Friday, October 23, 2009

மாதவராஜ்- மத்திய தர வர்க்க மார்க்சிய கனவான்

மாதவராஜ் பொதுவில் ஒரு நல்ல மனிதராகத்தான் தெரிகிறார்.


அன்பான அப்பா, பிரியமான தோழர், நேர்மையான யூனியன் தலைவர்.


அவருடைய கதைகளில் மனிதாபிமானம் பூத்துக் குலுங்குகிறது.


ஆனால் ஈழம் என்ற பேச்சு வந்து விட்டால் அவருக்கு முகம் மாறி விடுகிறது. ரத்தம் எதிர் திசையில் ஓடத்துவங்கி விடுகிறது.


அவருடைய கட்டுரையைத் தொட்டு நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு அவர் பின்னூட்டம் எழுதியிருந்தார்.


அந்தப் பின்னூட்டம் இதுதான்.


என்னைப்பற்றி இந்தப் பதிவில், ’என் மனமாற்றத்துக்கு பிரபாகரனின் மரணம் தேவைப்பட்டு இருக்கிறதுஎன்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். வேதனை தருகிற, சீண்டுகிற சொல்லாடல் இது. இப்படிச் சொல்வதில் உங்களுக்கு என்ன திருப்தி என புரியவில்லை.

அடுத்தது பிரபாகரனை மாபெரும் தலைவராக பார்க்கிற மனமாற்றம் ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை. ராஜீவ் காந்தி மரணமும், பிரபாகரனின் மரணமும், வரலாற்றில் எந்த இடத்தில் வைத்து பார்க்கப்படும் என்பதைத்தான் நான் அந்தப் பதிவில் சுட்டிக் காட்டி இருந்தேன். அதைத்தான் சரியோ, தவறோ.... வரலாற்றில் இலங்கை மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பிரபாகரன் ஒரு அடையாளமாகவும், நம்பிக்கையாகவும் இருந்திருக்கிறார் என்பது உண்மை.என நான் சுட்டிக் காட்டியிருந்தேன். அதாவது ராஜீவ் காந்திக்கு வரலாற்றில் அப்படியொரு இடமில்லை என்பதைத்தான் சொல்லி இருந்தேன்.இதற்கு விளக்கமளித்து எனது அடுத்த பதிவில்


//
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நான் அறிந்தவரையில், பிரபாகரனின் மீது சில அழுத்தமான விமர்சனங்கள் உண்டு. அதில் மிக முக்கியமானது, மக்களை இராணுவ ரீதியாக திரட்டிய அவர், அரசியல் ரீதியாக திரட்டவில்லை என்பது. சயனைடு குப்பிகளைக் கொடுத்த இயக்கம், உரிமைகளுக்காக கிளர்ந்தெழ மக்களுக்கு அரசியல் ஞானம் அளித்திருக்க வேண்டும். மக்கள், தெருக்களில் நின்று பீரங்கிகளையும், இராணுவத்தையும் எதிர்க்கிற வேகத்தை, அரசியல் கருத்துக்களே உருவாக்க முடியும். மக்களுக்கு முன்னால் எந்த ஆதிக்க சக்திகளும் செல்லுபடியாகாது. அப்படித்தான் வியட்நாமில் மக்களிடம் தோற்றது அமெரிக்கா. நேபாளத்தில் நடப்பதும் இதுதான். இந்த இடத்தில் பெரும் ஊனம் உண்டு. (இதை நான் என்னுடைய ராஜாவுக்கு செக்என்னும் சொற்சித்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தேன்.)// என்றும் சொல்லி இருந்தேன். அதையும் சேர்த்து நான் சொன்ன அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.


மேற்கண்ட பதிவில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மக்களை இராணுவ ரீதியாகத் திரட்டினாரே தவிர அரசியல் ரீதியாக திரட்டவில்லை என்கிறார் மாதவராஜ்


அரசியல் ரீதியாகத் திரட்டப்பட்ட மக்களுக்கு உதாரணமாக வியட்நாமைச் சொல்கிறார்.


இது போன்ற ஒரு குற்றச்சாட்டு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படாமலேயே சமீப காலமாக அரசியல் அரங்கில் உலா வந்து கொண்டிருக்கிறது.

வியட்நாமில் தோழர் ஹோசிமின் அமைத்த விடுதலை இயக்கத்தின் பெயர் ‘வியட்நாம் மக்கள் படை.


