Sunday, September 20, 2009

உன்னைப் போல் ஒருவன் - ஏமாற்றமே!


இந்தப் படத்திற்குப் பின்னும் கமல் எனக்கு திரையுலகின் குருதான்.

இந்தப் படத்திற்குப் பின்னும் கமல் திரைக்கதை என்னும் கலை வடிவத்தின் வாத்தியார் தான்.

ஆனால் உன்னைப் போல் ஒருவன் ஒரு திரைப்படமாக கமல்ஜிக்கே தோல்வியடைந்த படமே.வர்த்த க ரீதியில் இந்தப் படம் வெற்றிப் பெற்றாலும் கூட.

தசாவரம் வரை அவர் அடைந்திருந்த கலைநுட்ப தேர்ச்சிகள் சிலவற்றை இந்தப் படத்தில் அவர் இழந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

இவைகளுக்கெல்லாம் காரணமாக அந்தப் படத்தின் இயக்குனரும் இருக்க முடியும் என்றாலும் இது போன்ற படத்தில் கமல்தான் காரணமாகிறார்.

இந்தப் படத்தின் முதல் தோல்வி காஸ்டிங் எனப்படும் நடிகர்கள் தேர்வில் துவங்குகிறது.

மிக முக்கியமாக திரு கமல் அவர்கள் இந்தக் கதையின் முக்கியக் கதாபாத்திரமான அந்தப் பொது மனிதன் கதாபாத்திற்குப் பொருத்தமானவராக இல்லை. அவர் தனிப்பட்ட முறையில் செழுமையும் பணக்காரத்தன்மையும் கொண்டவர். ஆனால் இதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தான் மேற்கொள்ளும் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் தன் தோற்றத்தை மாற்றிக் கொள்வார். இந்தப் படத்தில் அவர் அந்தக் காரியத்தையும் செய்யவில்லை. விளைவு ‘ என்னை நீங்கள் எல்லா இடங்களிலும் பார்த்திருப்பீர்கள் கமிஷனர் , ரேஷன் கடையில் புழுத்துப் போன அரிசியை வாங்குவதற்காக வரிசையில் கடைசியாக நிற்கும் பொது மனிதன் நான் என்று கமல்ஜி சொல்லும் போது அது பொருத்தமில்லாமல் இருக்கிறது. எனக்கென்னவோ சாருஹாசனைப் போன்ற ஒருவரே தமிழில் இந்தக் கதைக்குப் பொருததமானவர் என்று நினைக்கிறேன். கமல் மோகன்லால் செய்த கமிஷனர் கதாபாத்திரத்தை செய்திருக்கலாம்.

நஷ்ருதின் ஷா இடத்தில் கமலை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று சிலர் எழுதுகிறார்கள். அது உண்மைதான். அதற்கு அர்த்தம் நஷ்ருதின் ஷா தான் பெரிய நடிகர் என்பதல்ல. நஷ்ருதின் ஷா அவரளவில் பெரிய நடிகர். கமல் அவரளவில் பெரிய நடிகர். எப்படி குணா படத்தில் நஷ்ருதின் ஷா நடித்திருந்தால் அது பொருத்தமில்லாமல் இருந்திருக்குமோ அது போலத்தான் இதுவும்.

இரண்டாவதாக கமல் அந்தக் கதாபாத்திரத்தின் மேல் ஏற்றி வைத்திருக்கும் அறிவு அளவுக்கதிகமான அறிவு. அது ஒரு பொதுமனிதனுக்கான அறிவு அல்ல. சர்வதேசம் , உலக ஒழுங்கு , அதற்குப்பின்னால் இயங்குகிற அரசியல் இவைகளையெல்லாம் அந்தக்கதாபாத்திரம் பேசுவது அவர் ஏதோ சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையின் பேராசிரியர் என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. அவர் பேசுகிற ஆங்கில உச்சரிப்பு அந்த இடத்தில் அந்தக் கதாபாத்திரத்தை காலி செய்து விட்டு கமலைக் கொண்டு வந்து உட்கார வைத்து விடுகிறது.

இரண்டாவது தவறான நபர் மோகன்லால்.

