்தா காரட் எனும் பல பிறமாநில நடிகர்களும் நடிக்கிறார்கள்.

சிபிஎம்மின் தமிழ் மாநிலக்குழுவினரும் தமுஎச சவின் முக்கியத்தலைவர்களும் அந்த நாடகத்திற்கான ஒப்பனை ஒளி ஒலி அமைப்பு போன்றவற்றை கவனித்துக் கொள்கிறார்கள் ..
நாடகம் சிறப்புற பல காட்சிகளைத் தாண்டி ஒராண்டுக்கு மேல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இந்தியாவில் நடைபெற்ற பல நாடகங்களை கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இந்த நாடகத்தையும் மகிழ்ச்சியாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆனால் எனக்குத்தான் ஆச்சர்யமாக இருக்கிறது.. இவர்களுக்கு ஏன் இந்த திடீர் நாடக ஆசை என்று..

ஒருவேளை எல்லா அரசியல் கட்சிகளும் நாடகங்கள் நடத்துகின்றன, பிரபலமாக இருக்கின்றன அதனால் நாமும் நடத்தலாம் பிரபலமாகலாம் என்று பொதுக்குழுவை கூட்டி யோசித்து முடிவு எடுத்து விட்டார்களா என்று தெரியவில்லை.

தீண்டாமை தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும்தான் இருக்கிறது.. மற்ற கிராமங்களை எல்லாம் விட்டு விட்டு ஏன் உத்தப்புரத்தை தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை.

அங்கே தான் இடிப்பதற்கு சுவர் இருக்கிறது என்பதாலா?. ஒருவேளை இடித்தால் பிரபலமாகலாம் என்ற பாடத்தை இவர்கள் பிஜேபி கட்சியிடம் இருந்து சமீபத்தில் கற்றுக் கொண்டிருக்கலாம்

இந்த சுவர் இன்று நேற்று அங்கு இருக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக இருக்கிறது. தீண்டாமையும் கடந்த 2000 ஆண்டுகளாக இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கிறது.( சிலருக்கு அப்படியா என்று ஆச்சர்யமாக இருக்கலாம். ஆம் 75 ஆண்டுகளா இருக்கிறது.)அப்பொழுதெல்லாம் தூங்கிக் கொண்டிருந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திடீரென்று ஏன் இப்படி வீறு கொண்டு எழுந்திருக்கிறது என்று ஆச்சர்யமாக இருக்கிறது.

யாரை ஏமாற்றுவதற்கு இந்த நாடகம் ? ஊரையா? உலகையா அல்லது தன் கட்சியில் இருக்கிற தலித்துகளையூம் தலித் சிந்தனை உள்ளவர்களையுமா?.

முன்பெல்லாம் தலித்களில் அரசியல் சிந்தனை கொண்டவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வார்கள். தொல்.திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் அரசியல் சக்தியாக எழுந்த பின் அவர்கள் எல்லோரும் இவர்கள் இருவரின் பின்னால் திரள ஆரம்பித்தார்கள். இதனால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. அதைத் தடுப்பதற்கும் கட்சியில் இருக்கும் தலித்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் அவர்களுக்கு சில செயல்பாடுகள் தேவைப் பட்டது. அதற்காக இந்த நாடகத்தைத் தேர்ந்தெடுத்தார்களோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.

இதில் காமெடி என்னவென்றால் தமிழகத்தின் தன்னெழுச்சியான புரட்சியாளரான தந்தைப் பெரியார் இது போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராக கடுமையாகப் போராடினார். இயக்கம் நடத்தினார். அப்போதெல்லாம் அவரை புரிந்து கொள்ளக் கூட முடியாத படி அமெச்சூர் தத்துவவாதிகளாக இருந்தனர் இவர்களின் முன்னோர்களான பி(ராமனர்). ராம மூர்த்தி போன்றோர். ஆனால் இன்று வரிக்கு வரி தந்தை பெரியாரை மேற்கோள் காட்டி இது போன்ற இயக்கங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ராம மூர்த்தியிடமிருந்து மேற்கோள் காட்டத்தான் இவர்களுக்கு எதுவுமில்லமல் போய்விட்டது.