அந்தப் பெயரில் மக்கள் என்ற வார்த்தை வருகிறது. அவ்வளவே.

அதிலிருந்து அவர்தான் மக்களை அரசியல் ரீதியாகத் திரட்டி போராடினார் என்று புரிந்து கொள்ளக் கூடாது. அப்படிப் புரிந்து கொள்வது விடுதலைப்புலிகள் புலிகளை ஒன்று திரட்டி போராடினார்கள் என்று எளிமையாகப் புரிந்து கொள்வது போலாகும்.


வியட்நாமில் ‘வியட்நாம் மக்கள் படை 2860 டாங்க்களையும், 24,000 அட்லரிகளையும் 12வகையான மிஸ்ஸைல்களையும் 230 ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தினார்கள் என்று புத்தகங்களில் தகவல் இருக்கிறது.


வெறும் அரசியல் ரீதியாக திரட்டப் பட்ட மக்கள் எப்படி இவ்வளவு கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்கும் வல்லமை பெற்றார்கள்?


ராணுவ ரீதியாகவும் திரட்டப்பட்ட மக்கள் தான் வியட்நாம் மக்கள் படை, அரசியல் ரீதியாகவும் திரட்டப்பட்ட மக்கள் தான் விடுதலைப் புலிகள்.


அரசியல் ரீதியாக ஒருவரைத் தயார்படுத்தாமல் ஒரு கட்சிக் கொடியைக் கூடத் தூக்க வைக்க முடியாது மாதவராஜ்.


எப்படி துப்பாக்கியைத் தூக்க வைக்க முடியும். கழுத்தில் சயனைடு குப்பியை மாட்டிக்கொள்ளச் செய்ய முடியும்.


இந்தியராணுவமும் இலங்கை ராணுவமும் தருவதைப் போல விடுதலைப் புலிகளுக்கு மாதச் சம்பளம் கிடையாது.டிஏ,டிஏ, கிடையாது,பென்சன் ,கிராஜிவட்டி கிடையாது. இறந்தால் இன்ஷீரன்ஸ் கிடையாது. போரில் கை கால்கள் சிதைந்தால் முறையான மருத்துவ வசதி கூட கிடையாது. இவ்வளவையும் புரிந்து கொண்டு சாதாரண மக்கள் விடுதலைப் புலிகளானார்கள் என்றால் அரசியல் ஞானம் இல்லாமலா விடுதலைப் புலிகளானார்கள்.


வியட்நாமை உதாரணம் சொல்கிறீர்கள்.


விடுதலைப் புலிகள் வியட்நாமை முன்மாதிரியாகவும் கொண்டிருந்தார்கள். அதைத் தாண்டியும் போனார்கள்.


நீங்களும் நானும் வியட்நாம் வரலாறைப் படித்தது நம்முடைய பொது அறிவை வளர்த்துக்கொள்வதற்காக.அவ்வளவே.ஏதாவது ஒரு நாள் இரவு அரைத்தூக்கத்தில் அந்தப் புத்தகத்தை வாசித்திருப்போம்.


விடுதலைப் புலிகளுக்கு அது பாடம்.


வியட்நாம் வரலாற்றை மட்டுமல்ல. சீனப்புரட்சி, ரஷ்யப் புரட்சி, க்யூபப் புரட்சி, இந்திய விடுதலைப் போராட்டம், உலகின் பல்வேறு முனைகளிலும் நடந்த போர்கள் இவைகளைக் கரைத்துக் குடித்தவர்கள் விடுதலைப் புலிகள். அதனால் தான் உலகம் வியக்கும் பல சாகசங்களை அவர்கள் செய்தார்கள்.


இருபது ஆண்டுகால பொருளாதாரத் தடையை மக்களைக் கொண்டு அவர்களால் சமாளிக்க முடிந்தது.


மூன்று லட்சம் தமிழர்களை ஏன் ராஜபக்ஷே முள்வேளிக்குள் அடைத்து வைக்கிறார்?


மூன்று லட்சம் மக்களும் அரசியல் ரீதியாக திரண்டிருந்த மக்கள் என்பதால் தான்.


யாழ்ப்பான மக்கள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ கண்காணிப்பிலேயே இருக்கிறார்களே அது ஏன்?


அவர்கள் எல்லோரும் அரசியல் ரீதியாக திரண்டிருந்த மக்கள்;திரளக் காத்திருக்கிற மக்கள்.