மோகன்லால் தலையில் பேட்ச் செய்த முடியுடன் நடித்திருக்கிறார். ஒரு வெறும் வர்த்தக சினிமாவிற்கு இதுபோல் பேட்ச் முடி , விக் போன்றவைகள் சரியாக இருக்கும். இது உள்ளே ஒரு நேர்மை இருக்க வேண்டிய திரைப்படும். மோகன்லாலின் பாட்ச்சும் அவருடைய மலயாள உச்சரிப்புடனான செயற்கையான தமிழ்பேச்சும் அந்தக் கதாபாத்திரத்தின் கம்பீரத்தை ஒழித்து விட்டது என்பேன்.

ராம்கோபால் வர்மாவின் கம்பெனியில் இதே போல் ஒரு கமிஷனராக வந்து நடிப்பின் உச்சத்தை த் தொட்டவர் மோகன்லால் என்பதை நான் மறக்கவில்லை.

இந்தப் படத்தில் அவரிடம் அப்படி ஒரு சிறப்பான நடிப்பைப் பெற இயக்குனர் தவறி விட்டார் என்பதே என் எண்ணம்.

இதில் லஷ்மி வேறு. அவர் ஒரு விக்கோடு கதையில் ஏன் வருகிறார் என்றே தெரியாமல் வருகிறார். ஒரு அறிவற்ற கதாபாத்திரமாக வருகிறார். நிஜத்தில் அவர்கள் இவ்வளவு அறிவற்றவர்கள் இல்லை. இது அபத்தமான கதாபாத்திர வடிவமைப்பு.

மிகவும் வருத்த த்தை உண்டாக்கிய தேர்வாக தீவிரவாதிளில் சந்தான பாரதியையும் , அந்த வீரப்பன் நடிகரையும் போட்டு இதை ஒரு காமெடிப்படமாக்கியதை சொல்ல வேண்டும்.

இவைகள் தவிர படத்தில் ஆங்காங்கே சிவாஜி , எம். எஸ் . பாஸ்கர் போன்ற வழக்கமான அவருடைய கம்பெனியின் காமெடி நடிகர்களை நடிக்க வைத்த தையும் தவறு என்றே சொல்ல வேண்டும்.

பிரதான கதாபாத்திரங்களைத் தவிர மற்றவர்களை புதியவர்களாக தேர்வு செய்திருந்தால் wednesday ‘யில் இருந்த நேர்மை தமிழுக்கு வந்திருக்கும்.

அந்த இரண்டு அதிகாரிகளான பரத் ரெட்டி, கணேஷ் வெங்கட்ராமன் சரியான தேர்வு.

இந்தப் படத்தின் அடுத்தப் பிறள்வு , மூலக் கதையில் அங்காங்கே சில மாற்றங்களைச் செய்ததில் ஏற்பட்டிருக்கிறது.

அதிலும் முக்கியமாக அந்த நான்கு தீவிரவாதிகளில் ஒருவன் தான் ஏன் தீவிரவாதியானேன் என்று விளக்கம் சொல்வான். குஜராத்தில் மதக்கலவரத்தில் தன் குடும்பத்தினரை ஒரு பேக்கரியில் வைத்து வேக வைத்து விட்டார்கள் என்பான். அப்படிப்பார்த்தால் அவன் ஒரு நல்லவனே..அவனைப் பழி வாங்க கமல் எதற்கு இத்தனை மெனக்கெட வேண்டும்.. ஒரு பிஜேபி காரன்தான் அவனை பழிவாங்க வேண்டும் என்று ஆசைப் படுவான். ஆனால் மூலக்கதையில் அதாவது வெட்னஸ்டேயில் , அவர்கள் நால்வரும் குரூரமான தீவிரவாதிகளாக இருப்பார்கள். அவர்களுக்கு யாருடைய மரணமும் கவலையில்லை. அவர்களை நஷ்ருதீன் ஷா வரவழைத்துக் கொள்ளும் போது நஷ்ருதின் ஷா ஒரு ஹீரோவாக்த தெரிவார். இதில் கமல் குழப்பமானவராகத் தெரிகிறார்.

இந்தக் படத்தின் முக்கியமான பிறள்வு கதையில் கமல் பேசும் அரசியல் வசனங்கள்.

கமல்ஜி அரசியலற்ற படம் எடுக்கும் போது மிக அழகாக நேர்த்தியாக ஜ்வலிக்கும் விதமாக எடுத்து விடுகிறார். ஆனால் அரசியல் சார்ந்த படம் எடுக்கும் பொழுது அதில் நிறைய குழப்பம் ஏற்பட்டு விடுகிறது.