தீண்டாமைக்கு எதிராக திராவிட இயக்கத்தவரைத் தவிர மற்றோர் போராடக்கூடாது என்றில்லை. அதை நாடகமாக இல்லாமல் ஆத்ம சுத்தியோடு செய்ய வேண்டும். வெறும் கட்சியை, அதில் இருக்கிற தலித் தோழர்களை காப்பாற்றிக் கொள்ளும் முயற்ச்சியாக இந்தப் போராட்டங்களை பயன்படுத்தக் கூடாது.

தலித் இயக்கங்கள் எல்லாம் பெரிய இயக்கங்களாக வளர்ந்த சமயத்தில் திருமாவளவன் தலித் இளைஞர்களின் தலைவராக சுடர்விடத் துவங்கிய சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நாள் அது குறித்து ஆராய்ச்சி செய்த து. அப்பொழுதுதான் அந்தக் கட்சிக்கு தன்னுடைய தவறு புரிந்த து. எழுபத்தைந்து ஆண்டுகாலம் தமிழகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அந்தக் கட்சியின் மாநிலக்குழுவில் ஒருவர் கூட தலித் இல்லை. இன்றளவும் அதன் பொலிட்பீரோவில் ஒருவரும் தலித் இல்லை என்பது வேறு விஷயம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை சிபிஎம் கட்சி நாயக்கர்கள் மற்றும் முக்குலத்தோர் தலைவர்களாக வரும் விதமாக வடிவமைந்த கட்சி. நன்றாக கவனிக்கவும் வடிவமைக்கப்பட்ட கட்சி என்று நான் சொல்ல வில்லை. கட்சியின் பெரும்பாலான தலைவர்களைப் பாருங்கள் நாயக்கர்களாக அல்லது முக்குலத்தோர்களாக இருப்பார்கள். அல்லது இதர உயர்த்தப் பட்ட மேல் ஜாதிக்கார ர்களாக இருப்பார்கள். அப்படி தற்செயலாக நடந்து விட்ட வரலாற்றுத் தவறை சரிசெய்வதற்காக உடனடியாக கீழ் மட்டத்தில் இருந்த சில தலித் தோழர்களை வேக வேகமாக சில பதவிகளுக்கு கொண்டு வந்தார்கள். சில தலித் இஸ்யூக்களை கையில் எடுத்து போராடினால் தான் தலித் இளைஞர்களை ஈர்க்க முடியும் என்றும் முடிவு செய்தார்கள் . உத்தபுரம் போன்ற நாடகங்களை நடத்த ஆரம்பித்தார்கள்.

இவர்களின் இந்த தந்திரம்தான் வேதனை கொள்ளச் செய்கிறது.

அதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜாதி உணர்வு உள்ள கட்சி என்று நான் சொல்ல வில்லை. தலித்களை கீழ் ஜாதிக்கார ர்களாக நடத்துகிற கட்சி என்று சொல்ல வில்லை. இன்று தமிழகத்தில் இருக்கிற மற்ற உயர்த்தப்பட்ட ஜாதிக்காரர்கள் நிறைந்த கட்சிகளோடு ஒப்பிட்டால் கம்யூனிஸ்ட் கட்சி தலித்களோடு ஜாதிய சிந்தனை இல்லாமலே பழகுகிறது என்று என்னால் உறுதி பட சொல்ல முடியும்.

ஆனால் தலித் இயக்கங்களின் மீது பகை உணர்வு கொண்ட கட்சியாகவே அது இருந்து வருகிறது. அது ஏன் என்று புரியவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சி தன் கட்சித் தோழர்களுக்கு தலித் இயக்கங்களின் குரல்வளையை அறுப்பதற்கான கத்தியை பரிமாறிக்கொண்டே இருக்கிறது என்பதை அந்தக் கட்சியின் தோழர்களோடு விவாதிக்கும் போது உணர முடிகிறது.


