Tuesday, September 22, 2009

ஈழம்-என்ன செய்ய வேண்டும்? ஆலோசனைகள் வரத்துவங்கி விட்டன!

ஈழத்தமிழர்களுக்காக வருந்துகிற, கண்ணீர், விடுகிற பதறுகிற, எதுவும் செய்யத் தயாராக இருக்கிற சில கோடி பேர்கள் உலகெங்கிலும் இருக்கவே செய்கிறார்கள்.

யாரோ ஒரு மனிதன் அல்லது ஒரு தேவ தூதன் இங்கே நின்று ஈழத்தமிழர்களை விடுவிக்கும் , அவர்களின் இன்னலைப் போக்கும் ஒரு ஆலோசனையைச் சொன்னால் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நின்று அந்த ஆலோசனையை செயல் படுத்தி அந்த மக்களை உடனடியாக விடுவிக்க விருப்பமாகவே இருக்கிறார்கள்.

ஆனால் இப்போது பிரச்சனை யார் அந்த மனிதன் அல்லது தேவதூதன் என்பதும் எது அந்த ஆலோசனை என்பதும் தான்.

யார் அந்த மனிதன் என்பதற்கு நம்மிடம் பதில் இல்லை.

அப்படி ஒரு மனிதன் வெளிப்படுவதும் சமீபத்தில் சாத்தியமில்லை .

ஆனால் எது அந்த ஆலோசனை என்பதை யோசிப்பதற்கும் அதை சொல்வதற்கும் சாத்தியமற்றுப் போய் விட்டது என்று நான் நினைக்கவில்லை.

ஈழத்தமிழர்களுக்காக நடக்கிற பல கூட்டங்களுக்கும் நான் செல்கிறேன்.
அந்தக் கூட்டங்களில் எல்லாம் நான் பொதுவாக சந்திக்கிற கேள்வியும் இன்று எல்லோருக்கும் இருக்கிற கேள்வியும் ‘’ யார் என்ன செய்ய வேண்டும்?’’ என்பதாகவே இருக்கிறது.

இதில் முக்கியமான இன்னொரு விஷயம். அப்படிக் கூட்டங்களுக்கு வருகிற ஒவ்வொருவரும் ஆளுக்கு சில ஆலோசனைகளுடன் வருகிறார்கள் என்பதே.

அவர்களின் பலருடைய ஆலோசனைகள் பரவசப் படுத்துவதை நான் உணர்ந்திருக்கிறேன்.

இன்று ஈழ மக்களுக்காக வருந்துகிற எல்லோரிடமும் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான சில அல்லது பல பதில்கள் இருப்பதை நான் பார்க்கிறேன்.

இன்று இந்த சமயத்தில் நான் செய்ய விரும்புவது அப்படியான ஆலோசனைகளை எல்லாம் ஓரிடத்தில் ஒன்று சேர்ப்பதும் அதை ஈழ உணர்வாளர்கள் எல்லோரையும் பார்க்கும் படி வைப்பதும் தான்.

எந்த சிறு பொறி பெரு நெருப்பாகி ஈழத்தில் நடக்கிற அநீதியை அழிக்கும் என்பதை யாரும் யூகிக்க முடியாது.

அந்த சிறு பொறி யாரிடமிருந்து வரலாம்.
உங்களிடமிருந்தும் வரலாம்.

எனவே ஈழ உணர்வாளர்களே !

இன்று யார் என்ன செய்ய வேண்டும் ?

ஆட்டுத் தொட்டிக்குள் சிக்கிய ஆடுகளென மூன்று லட்சம் மக்கள் முள்வேளி முகாம்களுக்குள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இலங்கையின் மற்ற பகுதிகளில் வாழ்கிற தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

ராஜபக்ஷேயின் குரூரம் புரிந்த , தமிழர்களின் நிலை குறித்து அக்கறை கொண்ட சிங்களர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என்ன செய்ய வேண்டும்?

தற்சமயம் மௌனித்திருக்கும் விடுதலைப்புலிகள் என்ன செய்ய வேண்டும்?

தமிழ் கட்சி கூட்டமைப்பினர் என்ன செய்ய வேண்டும்?

இலங்கையின் எதிர்க்கட்சிகளும் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கட்சியினரும் என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் இருக்கிற அரசியல் கட்சிகள் மற்றும் ஈழ உணர்வாளர்களின் செயல்பாடுகள் என்னவாக இருக்க வேண்டும்?

இந்தியாவின் இரண்டு பெறும் எதிர்க்கட்சிகளாக இருக்கிற இடதுசாரிகளும் பிஜேபி கட்சியனரும் என்ன செய்ய வேண்டும்?