இதற்கு முக்கியக் காரணம் கமல்ஜிக்கு போதிய தத்துவ வாசிப்பும் அதனடிப்படையில் சிந்திக்கும் பயிற்ச்சியும் இல்லாத தே.

கிராமத்தில் சில நல்ல பெரிய மனிதர்கள் இருப்பார்கள். யாராவது பெற்ற தாய் தந்தைக்கு சாப்பாடு போடாமல் துரத்தி விட்டால் அவனை கூப்பிட்டு அவனுக்கு அறிவுரை சொல்லி பெற்றோரை வைத்து காப்ப்பாற்றச் சொல்வார்கள்.

அதே நபர், அந்த ஊரில் ஒரு விதவைப் பெண் யாரோ ஒருவருடன் சின்ன தொடர்பில் இருப்பாள். அவளை பஞ்சாயத்திற்கு வரவைத்து அவளுடைய குடுமியை அறுத்து அவள் தலையில் சாணியை கரைத்து ஊற்றி செருப்பால் அடித்து ஊரை விட்டு வெளியேற்றுவார்..

அவர் நல்லவரா கெட்டவரா என்று நமக்கு குழப்பம் ஏற்படும்.

அதே விஷயம்தான் கமல்ஜி விஷயத்திலும் நடக்கிறது.

அவர் அரசியல் படங்களில் பேசும் சில வசனங்கள் இந்த நாட்டின் இடது சாரிகளும் , முற்போக்காளர்களும் , சிந்தனையாளர்களும் இவரல்லவோ நமது கலைஞர் என்று பெருமைப்படும்படி இருக்கும்..

அதே படங்களில் சில வசனங்கள் அதே முற்போக்காளர்களும் சிந்தனையாளர்களும் இடதுசாரிகளும் தலை குனிந்து நெளியும் அளவிற்கு இருக்கும். இந்தப் படத்தில் அப்படி நெளியும் வசனங்கள் நிறைய.

தீவிரவாத த்திற்கு தீவிரவாதம்தான் பதில் என்கிறார்.( அப்படிப் பார்த்தால் கமல் கதாபாத்திரத்தையும்¢ யாரேனும் வெடிகுண்டு வைத்து சிதறச்செய்யலாம்) இது அவருடைய முந்தைய படங்களில் அவர் சொல்லி வந்து செய்திகளிலிருந்தே முரண்பட்டது.

எனக்கு இடதுக்கும்¢ வலதுக்கும் பேதமில்லை என்கிறார்.

இந்த வசனத்தை அஜித்தோ விஜய்யோ சொன்னால் அவர்கள் கைகளைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று ஒருவர் புரிந்து கொள்ள முடியும் . ஆனால் கமல் பேசும்போது அவர் அரசியலைப் பற்றித்தான் பேசுகிறார் என்று தான் அர்த்தம். அரசியலில் ஒருவர் எனக்கு இடதிற்கும் வலதிற்கும் பேதமில்லை என்பது அவருடைய குதர்க்கமான மனநிலையையே காட்டும்.

மூன்றாவதாக தமிழர்கள் வடநாட்டில் நடக்கிற குண்டு வெடிப்புகளைப் பற்றி கவலையில்லாமல் கன்னியாகுமரியில் கால் ஊன்றி அமைதிப் பூங்காவாக நிற்கிறார்கள்.அந்த குண்டு வெடிப்பைப் பற்றி இங்கே தொலைக்காட்சிகள் காட்டுவதில்லை.. என்பது போல வருகிறது.

இந்த வசனம் இன்றைய அரசியல் சூழலில் மிகவும் விஷம் தோய்ந்த வசனம்.

ஈழம் பற்றி எரிகிறது.. அங்கே சொல்ல ஒண்ணாத் துயரம் நிரம்பி வழிகிறது.. அது குறித்து வடநாட்டில் பத்திரிக்கைகளில் தொலைக்காட்சிகளில் ஒரு செய்தி கூட வருவதில்லை என்று தமிழ் சிந்தனையாளர்கள் எல்லாம் கொதித்துக் கொண்டிருக்கிற சமயத்தில.. இங்கே சுடப்படும் மீனவர்களுக்காக கூட அங்கே ஒரு குரல் எழுவதில்லை என்று நாம் கவலைப்படும் சமயத்தில் அதை திசை திருப்பும் விதமாக கமல் இப்படி பேசுவது தமிழ் சமூகத்திற்கு அவர் செய்யும் துரோகம்.