அவர்களுடனான உரையாடலில் இன்னொரு விஷயமும் புரிந்து கொள்ள முடிகிறது. உத்தப்புரம் உட்பட தீண்டாமைக்கு எதிரான அவர்களின் எல்லாப் போராட்டங்களும் தலித் இயக்கங்க ளெல்லாம் மோசடியான இயக்கங்கள் ; நாங்கள்தான் தலித்களுக்கான உண்மையான இயக்கங்கள் என்று பறைசாற்றிக் கொள்ளவே நடத்தப்படுகின்றனவே அன்றி தலித் மக்களின் மீதான அக்கறையால் நடத்தப்படுவன அல்ல.

இந்த இடத்தில்தான் சிபிஎம் அபாயம் நிறைந்த கட்சியாகிறது. இந்த இடத்தில் தான் உத்தப்புரம் நாடகமாகிறது.

ஒருவேளை தலித் இயக்கங்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பின்னால் தோன்றி , கம்யூனிஸ்ட் கட்சியைக் காட்டிலும் பிரபலமாக வளர்ந்தது அவர்களின் பொறாரைக்குக் காரணமாக இருக்கலாம் என்று இதை பொதுவாக நினைக்க முடியாது.

அவர்களுக்குப் பின்னால் தோன்றி பிரபலாமாக வளரும் மற்ற கட்சிகளின் மீது பொறாமையோ போட்டியோ அவர்களுக்கு ஏற்படுவதில்லை. வெட்கமில்லாமல் அவர்களோடு எல்லா சமரசங்களுக்கும் உட்படுகிறார்கள். இராப்பிச்சைக்காரர்கள் போல தோழர் ராமகிருஷ்ணனும் தோழர் வரதராஜனும் விஜயகாந்த் வீட்டின் முன் போய் நிற்கிற காட்சிகளெல்லாம் நடைபெறுகிறது.

ஆனால் தலித் இயக்கங்கள் வளர்வது மட்டும் அவர்களுக்கு ஆகாது. தொல்.திருமாவளவனை வெண்மணிக்குள் வரவிடாமல் தடுப்பார்கள். தலித் இயக்கங்களின் மீதும் அதன் தலைவர்கள் மீதும் பகை உணர்வை உண்டாக்கும் விதமாக தன் தோழர்களை மூளைச்சலவை செய்வார்கள். அவர்கள் கையில் தலித் இயக்கங்களின் குரல்வளையை அறுக்கும் கத்திகளை கொடுப்பார்கள்.

இந்த நாடகத்தில் கௌரவத் தோற்றத்தில் நடிப்பதற்கு பிரகாஷ்காரட்டை வேறு அழைத்து வந்தார்கள். அது ஏன் என்று புரியவில்லை. தமிழகத்தில் அவருக்கு அரசியல் அந்தஸ்த்து உண்டாக்க வேண்டும் என்று நினைத்தார்களா? கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார்; ஆனால் யாருக்கும் அவரைத் தெரியவில்லை, இந்த நாடகத்தில் முன்னனிப் பாத்திரத்தில் நடிக்க வைத்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் பெயர் போயச் சேரும் என்று யோசித்தார்களோ என்னவோ?

அவரும் ஏதோ இந்தியாவிலேயே உத்தப்புரத்தில்தான் தீண்டாமை இருக்கிறது என்பது போல வேகவேகமாக வந்தார்.ஆனால் பாவம் பயிற்சி போதவில்லை. ஏமாந்து போய் விட்டார்.

கலைஞர் அவரைக் காமடிப் பாத்திரமாக்கி விட்டார்.