ஒரு சமூகம் அரசியல் ரீதியாக பண்படாமல் இருந்தால் ஒரு கொரில்லா இயக்கம் ஒரு நாள் கூட அங்கே உயிர்த்திருக்க முடியாது.


கொரில்லா இயக்கத்தின் மிகப்பெரிய பாதுகாவலர்களே அங்கு வாழும் அரசியல் படுத்தப் பட்ட மக்கள் தான். ஏனென்றால் கொரில்லா இயக்கங்களால் உண்டாகும் எதிர்வினையை அவர்களே தாங்குகிறார்கள்.

இன விடுதலை, தேச விடுதலை, புரட்சி என இவற்றில் எந்த ஒன்றையும் உடைத்து எறிந்து விடும் தீவிரத்தோடு இன்று சர்வதேச நாடுகள் இருக்கின்றன. அவைகளை மீறி ஒரு இன விடுதலையை சாத்தியப் படுத்துவற்கான பல்வேறு சோதனைகளை முயற்சித்தவர்களாக இன்று விடுதலைப் புலிகளே இருக்கிறார்கள்.


சயனைடு குப்பியைப் பற்றி சாதாரணமாக சொன்னீர்கள்.


சிபிஎம்மில் யாரையாவது ஒருவரை ஒரு முறை சயனைடு குப்பியை முயற்ச்சித்துப் பார்க்க தயார் செய்து பாருங்கள்.


அப்பொழுது தெரியும் அதற்குப்பின்னால் எவ்வளவு அரசியல் இருக்கிறது என்று.


அப்பொழுது தெரியும் நாமெல்லாம் எவ்வளவு பெரிய அரசியல் கோழைகள் என்று.


ராஜிவ் காந்தியின் கொலையை விசாரித்த கார்த்திக்கேயன் இதைச் சொன்னார்.


ராஜிவ் காந்தியின் மரணத்திற்கு முன்னால் தமிழகத்திலிருந்து 300 இளைஞர்கள் இலங்கைக்குச் சென்று விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்று வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் விடுதலைப்புலிகளின் வழக்கப் படி சயனைடு குப்பி கொடுக்கப் பட்டிருக்கிறது.


ராஜிவ்காந்தியின் மரணத்திற்குப் பின்னால் அவர்களில் பலர் போலிஸிடம் பிடிபட்டிருக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட சயனைடு குப்பியை பயன் படுத்த வில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் பிடிபட்ட போது அவர்களில் ஒருவர் கூட சயனைடு குப்பியை பயன்படுத்தாமல் இருந்த தில்லை.

நமக்குப் போர் தெரியாது;புயல் தெரியாது; பாவம் குழந்தைகளைப் போல் வளர்க்கப் பட்டு விட்டோம் என்று கண்ணதாசன் சொல்வது இதைத்தான்.

நான் மேற்சொன்ன ஒரு தகவலில் இரண்டு உண்மைகள் புரியும். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் பயிற்சி எடுப்பதால் ஒருவர் தீவிர அரசியல் மன நிலைக்கு வந்து விடுவதில்லை. இலங்கையில் தமிழர்களாகப் பிறந்து சிங்களப் பேரினவாதத்திற்கு ஆட்பட்டோர்கள் தலைவர் பிரபாகரன் இல்லாவிட்டாலும் தீவிர மனநிலையை இழப்பது இல்லை.


உங்களாலும் என்னாலும் சயனைடு தின்று இறப்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது .


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் யாரையும் ஷூ பாலிஸ் செய்வது போல தீவிரவாதத்தை நோக்கி பாலிஷ் செய்வது இல்லை.

அங்கே நிலவுகிற சிங்களப் பேரினவாதம் அந்த மக்களை தீவிர அரசியல் மன நிலைக்கு உள்ளாக்குகிறது. அந்த தீவிர அரசியல் மனநிலை உள்ளவர்களுக்கு பிரபாகரன் தலைவராக இருக்கிறார்.