இது போன்ற அபத்த வசனங்கள் எதுவும் மூலப்படமான வெட்னஸ்டேயில் இல்லை. தீவிரவாத த்தின் மீதான ஒரு சாமன்யனின் கோபம் மட்டுமே பதிவாகியிருக்கும். கமல் ஏன் அந்த மூலக்கதையில் விஷம் தோய்த்து எடுத்தார் என்பது புரியவில்லை.

இத்தனைக்கும் அவருடன் தொ.ம.பரமசிவம் போன்ற சில சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள்.அவர்கள் இந்தத் திரைக் கதையை வாசித்தார்களா கமலுக்கு எதுவும் சொன்னார்களா என்று தெரியவில்ல. ஏனென்றால் இங்கு பல எழுத்தாளர்கள் பிரபலங்களைப் பார்த்த உடன் அவர்களை வெறுமனே வியக்கிறவர்களாகவும் அவர்களுக்கு ஜால்ரா போடுகிறவர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.

வசனமும் பல இடங்களில் சவசவவென்றிருக்கிறது. ஒரு வரியாக இரண்டு வரியாக இருக்க வேண்டிய வசனங்கள் வளவளவென்றிருந்து படத்தின் க்ரிஸ்ப்பை காலி செய்கிறது.

இதற்காக நான் வசனகர்த்தா இரா.முருகனை குறை சொல்ல மாட்டேன். அவரைப் பாராட்டவும் மாட்டேன். தமிழில் இது போல் எழுத்தாளர்கள் வசனகர்த்தாக்களாக வரும்போது அவர்கள் என்னதான் செய்கிறவர்களாக இங்கே இருக்கிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன்..

மொத்த த்தில் உன்னைப்போல் ஒருவன் உருவாக்கத்தில், வசனத்தில் , நடிப்பில் , மூலப்படமான வெட்னஸ்டேயிடம் தோல்வி யடைந்த படம்.

4 comments:

ச.தமிழ்ச்செல்வன் said...

அன்புமிக்க யோகராஜ் .மிக்க மகிழ்ச்சி.உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு நேர்மையாகவும் கூர்மையாகவும் ஒரு விமர்சனத்தை வைத்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.தொடர்ந்து வாசிப்பேன்.

மிக்க அன்புடன்
ச.தமிழ்ச்செல்வன்

kamaraj said...

இந்த விமர்சனம் நுணுக்கமானதாகவும், துறைசார்ந்த மனிதர்களின் ஒளிவு மறைவற்ற சுட்டுதலாகவும் இருக்கிறது.
கமல் உண்மையில் நிறைய்யக் குழப்பங்கள் மிகுந்தவர் என்பதை அவரது பல படங்களில் வரும் வசனங்கள் நிருபிக்கும்.
இரண்டு படங்களையும் பார்க்கத்தூண்டுகிற அசத்தல் பதிவு.

venki said...

hi,

ஈழம் பற்றி எரிகிறது.. அங்கே சொல்ல ஒண்ணாத் துயரம் நிரம்பி வழிகிறது.. அது குறித்து வடநாட்டில் பத்திரிக்கைகளில் தொலைக்காட்சிகளில் ஒரு செய்தி கூட வருவதில்லை என்று தமிழ் சிந்தனையாளர்கள் எல்லாம் கொதித்துக் கொண்டிருக்கிற சமயத்தில.. இங்கே சுடப்படும் மீனவர்களுக்காக கூட அங்கே ஒரு குரல் எழுவதில்லை என்று நாம் கவலைப்படும் சமயத்தில் அதை திசை திருப்பும் விதமாக கமல் இப்படி பேசுவது தமிழ் சமூகத்திற்கு அவர் செய்யும் துரோகம்.

ithai thavira vera ellam unmai pola illai..its a gud tamil film..dont compare with original movie..if u compare then we will find lot of mistakes in all remakes film..so we welcome these kind of gud movies...

Unknown said...

அருமையான பதிவு

Post a Comment