கலைஞர் எவ்வளவு நாடகங்களை நடத்தியவர். அவருக்குப் புரியாதா இந்த நாடகத்தின் தாத்பர்யம்? உடனடியாக எதிர்பாராத விதமாக அந்த நாடகத்திற்குள் நுழைந்து உத்தபுரத்தில் கட்டப் பட்டிருந்த சுவரை இடித்து விட்டார். பாவம் பிரகாஷ்காரட் அங்கு போய் தேமே என்று நின்றார்.

பாஞ்சாலி சபதம் நாடகத்தில் துச்சாதனன் பாஞ்சாலியை துயில் உறியப் போகும் சமயத்தில் கிருஷ்ண நடிகர் மேலேயிருந்து சேலையை இறக்குவதற்கு தயாராகும் முன் பார்வையாளர் வரிசையில் இருந்த ஒரு நபர் மேடை ஏறி பாஞ்சாலிக்கு சேலை கொடுத்து தன்னுடன் கூட்டிச்சென்றது போல் ஆகி விட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் , பாராளுமன்ற உறுப்பினர், அவருக்கும் அவருடைய கட்சிக்கும் தலித்களின் நிலை குறித்து அக்கறை இருக்குமானால் பாராளுமன்றத்தில் பேச வேண்டியது தானே. டெல்லியில் ஒரு போராட்டம் நடத்த வேண்டியது தானே.

அதை செய்ய அவர்களின் பொலிட்பீரோ அனுமதிக்காது . பொலிட்பீரோ வடிவமைக்கப் பட்டிருக்கும் விதம் அப்படி.

கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய காலத்திலிருந்து இந்த ஆண்டு வரை அது அரசியலில் மிகவும் பிரகாசமாகவும் சக்தியுள்ளதாகவும் இருந்த கால கட்டம் என்று சென்ற 5 ஆண்டுகளைச் சொல்ல லாம். அறுபத்தி ஐந்து எம்பிக்களைக் கொண்டு மத்திய அரசாங்கத்தில் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும் என்றிருந்த கால கட்டம்.அந்தக் கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியால் ஒரு பொது வேலைத் திட்டம் வைக்கப் படுகிறது. அந்த பொது வேலைத்திட்டத்தில் அறுபது எழுபது வேலைத் திட்டங்கள் வைக்கப் படுகின்றன. அதில் ஒன்று கூட தலித்கள் பற்றியது இல்லை. அது தான் சிபிஎம். அதுதான் பொலிட்பீரோ வடிவமைக்கப் பட்டிருக்கும் விதம்.

இந்த இடத்தில் தான் தலித் இயக்கங்களின் தேவை இருக்கிறது .
இந்தியாவில் தலித் இயக்கங்கள் அப்படி சக்தியாக வளர்ந்து பாராளுமன்றத்தை தீர்மானிக்கிறவர்களாக இருந்தால் அன்று ஒரு தலித் கூட அடிமையாய் இருக்க வேண்டிய அவசியமில்லாத வேலைத் திட்டத்தை அவர்கள் முன் வைப்பார்கள். அவர்களுக்கு ஒரே கோரிக்கை வைக்கிற வாய்ப்பு மட்டுமே கொடுக்கப் பட்டாலும் அது தலித் மக்கள் பற்றிய கோரிகைகையாகத் தான் இருக்கும்.

தலித்களுக்காக செயல் பட வேண்டிய இடங்களிலெல்லாம் கபடத்துடன் நடந்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் திடீர் என்று தலித் மக்களின் மீது அக்கறை கொண்ட நபராக வந்த போதுதான் அவர் நடிகராகிறார், உத்தப்புரம் நாடகம் ஆகிறது.

அவருடைய கவர்ச்சி போதவில்லை என்பதாலோ என்னவோ தெரியவில்லை. தற்போது பிருந்தா காரட் அங்கு வந்து அந்த தொடர் நாடகத்தின் மற்றொரு காட்சியை சிறப்பித்து விட்டுப் போயிருக்கிறார்.