சயனைடு குப்பிகளைக் கொடுத்த இயக்கம், உரிமைகளுக்காக கிளர்ந்தெழ மக்களுக்கு அரசியல் ஞானம் அளித்திருக்க வேண்டும். மக்கள், தெருக்களில் நின்று பீரங்கிகளையும், இராணுவத்தையும் எதிர்க்கிற வேகத்தை, அரசியல் கருத்துக்களே உருவாக்க முடியும்- மாதவராஜ்


அளிப்பதற்கும் பெறுவதற்கும் அரசியல் ஞானம் என்ன பிட்சையா? அது அளிக்கப் படுவதும் பெறப்படுவதுமான வஸ்து இல்லை.அது அளிக்கப் படுவதும் பெறப்படுவதும் என்ற நம்பிக்கையில் இருப்பதால்தான் இங்கிருங்கிற சிபிஎம் கார ர்களுக்கு யாராலும் அது அளிக்கப் படுவதும் இல்லை. யாராலும் பெறுப்படுவதும் இல்லை.


எவ்வளவு சாதாரணமாக சொல்லி விட்டீர்கள் ஈழ மக்கள் அரசியல் ஞானம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று.


இந்த நூற்றாண்டில் அவர்களுக்கு இணையாக யாரும் பீரங்கிகளையும் ராணுவத்தையும் எதிர்த்து நின்றதில்லை.


இதோ முள்ளிவாய்க்காலின் கடைசி நேரச்சித்தரிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வரத்துவங்கி இருக்கின்றன. நேற்று ஒரு கடிதம் வந்தது.

அந்தக் கடிதத்தின் முதல் கொஞ்சம் வரிகள்,


மது தாயகநிலத்தை அழித்து, பின் அபகரிக்க உலக நாடுகளின் உதவியோடு சிங்களப் பேரினவாதம் மேற்கொண்ட இரத்தக் குளியல் நடவடிக்கையின் (Operation BloodBath) இறுதி நாட்கள் எம்மால் நினைத்துப் பார்க்க முடியாதவை. அழுவதற்கும் அவகாசமின்றி அந்தரித்த மக்கள் திரள். அருகில், கண்முன்னே வெடித்துச்சிதறும் ஷெல்களால் துடித்துச் சாகும் உயிர்களின் கடைசிக் கதறல்கள்.

நடந்து விட்டதை அறியும் ஒருகண அவகாசம் கூட இல்லாமல் பிணங்களாய் விழுந்தவரின் உருக்குலைந்த உடல்கள். கை, கால்கள் துண்டிக்கப்பட்டு உதவிகேட்கும் அவலக் குரல்கள்.

பங்கருக்குள் பதுங்கியபடியே பட்டினியில் மயங்கி உயிர்பிரியப் போனவரின் அழுகிய உடல்களது வாடை. அகப்பட்டதை எடுத்துக் கொண்டு உயிர்காக்க அங்குமிங்கும் ஓடிய இலட்சக்கணக்கான மக்கள் திரளுக்குள் மிதிபட்டு இறந்த பிஞ்சுக் குழந்தைகள், கை கொடுக்க எவருமின்றி ஆங்காங்கே மல்லாக்காய் கிடந்த முதியோர்கள். ஆம், உலகின் மன சாட்சிக் கதவுகள் மூடிக்கிடக்க முள்ளிவாய்க் காலில் இன அழித்தல் கோரத்தாண்டவம் அரங்கேறியது.

இப்பேரழிவுக்கும் நடுவில் கடைசிவரை களமாடியே வீரமரணம் அடைவோம் என உறுமும் துப்பாக்கிகளுடன் எமது புலிவீரர் அணிகள். மே 12 முதல் சீலனின் மரபை எம்வீரர்கள் சுவீகரித்தனர்.

இவர்களா உங்கள் பார்வையில் அரசியல் ஞானம் இல்லாதவர்கள்?


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டுமல்ல.


முள்ளிவாய்க்காலின் கடைசி நாளை சந்தித்த அனைவருமே வரலாற்று நாயகர்கள் தான்.


இவர்களுக்கு முன்னால் நாமெல்லாம் யார் மாதவராஜ்?


மாத சம்பளத்திற்கு ஏதாவது பங்கம் வரும் என்றால் கட்சி, கொடி, கோஷம், எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு ஓடோடிப் போய் குடும்பம் குழந்தை என்று அடங்கி ஓடுங்கி விடுவோம்.


புரட்சியை சிபிஎம் நடத்தும் என்ற நம்பிக்கையிலா நாமெல்லாம் சிபிஎம்மில் இருக்கிறோம்.


கண்டிப்பாக நடத்தாது என்ற தைரியத்திலேயே சிபிஎம்மில் இருக்கிறோம்.