உலகம் முழுவதும் இருக்கிற புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

நாடுகடந்த அரசு என்ன செய்ய வேண்டும் அல்லது நாடு கடந்த அரசுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

இவர்கள் தான் ஈழத்தமிழர்களை காப்பாற்ற முடிந்த சக்திகள் என்பது என் எண்ணம். இவர்களைத் தாண்டியும் யாரேனும் இருக்கலாம். அல்லது இவர்களில் யாரேனும் இல்லாமலும் இருக்கலாம்.

இவர்கள் எல்லோருமே ஈழத்தமிழர்களுக்காக உண்மையில் கண்ணீர் சிந்துகிறவர்களாக இருக்கிறார்கள்.என்ன செய்வது என்பது குறித்து தெளிவான முடிவுக்கு வரமுடியாமல் ஆளுக்கு ஒன்றாக ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே உங்களுடைய சிந்தனைகளை முன் வையுங்கள்.

எங்கே முன் வைக்கலாம் என்ற கேள்வி வரலாம்.யாரும் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. யாரும் யாரையும் நம்ப வேண்டியதும் இல்லை.இன்று எல்லோரும் பிளாக் வைத்துக் கொள்ளலாம். அல்லது நம் நண்பர்கள் பிளாக் வைத்திருக்கிறார்கள். அந்த பிளாக்கில் பதிவு செய்யுங்கள். அதை தமிழ் மணத்தில் அளித்தால் தமிழ் மணம் உலகத்தின் முன் அதை வைக்கும்.

இன்று ஈழ உணர்வாளர்கள் உலாவுகிற இடமாக தமிழ்மணம் இருக்கிறது அதை நாம் நம் ஆக்கபூர்வமான யோசனைகளை பதிவு செய்ய பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தலைப்பு மட்டும் ஈழம்-என்ன செய்ய வேண்டும்? என்ற பொதுவான தலைப்பாக இருக்க வேண்டும். அதன் மூலமே தமிழ் மனத்தில் அந்த சிந்தனையை மற்றவர் தேடிப் படிக்க முடியும்.

முடிந்தால் ஒரு பொறியை அல்லது பல பொறிகளை ஒன்றிணைத்து ஒரு பெரும் நெருப்பை உண்டாக்குவோம்.
ஈழத்தில் நடக்கும் ஆநீதியை பொசுக்குவோம்.

யார் வேண்டுமானாலும் ஆலோசனை வழங்குவதில் கலந்து கொள்ளலாம்.

குறைந்த பட்ச நிபந்தனையாக ஒரு நிபந்தனை மட்டும் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஈழத்தமிழர்கள் பெரும் அவலத்தில் இருக்கிறார்கள் என்ற ஒரு பொது உண்மையை மட்டும் அவர்கள் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

இதை ஒரு சுற்ற றிக்கையென கருதி தங்களுடைய நண்பர்கள் சிந்தனையாளர்கள் எல்லோருக்கும் அனுப்பி வையுங்கள்.

அவர்களிடம் தொடர்ந்து பேசி அவர்களுடைய சிந்தனைகளை பதிவு செய்ய வையுங்கள். ஒரு பெரும் உரையாடல் வெளியை உண்டாக்குவோம்.

இன்று ஈழம் உங்கள் கையில் என்ற தீவிரம் கொள்ளுங்கள். உங்கள் சிந்தனை ஈழமக்களை விடுவிக்கும் என்று நம்புங்கள்.

விடிவு பிறக்கும்.

2 comments:

தமிழ்நதி said...

உங்கள் கட்டுரை படித்தேன் யோகராஜ். உங்கள் தனிப்பட்ட வாழ்வை மட்டும் கருத்திலெடுக்காது சமூக அக்கறையோடு சிந்திப்பது மகிழ்ச்சி தருகிறது. நான் உங்களுக்குத் தனிமடலிடுகிறேன்.

ச.தமிழ்ச்செல்வன் said...

அன்புள்ள யோகராஜ் ஈழத்தமிழர் மீதான அக்கறையற்ற பிராணிகள் என்று நீங்கள் கருதும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எனக்கும் கூட இமெயில் அனுப்பிக் கருத்துக்க்கேட்ட உங்க நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.இப்போ இதெல்லாம் பேச வேண்டியதில்லை.பருவமழை துவங்கும் முன்னால் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் குடியிருப்புகளுக்கு அனுப்பப் படவேண்டும் என்கிற ஒரே கோரிக்கையை வைத்து தமிழகத்தில் எல்லாக் கட்சியினரும் பொதுமக்களும் வலுவான இயக்கம் நடத்த வேண்டும்.உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ சிபிஎம் மட்டும்தான் இன்று இக்கோரிக்கையை வைத்துப் போராட்டங்களைத் துவக்கியுள்ளது .கூட்டு இயக்கம் இந்த ஒரு கோரிக்கையை வைத்து துவங்குவது அவசரமான தேவை என்பது மட்டுமே இப்போதைக்கு என் ஆலோசனையாக உள்ளது.

Post a Comment