உத்தப்புரத்தில் தீண்டாமை கொடுமைக்கு எதிராக இவ்வளவு தீவிரமாகப் போராடும் சிபிஎம், முக்குலத்தோர் நிறைந்திருக்கும் பகுதிகளில் இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டியது தானே. ஏன் வன்மம் குறைந்த மக்களான பிள்ளைமார் மக்கள் நிறைந்த ஒரு பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அப்படி ஒரு முடிவை சிபிஎம் எடுத்தால் அவ்வளவுதான் கட்சியில் இருக்கிற முக்குலத்தோர்களே சொல்லி விடுவார்கள்; இந்த ஜோலியெல்லாம் எங்களிடம் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று.

இந்த இடத்தில்தான் வரலாற்றில் தொல்.திருமாவளவனின் இடம் இருக்கிறது. இன்று தமிழகத்தில் சேரிகள் என்று எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு கொடி பறக்கிறது. ஒரு அம்பேத்கர் சிலை இருக்கிறது. அங்கு ஒரு தலைவர் செயலாளர் இருக்கிறார். திருமாவளவன் காலடியே வைத்திராத சேரிகளில் கூட அவரின் கட்சிக் கொடி இருக்கிறது. அங்கே ஆதிக்க ஜாதியினர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் திருமாவளவனின் எழுச்சிக்குப் பின்னால் இருக்கிற விஞ்ஞானமும் மெய்ஞானமும் கம்யூனிஸ்ட்கள் ஒருகாலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.

இதோ நமக்கு அருகே இருக்கிற ஈழத்தில் மூன்று லட்சம் தமிழர்கள் திறந்த வெளி கொட்டடியில் வைக்கப் பட்டிருக்கிறார்கள். இதுவரையிலான உலகம் சந்தித்திராத இன அழிப்பு அங்கே நடந்து கொண்டிருக்கிறது. அது பற்றி தொடர்ந்து குரூரமான கள்ள மௌனம் சாதிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனிதாபிமானம் நிறைந்த பாவனையோடு உத்தப்புரத்திற்கு வருவது வேடிக்கையாக இருக்கிறது.

அன்பார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்களே. உத்தபுரத்தை மட்டுமல்ல , தமிழகத்தில் தலித் மக்களின் விடுதலையைப் பார்த்துக் கொள்ள தலித் இயக்கங்கள் இருக்கின்றன. நீங்கள் உங்கள் மேக் அப்களை களைத்து விட்டு உத்தபுரத்தை விட்டு வெளியேறுங்கள். உங்களுக்கு நேர்மை இருந்தால் தலித் சமூகத்தினர் இருக்க வேண்டிய இடம் தலித் இயக்கங்களே என்பதை உங்கள் இயக்க்த்தினருக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

9 comments:

Anonymous said...

போலி கம்யூனிஸ்டுகளுக்கு செருப்படி!

---
"ஒடுக்கப்பட்டோர் விடுதலை… சாதி என்பது வர்க்கமே"
http://vrinternationalists.wordpress.com/2009/09/15/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/#comment-248

Anonymous said...

நண்பரே அது நாடகமா மக்களின் பிரச்சனைக்காக மார்க்சிஸ்ட்டுகள் போராடினார்களா என்பதை கள ஆய்வுகள் செய்து கொள்ளுங்கள். தீண்டாமைக் கொடுமைக் கெதிராக எத்தனை தலித் இயக்கங்கள் போராடின. இடது சாரிகளுக்கு வாக்குவங்கி தேவையில்லை நண்பரே, பாப்பாபட்டி,கீரிப்பட்டி நாட்டார்மங்களம் போன்ற பஞ்சாயத்துகளில் பத்தாண்டுகாலம் தலித்கள் தலைமையை ஏற்காத நிலைமை மாற்றி ஜன நாயக ரீதியில் தேர்தலை நடத்த இயக்கம் நட்த்தியவர்கள் யார் என்பதை தலித் இயக்கத் தலைவரிகளிடமே கேட்டுக்கொள்ளுங்கள். Hariharan

Yogaraj said...