வாழ்க்கையில் சிபிஎம்மோடு தற்செயலாக தொடர்பில் இருக்கிற சின்ன காரணத்திற்காக இந்த நூற்றாண்டின் மகத்தான மனிதர்களை அரசியல் ஞானம் பெறாதவர்கள் என்று சொல்லி கொச்சைப் படுத்தாதீர்கள்

5 comments:

Anonymous said...

உங்கள் தொடரும் குரலுக்கு நன்றி. இவர்கள் தூசும் தம்மேலே படாமல் புரட்..சீ செய்கின்றவர்கள். கட்சியிலிருப்பதே கலகம் என்று காட்சி பண்ணுகிறவர்கள்

ஜெரி ஈசானந்தா. said...

/இந்தியராணுவமும் இலங்கை ராணுவமும் தருவதைப் போல விடுதலைப் புலிகளுக்கு மாதச் சம்பளம் கிடையாது.//
இந்த லிஸ்டில் மாத சம்பளம் பெரும் "மார்க்சிஸ்ட் மாவீரர்களை" விட்டுவிட்டீர்களே.?

ஜெரி ஈசானந்தா. said...

// ஒரு சமூகம் அரசியல் ரீதியாக பண்படாமல் இருந்தால் ஒரு கொரில்லா இயக்கம் ஒரு நாள் கூட அங்கே உயிர்த்திருக்க முடியாது.//
கருத்து ச்செறிவு நிறைந்த வரிகள்.

ஜெரி ஈசானந்தா. said...

/பிரபாகரனிடம் பயிற்சி எடுப்பதால் ஒருவர் தீவிர அரசியல் மன நிலைக்கு வந்து விடுவதில்லை. இலங்கையில் தமிழர்களாகப் பிறந்து சிங்களப் பேரினவாதத்திற்கு ஆட்பட்டோர்கள் தலைவர் பிரபாகரன் இல்லாவிட்டாலும் தீவிர மனநிலையை இழப்பது இல்லை.//
absolutely right.its a passion,not a manner.

Ambedhan said...

யோகா,
சி.பி.எம் தரப்பிலுள்ள நண்பர்கள் இக்கட்டுரைகளை வெறும் 'கட்சிக்கெதிரான பரப்புரை' என்ற அளவில் கருதிக்கொண்டு புறக்கணித்துவிடுவார்கள் எனக் கருதுகிறேன்.
ஏற்கனவே தமிழ்ச்செல்வன் இதே மாதிரி வாதத்தை முடித்துக்கொள்வோம் நன்றி என்கிற ரீதியில் பின்னூட்டம் எழுதியதைக் கவனிக்க.
ஈழத்தில் 80000 பேர் மாண்டுபோனது இநதிய அரசை எப்படி எள்ளளவும் அசைக்கவில்லையோ அதேபோல இவர்களையும் அசைக்கவில்லை. தங்களது 'நிலைப்பாட்டை' விளக்குவதில் மட்டுமே தோழர்கள் குறியாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஈழத்தில் ஒவ்வொரு நாளும் மக்கள் இறப்பது பற்றித் தகவல்கள் வந்து மக்கள் எல்லோரும் பதறிய வேளையில் இவர்கள் என்ன செய்திருக்கவேண்டும்.. ? விரைந்து ஏதாவது செய்திருக்காமல் பொலிட்பீரோவின் அறிக்கையை மட்டும் எதிர்பார்த்தார்கள். பொலிட்பீரோவிற்கோ ஏகாதிபத்திய எதிர்ப்பு மட்டுமே முக்கியம் என்பதால் இம்மாதிரிப் படுகொலைகளுக்கெதிராக உடனே தீவிரமாகப் போராடவேண்டியதில்லை என்று முடிவு செய்துகொண்டார்கள். கலைஞர் கடிதம் எழுதி வலியுறுத்தினார். இவர்கள் அறிக்கைகள் விட்டு வலியுறுத்தினார்கள். அவ்வளவே.
சி.பி.எம்மின் நிலைப்பாடுகள் பற்றிய அலசல்களும், விவாதங்களும் ஒருவேளை இவர்களின் கவனத்தை கலைக்கலாம். வேறு எதற்கும் நம் தோழர்கள் அசையப்போவதில்லை. சி.பி.எம்மின் தோழர் யாராவது உணர்ச்சிவசப்பட்டால் அவர் தோழராக இருக்கத் தகுதியில்லாதவராக கருதப்படுவாரோ என்னவோ.

Post a Comment