நண்பர்களே,

உங்களைப் பார்த்தே எழுதத் துவங்கினேன்.
உங்களிலிருந்தே பயணத்தைத் துவக்குகிறேன்.
என் பிளாக்கிற்கு வருகை தந்து தங்களின் வாழ்த்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
http://yogarajbabu.blogspot.com/
மிகுந்த நேசத்துடன்
யோகராஜ் பாபு.

kamaraj said...

அன்பு நண்பர் யோகராஜ்.
உங்கள் வரவுக்கு மகிழ்ச்சி.
தொடருங்கள் உங்கள் கருத்துப்பதிவை,
இந்த வலையூடகத்தின் ஊடாக.

உங்கள் வயதும் உணர்வுக் கொந்தளிப்பும் புரிகிறது.
இங்கே ஒரு சிறு தகவலை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வென்மணிக்கொலைகளில், தாமிரபரணிப்படுகொலைகளில் இன்னும்
செய்திகளில் இடம்பெறாத ஆதிக்கத்தை எதிர்த்த செயல்களில்
கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தங்களை மையப்படுத்தியிருக்கிறது என்பது வரலாறு.
வீர்யம் கூடக்குறைய்ய இருக்கலாம். அது இரண்டாயிரம் ஆண்டுகால அழுக்கு.
எந்தச்சோப்பும் எளிதாகக்கறைக்க இயலாது. ஒரு பொது இயக்கத்தில் இந்த
பின்னடைவு தவிர்க்க இயலாதோ எனும் கேள்வி இன்னும் பரிசீலனையிலேயே
இருக்கிறது. இப்போது கூட எல்லாக்குரலையும் தாண்டி நிற்கிறது திசநாயகத்தின்
பொதுக்குரல். இவற்றைத்தெரிந்து கொண்டுதான் எழுதவேண்டும் என்று கட்டளையிடவில்லை.
தெரிந்து கொண்டால் இன்னும் கூட உங்கள் வாதம் தெளிவாகும். அது என்னுடைய ஆசை.
பாப்பாப்பட்டி சுற்றுவட்டம், உத்தப்புரம், மேலவளவு, நக்கலமுத்தன்பட்டி போன்ற பாதிக்கப்பட்ட தமிழகத்தின்
பகுதிகளூக்கு பல முறை எங்கள் ஆவணப்படக் குழுவோடு பயணித்தவன். அந்தச் சிறிய அறிவில் கூறுகிறேன்.
உத்தப்புர ஆதிக்கம் வெறும் வெள்ளாளர்களோடு முடிந்துவிடவில்லை. அது ஜாதிய இறுக்கத்தின், மேலாதிக்கத்தின் கூட்டணி
வலுப்பெற்ற இடம் என்பதே அதிர்ச்சியான சேதி. ஆம் மறைமுகமாகவும் நேரடியகவும் இந்து அமைப்பு கைகோர்த்திருந்ததை
அங்கே பார்த்த சுவரொட்டிகள் அம்பலப்படுத்தியது. இன்னும் அதிர்ச்சி ஆளும்கட்சி எதிர்க்கட்சியின் மாவட்ட முதன்மையாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலித்துகளுக்கும் எதிரானதுதான். என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. காலம் காலமாக பகுத்தறிவுவாதிகல், ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரானவர்கள் கம்யூனிச்களுக்கு எதிராகவே இருக்கிறார்கள். இது இன்னும் ஆழமாக ஆய்வு செய்யப்படவேண்டிய கூறு.

kamaraj said...

தோழன் மாது அடிக்கடி சொல்லுவான். தங்களோடு 90 சதவீதம் முரண்பாடு வைத்திருந்தாலும் பத்து சதவீத உடன்பாட்டில்
வலதுசாரிகள் கூட்டுவைத்துக்கொள்கிறார்கள். அதற்கு நேர்மாறாக, வெறும் ரெண்டு சதவீத, மூன்று சதவீத முரண்பாடுகளைச்
சரிசெய்யமுடியாமல் இடது சிந்தனைகள் சிதறிக்கிடக்கிறது. ஆம் சே பங்குகொண்ட கியூப போராட்டத்தில். மதகுருமார்கள் தொடங்கி மலைக்கொள்ளையர்வரை நேசமானார்கள் பாடிஸ்டாவை எதிர்த்து. அசத்தியத்தை சாத்யமாக்கினார்கள், வெற்றிகொண்டார்கள். அங்கே ஜாதியில்லை என்பது மிகப்பெரிய காரணி. எழுபத்தைந்தாண்டல்ல நூறு வருட கம்யூனிஸ்ட்
வரலாறு எள்ளப்படும் இயக்கமாக சுருங்கிப்போனதற்கு மிகப்பருமனான காரணி உள்ளே ஜாதியும்,வெளியே ஏகதிபத்ய சதியும் தான். வரலாற்றைக் கொஞ்சம் படிக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.

ச.தமிழ்ச்செல்வன் said...

நண்பரே, உத்தப்புரம் நாடகமும் அல்ல.ஈழப்பிரச்னையில் நாங்கள் ஒருபோதும் மௌனமாக இருந்ததுவும் இல்லை.நீங்கல் நினைப்பதை நாங்கள் பேசவில்லை.செய்யவில்லை .நாங்கல் ஒரு தனி கட்சி.என்பதை புரிந்து கொண்டால் உங்களுக்குக் கோபம் வராது தோழா.ஈழமோ தலித் மக்கள் பிரச்னையோ எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்க வாய்ப்பின்றி நேசமாக இருக்க வேண்டிய சக்திகள் அவரவர் நிலைபாடுகளில் விவாதத்துக்கும் விமர்சனத்துக்கும் தயாரில்லாத இறுகிய மனதுடனும் பகுத்தறைவைப் புரந்தள்ளிய ஆவேசத்துடனும் இருப்பது பெரிய சோகம்தான்

sugan said...

சாதிமுரண்பாட்டில் கம்யூனிஸ்டுகளின்மேல் பழிபாவத்தைப்போட்டுவிட்டு
(அதிலும் முத்தாய்ப்பாக ஒரு கட்டுரை வடிவமைத்துவிட்டோ வடிவமைக்கப்பட்டோ பதிந்துவிட்டு) பிறகு என்ன செய்வது?

கம்யூனிஸ்டுகளை தலித் அரசியலில் எதிர் அரசியல் செய்பவர்களாக நிறுத்துவதால் ஆகப்போவது என்ன?

இலங்கை அரசியலில் கம்யூனிஸ்டுகள்தான் தலித்துகளின் நேச சக்திகளாகவும் தோழமை அமைப்புகளாகவும் சாதி அடிமைத்தனத்திற்கெதிராக போராடினார்கள்.
பப்பாப்பட்டி கீரிப்பட்டி ,உத்தப்புரம் இவற்றில் சிபிஎம் மின் நிலைப்பாடும் வேலைமுறைகளும் சிறப்பான முன்னுதாரணமாகத்தான் நினைக்கிறேன்.

வெறுப்புகளை சமூகங்களுக்குள்ளேயே தூண்டிவிட்டு மாறிமாறி வெட்டிக்கொண்டு எல்லோரும் செத்து செய்வதறியாது திகைத்து நிற்பது
ஈழப்போராட்டம் அல்லது தமிழ்த்தேசிய அரசியல் நமக்குத்தரும் படிப்பினை.
அதனால் அழிவைத்தவிர வேறெதுவுமில்லை.
அன்றியும் சாதியப்போராட்டம் என்பது ஒரு நீண்டகால போராட்டம்மட்டுமல்ல, நிதானமாக அணுகவேண்டியதுமாகும்.

சாதி எதிர்ப்புப்போராட்டத்தில் அல்லது அதுசார்ந்த பிரச்சனைகளில் பல்வேறு அமைப்புகளின் ஆதரவைப்பெற்றுக்கொள்வது நல்லது.
குறிப்பாக சிபிஎம் அத்தகைய பிரச்சனையை கையில் எடுத்தால் அதற்கு ஆதரவுவழங்குவதுதான் நல்லவழிமுறை.
சிபிஎம்மை ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிலையில் வைத்து விமர்சித்திருக்கிறீர்கள். பரிசீலியுங்கள்!

sugan said...

சாதிமுரண்பாட்டில் கம்யூனிஸ்டுகளின்மேல் பழிபாவத்தைப்போட்டுவிட்டு
(அதிலும் முத்தாய்ப்பாக ஒரு கட்டுரை வடிவமைத்துவிட்டோ வடிவமைக்கப்பட்டோ பதிந்துவிட்டு) பிறகு என்ன செய்வது?

கம்யூனிஸ்டுகளை தலித் அரசியலில் எதிர் அரசியல் செய்பவர்களாக நிறுத்துவதால் ஆகப்போவது என்ன?

இலங்கை அரசியலில் கம்யூனிஸ்டுகள்தான் தலித்துகளின் நேச சக்திகளாகவும் தோழமை அமைப்புகளாகவும் சாதி அடிமைத்தனத்திற்கெதிராக போராடினார்கள்.
பப்பாப்பட்டி கீரிப்பட்டி ,உத்தப்புரம் இவற்றில் சிபிஎம் மின் நிலைப்பாடும் வேலைமுறைகளும் சிறப்பான முன்னுதாரணமாகத்தான் நினைக்கிறேன்.

வெறுப்புகளை சமூகங்களுக்குள்ளேயே தூண்டிவிட்டு மாறிமாறி வெட்டிக்கொண்டு எல்லோரும் செத்து செய்வதறியாது திகைத்து நிற்பது
ஈழப்போராட்டம் அல்லது தமிழ்த்தேசிய அரசியல் நமக்குத்தரும் படிப்பினை.
அதனால் அழிவைத்தவிர வேறெதுவுமில்லை.
அன்றியும் சாதியப்போராட்டம் என்பது ஒரு நீண்டகால போராட்டம்மட்டுமல்ல, நிதானமாக அணுகவேண்டியதுமாகும்.

சாதி எதிர்ப்புப்போராட்டத்தில் அல்லது அதுசார்ந்த பிரச்சனைகளில் பல்வேறு அமைப்புகளின் ஆதரவைப்பெற்றுக்கொள்வது நல்லது.
குறிப்பாக சிபிஎம் அத்தகைய பிரச்சனையை கையில் எடுத்தால் அதற்கு ஆதரவுவழங்குவதுதான் நல்லவழிமுறை.
சிபிஎம்மை ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிலையில் வைத்து விமர்சித்திருக்கிறீர்கள். பரிசீலியுங்கள்!

passerby said...

கம்யூனிஸ்டுகள் செய்வது தாங்களை நிலைனிறுத்திக்கொள்ள என்னும் கருத்தை வழிமொழிகிறேன்.

இவர்கள் பார்ப்பன ஏகாதிபத்தியத்தை பெரியார் எதிர்த்த போது அவரை ஏளனப்படுத்தி வருணக்கொள்கையாளருக்கு வக்காலத்து வாங்கியவர்கள்.

‘தோழர்’ சீவாவின் பெரியார் எதிர்ப்பு பேச்சுகளைப் படித்தால் தெரியவரும்.

உத்தபுரத்தில் வடிவது முதலைக்கண்ணீர்.

Post a Comment